28 January 2021

தைப்பூசம்

 இன்று தைப்பூசம் நன்னாள்....

வயலூர் முருகன் 



முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம்,

 அறுவரும் ஒருவர் ஆன நாள்  கார்த்திகையில் கார்த்திகை,

அன்னையிடம் வேல் வாங்கிய நாள்  தைப்பூசம்,

அசுரரை அழித்தாட்கொண்ட நாள் ஐப்பசியில் சஷ்டி,

வள்ளியைத் திருமணம் புரிந்த நாள்  பங்குனி உத்திரம்...

இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் வேல் ஏந்திய நாளே  தைப்பூசம்!




சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர். இதனால் தேவர்கள் அவர்களுக்கு அஞ்சி மறைந்து வாழும் நிலை உண்டானது. தங்களது இக்கட்டான சூழலை மகாதேவரிடம் தெரிவித்த தேவர்கள், தங்களை எப்படியாவது அசுரர்களிடம் இருந்து காக்கும்படி வேண்டினர்.

அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீ பிழம்புகளை உருவாக்கினார். அந்த ஆறு தீப்பிழம்புகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். கார்த்திகை பெண்கள் அந்த ஆறு குழந்தைகளுக்கும் போர் கலை பயற்சி அளித்தனர்.

பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் ஆறு புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைத்து ஒருவராக மாறினர். ஆறு குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் ஒருங்கிணைத்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார்.





அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுகாலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அப்படி அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும். அந்த ஞானவேல் கொண்டே கந்தன் அசுரவாதம் புரிந்து தேவர்களை காத்தருளினார். அந்த அசுரவாதம் நடந்த இடம் தான் திருச்செந்தூர். பழனி முருகன் ஞானவேலை பெற்றதால் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும் தைப்பூச விழாவானது பழனி முருகன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.











சிக்கல் - முருகன் 


முருகப் பெருமானின் திருக்கை  வேலின் புகழ் கூறுவதை அடிப்படையாக வைத்து அருணகிரிநாதர் பாடியது வேல் விருத்தம் ஆகும். இது விநாயகர் காப்பு ஒன்றும், 11 ஆசிரிய விருத்தங்களும்  கொண்டமைந்தது. இது பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள் 10 கொண்டு அமைக்கப்பட்டது. 


வேல் விருத்தம் - அருணகிரிநாதர் 
வேல் விருத்தம் - 1 



மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே

வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்

சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
செனெல்களொடு தரளம் இடவே

ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
திடர் அடைய ஞுகரும் வடிவேல்

தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறுன்

தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்

குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
குயமொடமர் புரியு முருகன்

குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே

(குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)



பெரிய சுறா மீன்கள் சேற்றில் புரளவும், ஆதிஷேசனின் கூட்டமான ஆயிரம் முடிகளின் மேல், சந்திர ஒளியும் சூரிய ஒளியும் சேர்ந்து தாக்கவும் பெரிதாக பரந்திருக்கும் மேகங்களின் உட் பாகம் சுழற்சி அடையவும், தேவர்களின் துன்பம் நீங்கவும், களிப்படைந்த, 

சிறகுகள் அறுக்கப் பட்ட, மலைகளின் சிகரங்களிலும், வீடுகளிலும், முச்சந்திகளிலும், 

மலை ஜாதிப் பெண்கள், செழுமையான நெல் தானியங்களுடன் முத்துக்களையும் உரலில் இட்டு குற்றவும், 

இந்த உலகில் முதன்மை ஸ்தானம் வகிக்கும் கங்கை முதலாகிய மற்ற நதிகள் பழைய படி தங்களுடைய ஓட்டத்தை ஆரம்பிக்கவும், 

சமுத்திரம் வற்றி மண் திடலாக போகும் படி, அந்த ஜலத்தை எல்லாம் உறிஞ்சிய, 

கூரிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) வாசனைச் சாந்து, கஸ்தூரி (இவைகளின்) வாசனை கொண்டு நறு மணம் வீசும், ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும் மதநீர் தோன்றும், கபோலமும், 

உறுதியான திண்மை பொருந்திய (பற்கள்) தந்தமும், தழைந்துள்ள இரண்டு காதுகளும், நெற்றிக் கண்ணும், கொண்டு விளங்கும் ஒப்பற்ற விநாயகப் பெருமான், மகிழ்கின்ற சகோதரனும், தேவர்களால் வளர்க்கப்பட்ட குயில் போன்ற இனிய குரலுடைய தேவசேனை, குகைகள் நிறைந்துள்ள மலையின் வசிக்கின்ற, வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய மயில் போன்ற வள்ளிப் பிராட்டி, என்கிற இரு நாயகிகளின், மார்பகங்களை அணைக்கும், முருகப் பெருமான், 

பால சுப்ரமணியன், சண்முகன்ஆகிய முருகப் பெருமானை, எதிர்த்து, பல வெற்றிச் சின்னங்களுடன் வந்த, அரக்கர்களின், சேனைகளை, சிதறிப் போகும் படி செய்த, வீரம் மிகுந்த வேலே தான் அது.









முருகா சரணம் .......


அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. நல்ல பகிர்வு...
    அழகன் முருகனின் படங்கள் இன்னும் அழகாய்.

    ReplyDelete
  2. கந்தவேல் முருகனுக்கு அரோகரா..
    கதிர்வேல் முருகனுக்கு அரோகரா!..

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    நலமா? அருமையான பதிவு. அழகான முருகனை காண கண் கோடி வேண்டும். எண்ணமெல்லாம் மணக்கும் என்னப்பன் முருகப் பெருமானை கண்குளிர தரிசனம் செய்து கொண்டேன். அழகான படங்களுடன் அமுதமென சொற்களை இணைத்து நல்ல பக்திப் பகிர்வாக தந்திருக்கிறீர்கள். முருகனின் அருள் என்றும் தங்களுக்கு உண்டு.

    மதியம் இங்கு வந்தேன். இணையம் சரிவர என் வருகைக்கு ஒத்துழைக்கவில்லை. இப்போது முருகனின் அருளால் நன்கு வருகிறது. பல சமயம் அப்படி.. சில சமயம் இப்படி. அவனை கண்குளிர காணவும் அவனருள் பூரணமாக கிடைக்க வேண்டுமில்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. தைப்பூச இடுகை மிக அருமையா வந்திருக்கு.

    அருணகிரிநாதரின் வேல் விருத்தமா? இரண்டு வரி வாசிப்பதற்குள் பல் உடைந்துவிடும் போலிருக்கிறதே... இதன் அர்த்தத்தைத் தேடணும் என்ற ஆசையைத் தூண்டிவிட்டீர்கள்.

    ReplyDelete