மாமுனிகள் திருவத்யனம்:
சிஷ்யனானவன் ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் மற்றும் அவர் ஆசார்யன் திருவடி அடைந்த நாளை கொண்டாடவேண்டும்.
ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் "திருநக்ஷத்திரம்" எனப்படும் , ஆசார்யன் திருவடியடைந்த நாள், ஸ்ரீ வைஷ்ணவர்களால், திருவத்ய்யநம் (தீர்த்தம்) எனப்படும்.
நம்மாழ்வார் தொடங்கி திருவாய்மொழிப்பிள்ளை வரை உள்ள ஆச்சார்யர்களுக்கு நேரே தொடங்கி, ஓராண்வழி ஆச்சார்யர்களுக்கும், மற்றுள்ள ஆச்சார்களுக்கும் அவர்களிடத்தில் நேரே சிஷ்யராக அடைந்தவர்கள் இந்நிலவுலகில் தற்போது இல்லை, அதலால் அவர்களது திரு நக்ஷ்த்திரம் கொண்டாப்படுகிறதே தவிர அவர்களது தீர்த்தம் கொண்டாப்படுவதில்லை.
ஆனால் ஸ்வாமி மணவாளமாமுனிகள் மட்டும் விதிவிலக்கு! அதிலும் கோயில் மணவாளமாமுனிகளின் சன்னதியில் மட்டும் கொண்டாப்படுகிறது. மற்ற திவ்யதேசங்களில் மணவாளமாமுனிகளுக்கு சன்னதி இல்லாமல் இல்லை, அதிலும் கோயில் மணவாள மாமுனிகளுக்கு மட்டுமே தீர்த்தம் கொண்டப்படுகிறது, அதற்கு காரணம்;
நம்பெருமாள் மணவாளமாமுனிகளை ஆச்சாரியனாய் கொண்டு ஒரு வருட காலம் தான் ஸிஷ்யனாய் திருவாய்மொழியின் ஈடு அர்த்தத்தை செவிசாய்த்தான், மேலும் சாற்றுமுறை தினத்தன்று, சிறிய பாலகனாய் அவர் முன் தோன்றி "ஸ்ரீ சைலேச" என்ற தனியனை அருளிச்செய்தார் என்பது ஜகத் ப்ரசித்தம். அது முதற்கொண்டே மாமுனிகளின் திருநக்ஷத்திரத்திற்கு அநேக பகுமானங்கள் நம்பெருமாள் சன்னதியில் இருந்து அனுப்பப்படுகிறது.
![]() |
மணவாள மாமுனிகள் தன் ஆசாரிய திருவடியை அடைந்த நாள் மாசி , கிருஷ்ணபக்ஷ துவாதசி (16-2-1444, திருவோணம், ஞாயிற்றுக்கிழமை). ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை மணவாள மாமுனிகளின் திருவத்யயன உற்சவமாக தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் சன்னதியில் நடைபெறுகிறது.
மாமுனிகள் ஒருவருக்கே, தனி மகத்துவம்:
ஒருவருடைய திருஅத்யயனம்/தீர்த்தம்(திதி), அவருடைய நேரடி சந்ததி(குமாரர்) அல்லது நேரடி சீடரால் மட்டுமே அனுஷ்டிக்கப்படுகிறது.
எனவே ஆழ்வார்கள், ஸ்ரீ ராமாநுஜர் மற்றுள்ள ஆசார்யர்களுக்கு நேரடி சந்ததி/சீடர் இன்று இல்லாததால் அவர்களுக்கு திருவத்யயனம் அனுஷ்டிப்பதில்லை.
மணவாளமாமுனிகள் 580ஆண்டுகளுக்கு, முன்னர் பரமபதம் எய்தியிருந்தாலும் அவருடைய நேரடி சீடர் இன்றும் எழுந்தருளி இருக்கிறார்; என்றென்றும் எக்காலத்திலும் இருப்பார். அவர் தமது ஆசார்யருக்கு ஆண்டுதோறும், திருவத்யயனம் செய்கிறார்.
மணவாள ஜீயரின்(மாமுனிகளின்), மகத்தான அழகிய மணவாள சீடர்:
ஸ்ரீரங்கநாதப் பெருமாளே, ரங்கநாயகம் என்னும் பாலகன் வடிவில் வந்து, மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்.
திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் 'ஈடு வியாக்யனத்தை' மணவாள மாமுனிகள் திருவாயால், செவியுற விரும்பிய அழகிய மணவாளர் (நம்பெருமாள்), ஒரு வருடம் தம்முடைய உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்து விட்டு, மாமுனிகளிடம் சிரத்தையாக ஈடுவியாக்யானம் கேட்டார்.
வியாக்யானம் முடியும் சாற்றுமுறை தினத்தில், நம்பெருமாளே ஒரு பாலகனாக உருவெடுத்து, வந்து மாமுனிகளை, ஆசார்யராக ஏற்றுக் கொண்டதற்கு , ஆசார்ய சம்பாவணையாக, ஒரு தனியனைச் சுவடியில் எழுதிச் சமர்ப்பித்தார். அந்தத் தனியனே நாம் அனைவரும் நாளும் அனுஸந்திக்கும்,
"ஸ்ரீ சைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்,
யதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம்முநிம்!!"
(ஸ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய்மொழிப் பிள்ளையின், எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமான வரும், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும், யதிராஜரான ராமாநுஜர் மீது அளவுகடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன் !)
ஒரு சீடர் ஆசார்யருக்குச் செய்ய வேண்டிய சிஷ்ய லட்சணமான ஐந்து கடமைகளையும் செவ்வனே நடத்தினார் நம்பெருமாள்:
i) தனியன் சமர்ப்பித்தல்.
ii)ஆசார்யர் கீர்த்தியை வையம் எங்கும் பரப்புதல்.
---எல்லா திவ்ய தேசங்களிலும், பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன் முதலிலும்,சாற்று முறையின்போது முடிவிலும், தம் ஆசார்ய தனியனான 'ஸ்ரீசைலேச தயாபாத்ரம்' சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்.
மடங்கள்,ராமானுஜ கூடங்கள், ஆசார்யர்கள்,பாகவதர்கள், திருமாளிகைகளிலும் நாளும் சேவிக்கப் படுகிறது.
iii)ஒரு சீடர் தனக்கென்று எந்த உடமையும்/சொத்தும் இல்லையென்றும், எல்லாம் ஆசார்யருடையதே,தாம் அனுபவிப்பது அவர் கிருபையால் தந்தருளியது என்னும் நிஷ்டையில் இருத்தல்:
---எனவே தம் உடமைகளை யெல்லாம் ஆளும்/நிர்வகிக்கும் ஆதிசேஷனையே மாமுனிகளுக்குத் தந்து விட்டார் அரங்கர்.அதனால் தான் மாமுனிகள் எங்கும் எப்போதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார்.ஆதிசேஷ அவதாரமான ராமாநுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுனிகளுக்குத் கொடுத்து அருளினார்.
iv)ஆசார்யருடைய திருநாமத்தை சீடர் தரித்தல்:
--நம்பெருமாளின் திருநாமம்- 'அழகிய மணவாளன்' என்பதே மாமுனிகளின் இயற்பெயர். அவர் சந்யாசம் ஏற்ற போது'சடகோப ஜீயர்' என்னும் நாமத்தை ஏற்க விரும்பினார். ஆனால் பெருமாள் நியமனத்தால் பழைய நாமத்தையே தொடர்ந்தார். (அப்படியிருந்தால் தானே ஆச்சார்யர் திருநாமமும்,பெருமாள் திருநாமமும் ஒன்றாக இருக்க முடியும்).
v)ஆசார்யர் திருநட்சத்திரத்தையும்-- திருநட்சத்திர பரிபாலனம்-
தீர்த்தத்தையும்- திருவத்யயன தீர்த்த பரிபாலனம்-- சிறப்பாக அனுஷ்டித்தல்:
-- அரங்கர் இவ்விரண்டையும், இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார்.
இரண்டு நாட்களிலும் பெருமாள் பிரசாதங்கள், உடுத்துக்களைந்த மாலைகள், பரிவட்டங்கள்,சந்தனம் முதலானவற்றை மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கிறார்.
தீர்த்த நாளன்று, அரங்கருக்குத் திருவாராதனம் செய்யும் அர்ச்சகரே, மாமுனிகளுக்கும் செய்கிறார்.
நம்பெருமாளுக்குக் காலை நைவேத்யம் இல்லை. மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே, இவருக்கு நைவேத்யம்.
ஸ்ரீரங்கம் மணவாளமாமுனிகள் சந்நிதியில் நடைபெறும் திருஅத்யயன வைபவம்:
திருஅத்யயன நாளின் முதல்நாள் இரவு 7 மணியளவில், திருவாய்மொழியில் முதல் இரண்டு பத்துகள் (இருநூறு பாசுரங்களை), பெரிய பெருமாள் அத்யாபகக் கோஷ்டியினர் சேவிக்கின்றனர்.
மாமுனிகளுக்கு, தோசை,வடை, சுண்டல் நைவேத்யம் ஆகி கோஷ்டிக்கும்/பக்தர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
நேற்று காலை மீதமுள்ள எட்டு பத்துகளும் (800 பாசுரங்கள்) சேவிக்கப்படும். அரங்கரின் பிரசாதங்கள்/மரியாதைகள் மாமுனிகளுக்குச் சமர்ப்பிக்கப்படும்.
பிரசாதம் கோஷ்டிக்கு விநியோகம் ஆன பின், திருவாய்மொழி சாற்றுமுறை நடைபெறும். மாமுனிகளின் திருவடிகளான பொன்னடியாம் செங்கமலப் போதுகள் கோஷ்டியார் சிரசில் வைத்து அருளப்படும்.
பின்னர் அத்யாபகர்கள் திருமலை ஆழ்வார் (திருவாய்மொழிப் பிள்ளை) மண்டபத்துக்கு (கோவில் வளாகத்துக்குள் மாமுனிகள் சந்நிதிக்குப் பின்னால் உள்ளது.இங்கு எழுந்தருளியிருந்து தான் மாமுனிகள் காலட்சேபம்/உபன்யாசம் செய்வார்.இந்த மண்டபத்தில் இருந்தே மாமுனிகள் பரமபதம் எய்தினார்.) செல்வார்கள்.
அங்கு அவர்கள் கோவில் திருவாய்மொழி, இராமானுச நூற்றந்தாதி, உபதேசரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி சேவிப்பார்கள். அதன்பின் மாமுனிகள் சந்நிதியில் சாற்றுமறை.
அனைவருக்கும் தீர்த்தம், பொன்னடியாம் செங்கமலப்போதுகள், தொட்டிப்பிரசாதம் (உப்பில்லாத/உப்பு குறைவான சிறதளவு தயிர் சேர்தத அன்னம்--மாமுனிகள் பெரும்பாலும், இந்த சத்வமயமான அன்னத்தையே அமுது செய்வாராம் !) சாதிக்கப்படும்.
மாமுனிகள் திருவரசு:
மாமுனிகளின் சரம திருமேனி, வடதிருக்காவேரிக் (கொள்ளிடம்) கரை, தவராசன் படுகையில் பள்ளிப்படுத்தப்படடது.
( கொள்ளிடம் திருமங்கை ஆழ்வார்படித்துறை-- சென்னை நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் ரயில்வே கேட்டை ஒட்டி மேற்கில்,இணைப்புச் சாலைக்குத் தெற்கில் உள்ளது).
"மகிழாதி கேசவன் தன்னடிக்கீழாக" என்கிறபடியே,ஆதிகேசவப் பெருமாள் திருவடிகள் கீழாக அவர் திருவடி பிரியா வண்ணம், தவராசன் படுகையிலே,பொன்னித் தென்பாலிலே, எழுந்தருளப் பண்ண ஒருப்பட,
அவ்வளவிலே, பூதேவியானவள்,முன்பு ஜனகராஜன் திருமகளை மடியிலே வைத்து, அணைத்துக்கொண்டு ஆதரித்தாற் போலே,
அந்த மண்மகளான பிராட்டியும்,மணவாள மாமுனியான இவரையும்,
மடியிலே எழுந்தருளப் பண்ணி வைத்துக்கொண்டு மகிழ, ஆளவந்தார், எம்பெருமானாரைப் போலே,யதிஸம்ஸ்ஹார விதியடங்கச் செய்து, கனித்து வாழும்படி, திருப்பள்ளிப் படுத்தினார்கள்."(யதீந்த்ர ப்ரவண பிரபாவம்).
ஆழ்வார்/ஆசார்யர்கள் சரம திருமேனி பள்ளிப் படுத்தப்பட்ட இடம் 'திருவரசு'என்று அழைக்கப் படுகிறது.
மாமுனிகளின் திருவரசும், மேல்புறம் இருந்த ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலும் இஸ்லாமிய படையெடுப்பாலும்/காவிரியில் ஏற்பட்ட, பெருவெள்ளத்தாலும் சேதமடைந்து /இடிந்து அழிந்து விட்டன. அதற்குப் பின் வேறு பலர் அந்த நிலத்தை ஆக்கிரமித்திருந்தனர்.
கடைசி ஆக்கிரமிப்பாளர்கள் அந்நிலத்தில் வேளாண்மை செய்து வந்தனர்.
ஆசார்ய ஸ்வாமிகள்/பாகவதர்கள் எல்லாம் சேர்ந்து "திவ்யதேசப் பாரம்பரியப் பாதுகாப்புப் பேரவை"என்னும் அமைப்பை நிறுவி அதன்மூலம் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி, அந்த நிலம்(1.82 ஏக்கர்) 2016 ஜூலையில் மீட்கப்பட்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.
அங்கு மணவாள மாமுனிகள் சந்நிதி/திருவரசு மண்டபம் அமைக்க வேண்டும் என்னும் அடியார்களது கோரிக்கையை, நிறைவேற்றுவதாக பெரிய கோயில் நிர்வாகத்தார் கூறினர்.( 9 ஆண்டுகள் கடந்தும்,இதற்கான ஆயத்தங்கள் எவையும் நடந்ததாகத் தெரியவில்லை.!!??) இவை விரைவில் அமைய, இந்தத் திருநாளில் மாமுனிகளையும், அவர் தம் உன்னத சீடர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாளையும், நாம் பிரார்த்தித்துக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை .
மாமுனிகளின் தீர்த்த நாளில், அவரது திருவரசிலும், திருமால் அடியார்களின் ஆராதனை நடைபெறுகிறது. (பல நூறு ஆண்டுகளுக்குப்பின் 2017ல், மீண்டும் ஆராதனை தொடங்கியது!!!)
"ஆசிலாத மணவாள மாமுனி அண்ணல், பூமியுறு ஐப்பசியில் திருமூலம்,
தேசநாளது வந்து, அருள்செய்த நம் திருவாய்மொழிப்பிள்ளை தான்,
ஈசனாகி எழுபத்து மூவாண்டு, எவ்வுயிர்களையும் உய்வித்து வாழ்ந்தனன்,
மாசிமால் பக்கத் துவாதசி மாமணி மண்டபத்து எய்தினன் வாழியே !!"
"அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண்டு இரும் !!!"
( முக நூலில் பதிவிட்ட பார்த்தசாரதி ராமாநுஜ தாசன் சுவாமிக்கு நன்றிகள் பல )
ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் ஸந்நிதி, திருவயிந்திரபுரம்
இதில் இரண்டு சந்தேகங்கள் (தவறுகள் என்று எழுத யோசனையாக இருக்கிறது) இருக்கின்றன.
ReplyDeleteஅத்யயனம் என்றால் வாசித்தல், சேவித்தல் என்று பொருள்படும். வேதம், பிரபந்தம் சேவித்தலை அத்யயனம் என்பார்கள் (அத்யயன உத்ஸவம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்). ஸ்ராத்தத் திதி அன்று வேதம் அல்லது பிரபந்தம் சேவித்த பிறகு... ஸ்ராத்தம் நடைபெறும் என்ற நடைமுறை உண்டு, இப்போது அப்படிப் பெரும்பாலும் நடப்பதில்லை, ஆனால் கோயிலாழ்வாருக்கு திருவாராதனை அன்று உண்டு (அதில் பிரபந்தம், வேதம் உண்டு). அதனால் ஸ்ராத்தத்தை திருஅத்யயனம் என்று சொல்வர். (இதனால்தான் ஆச்சார்யன் பிறந்த நாளை திருநட்சத்திரம் என்றும் மறைந்த நாளை திருவத்யயனம் என்றும் சொல்வார்கள் என்று நினைக்கிறேன் but not sure) தீர்த்தம் என்ற பொருளில் வராது. நீரை எப்போதுமே உயர்வாக, பெருமாள் கண்டருளியது என்னும் நினைவாக தீர்த்தம் என்று சொல்லும் வழக்கம் வந்தது (கோயில்ல தீர்த்தம் சடாரி ஆச்சா என்ற பேச்சு வழக்கு. இதுவே கொஞ்சம் சிதைந்து தூத்தம் தாங்கோ என்று வீடுகளில் கேட்பது. இதன் வடமொழிச் சொல் ஜலம்)
இரண்டாவது, மணவாளமாமுனிகளின் கண்டறியப்பட்ட திருவரசு, தவராசன் படித்துறையிலிருந்து வெகு தள்ளி இருக்கிறது. தவராசன் படித்துறைக்கு இப்போ போகும் வழி சரியாக இல்லை. ஆளவந்தார் போன்ற பலரின் திருவரசுகள் இருக்கும் இடத்திற்கு மேல் புறம் ரோடு இருக்கிறது. அதாவது ரோடுக்கு இடது புறம் ஆளவந்தார் போன்றோரின் திருவரசுகள். அதனைத் தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் காவிரி ஆறு. ரோடுக்கு வலது புறம் (assuming we are going towards மணவாளமாமுனிகளின் சிறிய திருவரசு கோயில்) மணவாள மாமுனிகளின் திருவரசு என்று சொல்லப்படும் கோயில் அமைந்துள்ளது. ஆனால் அவருடைய திருவரசு, அதனைத் தாண்டி பின்புறம் அமைந்துள்ளது. அங்கு அடையாளத்துக்காக அவருடைய சிறிய திருவுருவம் உள்ளது, அதனைச் சுற்றி துளசிச் செடிகள் மற்றும் சில அடையாளங்கள் இருக்கின்றன. அதனைத் தாண்டி கொஞ்சம் உபயோகத்தில் இல்லாத கிணறு இருக்கிறது. இந்த இடங்களுக்குச் சென்று சேவித்திருக்கிறேன். முடிந்தால் பதிவிடுகிறேன். பதிவில் சொல்லியபடி, அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டிருக்கிறார்கள். காலம் அங்கு சிறப்பான திருவரசை அமைக்க உதவும்.
வணக்கம் சார் ..
Deleteதாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.
சிஷ்யனானவன் ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் மற்றும் அவர் ஆசார்யன் திருவடி அடைந்த நாளை கொண்டாடவேண்டும்.
ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் "திருநக்ஷத்திரம்" எனப்படும் ,ஆசார்யன் திருவடியடைந்த நாள், ஸ்ரீ வைஷ்ணவர்களால், திருவத்ய்யநம் (தீர்த்தம்) எனப்படும்.
நம்மாழ்வார் தொடங்கி திருவாய்மொழிப்பிள்ளை வரை உள்ள ஆச்சார்யர்களுக்கு நேரே தொடங்கி, ஓராண்வழி ஆச்சார்யர்களுக்கும், மற்றுள்ள ஆச்சார்களுக்கும் அவர்களிடத்தில் நேரே சிஷ்யராக அடைந்தவர்கள் இந்நிலவுலகில் தற்போது இல்லை, அதலால் அவர்களது திரு நக்ஷ்த்திரம் கொண்டாப்படுகிறதே தவிர அவர்களது தீர்த்தம் கொண்டாப்படுவதில்லை.
சார் நான் வாசித்த அல்லது தெரிந்துக் கொண்ட வரை அனைவரும் தீர்த்தம் என்றும் கூறுகின்றனர். அதில் பிழை உள்ளதாக எனக்கு தெரியவில்லை . மேலும் இத்தைகைய மேன்மையான செய்திகளை நான் சொந்தமாக எங்கும் எழுதுவது இல்லை ஆச்சாரியர்கள் அல்லது நன்கு அறிந்தவர்கள் எழுதியத்தையே இங்கு பகிர்கிறேன் .
தவராசன் படித்துறை பற்றிய தகவல்களை பதிவு செய்த சுவாமி ஸ்ரீரங்கத்தில் வசிப்பவர் அதனால் சரியாவே இருக்கும், இருப்பினும் அப்பாவிடம் கூறியுள்ளேன் ...பார்ப்போம் அவர் விரைவில் சேவித்து தகவல்களை தருவார்.
தங்களின் தயை கூர்ந்த மறுமொழிக்கு நன்றிகள் சார்
தீர்த்த தினம் பற்றி ...
Deleteஆசார்ய ஸ்வாமிகள் திருநாட்டுக்கு எழுந்தருளிய நாளை 'தீர்த்த தினம்'
(ஆசார்யரின் நினைவைப் போற்றி, அவரது ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்துக் கொள்வதால்) ,'திருவத்யயனம் தீர்த்த பரிபாலனம்' (ஆசார்யர் நினைவைப் போற்றித் திருவாய் மொழி அத்யயனம் செய்வதால்-சேவிப்பதால்) என்று வைணவ சம்பிரதாயத்தில் அனுஷ்டிக் கப்படுகிறது.(சாதாரணமாக சிரார்த்தம், திதி,திவசம் எனப்படுகிறது).
நீங்கள் நன்கு படித்த மேன்மையான வைணவர்கள் எழுதும் தகவலை அடிப்படையாக வைத்து எழுதறீங்கன்னு தெரியும். தீர்த்தம் என்ற சொல் (திருவத்யயனத்துக்கு) எனக்குப் புதிது. புதிய சொல் அறிந்தேன்.
Deleteஇப்போது தவராசன் படித்துறைக்குச் செல்லும் பாதையை அடைத்துவிட்டார்கள், குடிகார்ர்கள் பாதையில் உடைந்த பாட்டில்களைப் போட்டுச் செல்வதால், என்று சொன்னார்கள். தவராசன் படித்துறையைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கணும்.
இன்றைக்கு நீங்கள் ஆர்த்திப் பிரபந்தம், திருவாய்மொழி நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலையிலிருந்து பாசுரங்கள் கோத்திருக்கலாம். இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். இது என் கருத்து
ReplyDeleteஇப்பொழுது ஸ்ரீரெங்கம் மஹாமித்தியம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ... அதனால் அப்பாசுரங்களை பதிவிட தோன்றியது சார்...
Deleteம்ம் உபதேச ரத்தின மாலை சேர்க்க வேண்டும் என எண்ணினேன் .. பிறகு அவசரத்தில் விட்டுவிட்டேன் சார்
தகவல்கள் நன்று.
ReplyDeleteநன்றி வெங்கட் சார்
Deleteதெரிந்து கொள்கிறேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Delete