இன்று (10/02/2025), ஸ்ரீரங்கம் தைத் தேர்.
நம்பெருமாள்,உபய நாச்சிமார்களுடன் காலை 5.00மணிக்குத் தேரில் எழுந்தருள்வார். இந்தத் தேருக்கு மட்டுமே, நம்பெருமாள் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருள்கிறார்.
பங்குனி,சித்திரைத் தேரில் நம்பெருமாள் மட்டுமே எழுந்தருள்கிறார்.
தெற்கு உத்திர வீதியில், நான்முகன் கோபுரத்துக்கு (ரங்கா,ரங்கா) அருகில் உள்ள தேர்.
(பண்டைய காலத்தில், இந்தத் தேர் வடக்கு உத்திர வீதியில், தாயார் சந்நிதிக்கு மேற்கில் நிலை கொண்டிருந்தது).
காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் "ரங்கா,ரங்கா;கோவிந்தா, கோவிந்தா" கோஷங்களுடன் தேர் வடம் பிடிப்பார்கள். நான்கு உத்திர வீதிகளிலும் தேர் ஓடி, 9 மணி அளவில் நிலைக்கு வரும்.
மதியம் 1 மணிக்கு பெருமாள் தேரிலிருந்து இறங்கி தாயார் சந்நிதிக்கு எழுந்தருள்வார். தீர்த்தபேரர் பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்வார்.
மாலை தாயார் சந்நிதி கொலு மண்டபத்தில் பெருமாளுக்கும்,உபய நாச்சிமார்களுக்கும் திருமஞ்சனம் நடைபெறும்.
613 ஆவது தைத் தேர் உற்சவம்:
இந்தத் தேரோட்டம், முதன் முதலாக 1413 ஆம் ஆண்டில்,"ஸ்ரீமணவாள மாமுனிகள்" நியமனப் படி,விஜயநகர மன்னர், 'வீரபூபதி உடையாரால்'நடத்தப்பட்டது.
1413ஆம் ஆண்டில் தான் மணவாளமாமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஸ்ரீரங்கம் நித்யவாசத்துக்கு எழுந்தருளினார். அவர் ஏற்படுத்திய முதல் உற்சவம்.
ஓராண்டு ஆழ்வார் திருநகரி சென்ற மணவாள மாமுனிகள் தைத்தேருக்குள் ஸ்ரீரங்கம் திரும்ப முடியாமல் போயிற்று. தைத்தேர் சேவிக்க முடியவில்லையே என்று மாமுனிகள் பாடிய பாசுரம்:
"தேவியரும் தாமும் திருத்தேரின் மேல், அரங்கர் மேவி விக்கிரமன் வீதிதனில், சேவை செய்யும் அந்தச் சுவர்க்கத்தை, அனுபவிக்கப் பெற்றிலமே யாம் !"
தை உத்திரட்டாதி தொடங்கி, 11 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்துக்கு,
வீர பூபதி உடையார் 135 பொன் மற்றும் மான்யங்கள் கொடுத்தார். அதனால் அவர் பெயரில் 'பூபதித் திருநாள்' உற்சவம் என்று நடத்தப் படுகிறது. மன்னருடைய திருநட்சித்திர மான,புனர்பூசத்தன்று தேரோட்டம் நடக்கிறது.
இந்த வீர பூபதி உடையார்,சித்திரை பிரம்மோற்சவம் - விருப்பண் திருநாள்- நடத்திய மன்னர் விருப்பண்ண உடையாரின் சகோதரர் மகன்.
பல மன்னர்கள் பல உற்சவங்கள் நடத்தி, அதற்கான மான்யங்களை ஏற்படுத்தியும்,காலப் போக்கில் அவை நின்று விட்டன(??).
ஆனால் இந்த இரண்டு மன்னர்கள் ஆரம்பித்து வைத்த உற்சவங்கள், இன்றளவும் சீரோடும்,சிறப்போடும் நடந்து வருகின்றன.
கதிர் அலங்காரம்:
இன்று மாலை 5 மணிக்கு பெருமாளுக்கு 'கதிர் அலங்காரம்' என்னும் வைபவம் நடைபெறுகிறது. சித்திரையில் குத்தகைக்கு விட்ட கோயில் நிலங்களில் விதைத்து,தையில் அறுவடை செய்த பயிர்களை, அந்த விவசாயிகள், நம்பெருமாளுக்குப் படைக்கும் வைபவமே கதிர் அலங்காரம்.
இன்று விவசாயிகள் நெல், கரும்பு,வாழை (பழம்,இலை) ஆகியவற்றை தலையில் சுமந்து வந்து பெருமாளுக்குப் படைப்பார்கள். விவசாயிகளின் தலைவராக 'வெள்ளாளப் பிள்ளை' என்பவர் யானை மேல் ஏறி,சிரசில் நெற்பயிர்களை வைத்துக் கொண்டு வருவார். மற்றவர்கள் தலையில் சுமந்து வருவார்கள்.இவர்கள் கோயில் மரியாதைகளுடன் (யானை,குதிரை,மங்கள வாத்தியம்) திருவீதிகளில் அழைத்து வரப்படுவார்கள். நம்பெருமாள் திருமுன்பு இவர்களுக்கு மரியாதை செய்யப்படும்.
245.
கன்னி நன் மா மதில் சூழ்தரு* பூம்பொழிற்
காவிரித் தென்னரங்கம்*
மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!*
பாவியேன் வாழ்வு உகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்*
சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை*
என்குட்டனே முத்தம் தா*
402.
மா தவத்தோன் புத்திரன் போய்*
மறி கடல்வாய் மாண்டானை*
ஓதுவித்த தக்கணையா*
உருவுருவே கொடுத்தானுர்*
தோதவத்தித் தூய் மறையோர்*
துறைபடியத் துளும்பி எங்கும்*
போதில் வைத்த தேன்சொரியும்*
புனலரங்கம் என்பதுவே. (2)
877.
மறம்சுவர் மதிளெடுத்து* மறுமைக்கே வெறுமை பூண்டு,*
புறம்சுவர் ஓட்டை மாடம்* புரளும்போது அறிய மாட்டீர்,*
அறம் சுவராகி நின்ற* அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,*
புறம்சுவர் கோலம் செய்து* புள் கவ்வக் கிடக்கின்றீரே!
878.
புலையறம் ஆகி நின்ற* புத்தொடு சமண மெல்லாம்,*
கலையறக் கற்ற மாந்தர்* காண்பரோ கேட்பரோதாம்,*
தலை அறுப்புண்டும் சாவேன்* சத்தியம் காண்மின் ஐயா,*
சிலையினால் இலங்கை செற்ற* தேவனே தேவன் ஆவான்.
923.
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?*
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*
எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,*
அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?*
அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.
அன்புடன்
அனுபிரேம் 💓💓💓
ஸ்ரீரங்கம் பூபதித் திருநாள் தை த்தேர் விவரங்களும், பிரபந்த பாடல்களும், படங்களும் அருமை.
ReplyDeleteமிகவும் நன்றி கோமதி மா
Deleteபூபதித் திருநாள், விருப்பண் திருநால் விளக்கங்களும், தேர் திருவிழா படங்களும் மிக அழகு
ReplyDeleteநன்றி சார்
Delete