31 December 2020

16 .நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற 

கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்





 திருப்பாவையின் முதல் 15 பாடல்களில் ஆண்டாள் தன்னுடைய தோழிகள் எல்லோரையும் படாத பாடுபட்டு எழுப்பிவிட்டாள். 

இனி, ஆண்டாள் தான் மார்கழி நீராடி யாரை பூஜிக்கவேண்டும் என்று விரும்பினாளோ அந்த கிருஷ்ணனை எழுப்புவதற்காக நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு முன்பாக தோழிகளுடன் வந்து நிற்கிறாள். 

ஆனால், வைகுந்தத்தில் இருக்கும் துவாரபாலகர்களைப் போலவே, நந்தகோபனின் மாளிகை வாசல் கதவுகளுக்கு முன்பாக ஒரு காவலன் இருக்கிறார்கள். 

கதவுகள் திறந்தால்தானே ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் உள்ளே சென்று கிருஷ்ணனை எழுப்பமுடியும்? எனவே ஆண்டாள் வாயில் காவலனிடம் கதவுகளைத் திறக்குமாறு சொல்கிறாள்.



நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய 

கோயில்காப்பானே! * கொடித்தோன்றும் தோரண 

வாயில்காப்பானே! * மணிக்கதவம் தாள்திறவாய் *

ஆயர்சிறுமியரோமுக்கு * அறைபறை 

மாயன்மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் *

தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான் *

வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேஅம்மா! * நீ 

நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். (2)


பொருள் -

கோகுலத்து மக்களுக்கு நாயகனாக இருக்கின்ற நந்தகோபனுடைய திருமாளிகையின் வாயில் காப்பவனே, நாங்கள் கிருஷ்ணனைச் சந்திக்க வந்திருக்கிறோம். எனவே, வாயில் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதிப்பாய் என்று ஆண்டாள் கேட்கிறாள்.

'உங்களுக்கு இந்த மாளிகையில்தான் கிருஷ்ணன் இருக்கிறார் என்பது எப்படித் தெரிந்தது?' என்று வாயில் காவலன் கேட்கிறான்.

அதற்கு ஆண்டாள், 'இது என்ன பிரமாதம்? அதுதான் இந்த மாளிகையில் கொடிகள் பறக்கிறதே. நந்தகோபனின் மாளிகையைத் தவிர வேறு யார் மாளிகையிலாவது இப்படி கொடிகள் பறக்குமா என்ன? ஆகையால் இதுதான் நந்தகோபரின் திருமாளிகை. எனவே நீ மேற்கொண்டு எதுவும் எங்களைக் கேட்காமல், மணிக் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே போக விடுவாய்'' என்கிறாள்.

ஆனாலும் அந்த காவலன் கதவுகளைத் திறக்கவில்லை. அதற்கு பதிலாக, ''கிருஷ்ணன் உங்களை வரச்சொன்னாரா? வரச்சொன்னார் என்றால் எதற்காக வரச்சொன்னார்?'' என்று கேட்கிறான்.


''எங்களுக்கு ஓசை எழுப்பும்படி அடிப்பதற்காக பறை வாத்தியங்களைத் தருவதாக நேற்றே கிருஷ்ணன் கூறினான். அந்த கிருஷ்ணன் எப்படிப்பட்டவன் தெரியுமா? நீலமணி போன்ற மேனி நிறத்தைப் பெற்றிருக்கும் மணிவண்ணன். எங்களை உள்ளே செல்லவிட மாட்டாயா?'' என்று ஆண்டாள் கெஞ்சுகிறாள்.


ஆனால், அந்தக் காவலன் அதற்கெல்லாம் மசியவில்லை. ''நான் உங்களை எப்படி நம்புவது? நீங்கள் கம்சன் அனுப்பிய பூதனை போன்ற அரக்கியர்களாக இருப்பீர்களோ என்று எங்களுக்கு பயமாக இருக்கிறது. அதுவும் நீங்கள் இப்படி பொழுது விடியாத இருட்டு நேரத்தில் வந்திருக்கிறீர்களே'' என்கிறான் அந்தக் காவலன்.


''ஐயா, நீங்கள் எங்களை அப்படி தவறாக நினைக்காதீர்கள். நாங்கள் ஒரு பாவமும் அறியாத ஆயர்குலச் சிறுமியர்கள். தூய்மையான மனதை உடையவர்களாக நாங்கள் வந்திருக்கிறோம். கிருஷ்ணன் உறக்கத்தை விட்டு எழுந்திருக்க பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாட வந்திருக்கிறோம். எங்களால் கிருஷ்ணனுக்கு ஒரு தீங்கும் வந்துவிடாது. தயவு செய்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கும் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல விடுவாய்'' என்று காவலனிடம் கேட்கும் ஆண்டாள், ''நாங்கள் ஒரு நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறோம். முதல் முதலாக உன்னிடம்தான் வந்திருக்கிறோம். தயவு செய்து உங்கள் வாயால் மறுப்பு எதுவும் சொல்லாமல் கதவுகளைத் திறக்கவேண்டும்'' என்கிறாள்.


'இவர்கள் வந்திருக்கும் நல்ல காரியம் நம்மால் தடைப்பட்டது என்ற கெட்ட பெயர் நமக்கு எதற்கு?' என்று நினைத்தவனாக வாயில் காவலன் கதவுகளைத் திறந்துவிடுகிறான். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் நந்தகோபன் மாளிகைக்குள் செல்கின்றனர்.


திருநின்றவூர் - ஸ்ரீ என்னை பெற்ற தாயார்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. வணக்கம் சகோதரி

    படங்கள் அருமை. ஸ்ரீ என்னைப் பெற்ற தாயாரை கண் குளிர கண்டு சேவித்துக் கொண்டேன். இன்றைய திருப்பாவை பாடலும், அதன் விளக்கமும் அருமை. கண்ணனை கண் குளிர காண ஆண்டாள் நாச்சியார் தன் தோழியருடன் மாளிகைக்குள் செல்லும் விதம் அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் புத்தாண்டு அனைவரின் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து தாங்கள் தரும் உற்சாகமான கருத்திற்கு நன்றி கமலா அக்கா ..

      தங்களுக்கும் எனது மனம் நிறைத்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

      Delete
  2. வருடம் முழுவதும் சிறப்பான பதிவுகளை வெளியிட்ட உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள் வருகின்ற வருடங்களிலும்!

    ReplyDelete