03 April 2020

ராம ராம ராம ராம !! - வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் தரிசனம்

வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர்  தரிசனம் 
ராம ராம ராம ராம !!  







இராமரை விட இராம நாமம் உயர்வானது.......!!!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே!
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே!
இம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்!!

இராமச்சந்திர மூர்த்தியால் முடியாததை கூட தேனினும் இனிய ராம நாமம் முடித்து தரும். ஆகவே அவரது நாமமே உயர்ந்தது என்பதே பொதுவான  கருத்து.

சேது பந்தனம் வேலை துரிதமாக நடந்துக் கொண்டு இருந்தது. வானரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நின்று கல்லை வாங்கி மற்றவரிடம் கொடுக்க அந்தக் கல், கடல் நீரின் அருகே வரும்போது அது எப்படித்தான் அது விழும் இடத்திற்கு வந்து, அழகாக பொருந்த வேண்டிய இடத்தில் பொருந்துகின்றதே என்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

நிமிடத்தில் விறுவிறுவென சேது அணை கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படியே வேலை செய்தால் இன்னும் ஐந்தே நாட்களில் அனணயை கட்டி முடித்து விடலாம் என்றனர்.

சீதையைப் பிரிந்து பதினோரு மாதங்கள் ஆகிவிட்டன.

இந்த சேது பாலம் கடலின் இரு கரைகளையுமா இணைக்கப் போகிறது? பிரிந்து இருக்கும் ராமரையும் சீதையும் அல்லவா இது சேர்க்கப் போகிறது.


அன்பே சீதா! நீ இலங்கையில் என்ன துன்பப்படுகிறாயோ! உன்னை அரக்கிகள் எவ்விதமெல்லாம் அச்சுறுத்துகிறார்களோ இந்த நினைவு வந்ததும் இராமபிரான் கண்களில் கண்ணீர் தளும்பியது.

அருகே நின்ற லட்சுமணன் அண்ணன் இராமபிரானை கனிவோடு பார்த்தான். அண்ணா இந்த பாலம் வெகுவேகமாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.








மிக விரைவில் வானரங்கள் இதை கட்டி முடித்து விடுவார்கள். அப்படி இருக்க கண் கலங்கலாமா!

ராமர் விழிநீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு, அது இல்லை லட்சுமணா நாம் இங்கே இத்தனை நண்பர்களுடன் இருக்கிறோம்.

நமக்கு உதவ அனுமன், சுக்ரீவன் ஜாம்பவான் இத்தனை பேர் இருக்க எனக்கு ஆறுதல் சொல்ல என் தம்பி நீயிருக்கிறாய்.

ஆனால் சீதை எதிரிகளின் ராஜ்ஜியத்தில் அல்லவா இருக்கிறாள். அவளை தேற்ற யாரும் அங்கே இல்லையே அரக்கிகள் தான் மிரட்டிக் கொண்டிருப்பார்கள்.

போதாக்குறைக்கு அந்த பாவி ராவணன் வேறு வந்து அச்சுறுத்திக் கொண்டிருப்பான். சீதை என்ன பாடுபடுகிறாளோ என்பதைத்தான் நினைத்தால் தண்ணீர் தானாக கண்களில் கொட்டுகிறது என்றார். லட்சுமணன் ஆறுதலோடு பார்த்தான்.

ராமன் மெல்ல சகஜ நிலைக்கு திரும்பினார்.

ஆம் லட்சுமணா! இந்த வானரங்கள் செய்யும் வேலை அதிசியமாக அல்லவா இருக்கிறது. என்ன வேகம்! என்ன சுறுசுறுப்பு! ஏததோ மந்திரத்தால் நடப்பதுபோல் அல்லவா இருக்கிறது.

இவர்கள் வேலை செய்யும் நேர்த்தியும் வேகமும் ராமரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்தான், ஆஞ்சநேயன்.





ராமர் சொன்னது சரிதான் மந்திரத்தால் தான் வேலை நடக்கிறது என்று அனுமன் நினைத்துக் கொண்டான்.

என்ன அழகாக வேலை செய்கிறீர்கள் எல்லோரும் என்ன ஒழுங்கு! என்ன கச்சிதம்!

எல்லோரும் ஒவ்வொருவராக தூக்கி போடும் கல் எதிரில் நிற்க எவ்வளவு அழகாக அது பொருந்த வேண்டிய இடத்தில் பொருந்துகின்றன! அதைப் பார்த்து வியந்துக் கொண்டிருக்கிறேன் அனுமா!

இந்த வானரங்கள் எல்லோரும் இந்த அணைகட்டும் கலையை எங்கே எப்போது கற்றன தெரியவில்லையே என்றார். அனுமன் கலகலவென சிரித்தான்.

பிரபோ நீங்கள் சொன்னீர்களே ஏதோ மந்திரத்தால் நடப்பது போல வேலை நடைபெறுகிறது. என்று அதுதான் உண்மை.

சரியாகச் சொல்லப்போனால் வேலை செய்வது வானரங்கள் அல்ல! அது வேறொரு சக்தி! அதை வானரங்களும் புரிந்து கொண்டிருப்பதால் தான், இவை இத்தனை ஒற்றுமையாகவும், நம்பிக்கையோடும் பணிபுரிகின்றன என்றான் அனுமன் இப்போது லட்சுமணன் கலகலவென சிரித்தான்.


அதென்ன வேறொரு சக்தி ? அனுமன் பதில் சொல்லாமல் முறுவல் பூத்தான்.

குறிபார்த்து நாம் அன்பு எய்கிறோம் இல்லையா? அதுபோல் இந்த வானரங்கள் கல்லை தூக்கி வீசுகின்றன.

இவை குறிபார்த்து கல்வீசும் திறனில் பழக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் என்றான் லட்சுமணன்.

அதைப் பார்த்த ராமர் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்தார். லட்சுமணன் கலகல வென்று நகைத்தவாறு ராமரைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

ஆனால் அனுமன் முகத்தில் யோசனை ரேகைகள் ஓடின ராமர் அந்த கல்லை கடலை நோக்கி வீசினார்.

கல் பறந்து சென்றது ஆனால் விழ வேண்டிய இடத்தில் அது விழவில்லை. கடலில் விழுந்து மூழ்கியது.

இப்போது ராமபிரான் முகத்தில் யோசனை ஆனால் அனுமன் முகத்தில்
மெல்லிய புன்முறுவல். பிரபோ மந்திரத்தால் வேலை நடக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? ஆம்!

அதற்கென்ன! வேலை உண்மையில் மந்திரத்தால் தான் நடக்கிறது. அப்படியா! அதென்ன மந்திரம்?

 ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரம் வேறு என்ன உண்டு.

சுவாமி நான் ஒவ்வொரு கல்லிலும் ஸ்ரீராம் என்று எழுத அதை வானரங்கள் அந்த நாமத்தை உச்சரித்துக் கொண்டே வீசுகின்றன.

அது போய் விழ வேண்டிய இடத்தில் பொருந்துகின்றன என்றார்.

இருக்கட்டும் அனுமா! எந்த ராமபிரானின் மந்திரத்தை உச்சரித்து கல் எறிகிறீர்களோ! அதே ராமபிரான் அல்லவா கல்லை தூக்கி எறிந்தார்.

 அது ஏன் கடலில் விழுந்து அமிழ்ந்து விட்டது என்றார்.

ஏனென்றால் எங்கள் ஸ்ரீராமபிரானைவிடவும் அவரது ராமநாமம் மிக மிக உயர்ந்தது என்றார்.

ராம நாமத்தால் ஆகாத செயல் இல்லை ராமச்சந்திர மூர்த்தியால் முடியாததை கூட தேனினும் இனிய ராம நாமம் முடித்து தரும். ஆகவே

அவரது நாமமே உயர்ந்தது என்பதே கருத்து.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !


ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !







குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்

பெருமாள் திருமொழி
பத்தாம் திருமொழி - அங்கணெடுமதின்


ஸ்ரீராமாயண கதைச்சுருக்கம்



குரைகடலைஅடலம்பால்மறுகவெய்து
குலைகட்டிமறுகரையைஅதனாலேறி *
எரிநெடுவேலரக்கரொடும் இலங்கைவேந்தன்
இன்னுயிர்கொண்டு அவன்தம்பிக்கு அரசுமீந்து *
திருமகளோடினிதமர்ந்தசெல்வன்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
அரசமர்ந்தானடிசூடும் அரசையல்லால்
அரசு ஆகஎண்ணேன்மற்றரசுதானே.

7 747



அம்பொனெடுமணிமாடஅயோத்தியெய்தி
அரசெய்திஅகத்தியன்வாய்த்தான்முன்கொன்றான்
தன் * பெருந்தொல்கதைக்கேட்டுமிதிலைச்செல்வி
உலகுய்யத்திருவயிறுவாய்த்தமக்கள் *
செம்பவளத்திரள்வாய்த்தன்சரிதைகேட்டான்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எம்பெருமான்தன்சரிதைசெவியால்கண்ணால்
பருகுவோம் இன்னமுதம்மதியோமன்றே.


8 748


செறிதவச்சம்புகன்தன்னைச்சென்றுகொன்று
செழுமறையோனுயிர்மீட்டுத் * தவத்தோனீந்த
நிறைமணிப்பூணணியும் கொண்டுஇலவணன்தன்னைத்
தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட *
திறல்விளங்கும் இலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
உறைவானை * மறவாதஉள்ளந்தன்னை
யுடையோம் மற்றுறுதுயர மடையோமன்றே.

9 749


அன்றுசராசரங்களைவைகுந்தத்தேற்றி
அடலரவப்பகையேறிஅசுரர் தம்மை
வென்று * இலங்குமணிநெடுந்தோள்நான்கும்தோன்ற
விண்முழுதும் எதிர்வரத்தன்தாமம்மேவி *
சென்று இனிதுவீற்றிருந்தஅம்மான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
என்றும்நின்றானஅவனிவனென்றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோஎப்பொழுதும்தொண்டீர்! நீரே. (2)

10 750



தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
திறல்விளங்குமாருதியோடு அமர்ந்தான்தன்னை *
எல்லையில்சீர்த்தயரதன்தன்மகனாய்த்தோன்றிற்று
அதுமுதலாத் தன்னுலகம்புக்கதீறா *
கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்
கோழியர்கோன்குடைக்குலசேகரன்சொற்செய்த *
நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)

11 751



ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !


ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !




அன்புடன் 
அனுபிரேம் 

2 comments:

  1. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்று. பலமுறை சென்றுள்ளேன். இன்று இப்பதிவு மூலமாகச் சென்றேன். இக்கோயிலை உள்ளடக்கிய பஞ்சராமர் தலங்களைப் பற்றி அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் மூன்று புதிய பதிவுகளை எழுதியுள்ளேன். நான்கு பழைய பதிவுகளை மேம்படுத்தியுள்ளேன்.

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு. வடுவூர் ராமர் அழகு.

    ReplyDelete