திருநக்ஷத்திரம் : “தை”- புனர்பூசம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்
இன்று 10/02/2025 , தை புனர்பூசம், ஸ்ரீ எம்பார் ஸ்வாமியின் 999 ஆவது திருநட்சித்திரம்.
இவர் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள மழலைமங்கத்தில் -தற்போது- மதுரமங்கலம்(சுங்குவார்சத்திரம்) அவதரித்தார். கோவிந்த பட்டர் என்னும் இயற்பெயருடைய இவர் ஸ்ரீராமாநுஜருடைய சித்தியின் புத்திரர்.
அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவைகுண்டநாதப் பெருமாள் சந்நிதியில் இவர் தகப்பனாருடன் சேர்ந்து திருவாராதனம் செய்து வந்தார்.சிறுவயதிலேயே ராமாநுஜரின் தேஜஸால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இருந்தார். இருவரும் யாதவப்பிரகாசரின் வேதபாட சாலையில் பயின்றனர் .
எம்பார் ஸ்வாமி தனியன்- பராசர பட்டர் இயற்றியது-
ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா நபாயிநீ |
ததாயத்தத் ஸ்வரூபா ஸா ஜீயாந்மத்விச்ர மஸ்தலீ ||
அர்த்தம் : ஸ்ரீ ராமானுஜரை எப்போதும் விட்டுப்பிரியாத அவர் திருவடி நிழலாகவும், அத்திருவடிகளாலே ஸ்வரூபம் நிறம் பெற்றிருப்பவராகவும், ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் என்ற திருநாமம் உடையவராகவும், அடியேனுக்கு இளைப்பாறும் இடமாகவும் உள்ள எம்பார் விஜயத்துடன் விளங்க வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு.
ராமாநுஜரை, ஆபத்திலிருந்து மீட்ட கோவிந்தர்!
திருப்புட்குழியில் யாதவப் பிரகாசரின் வேத பாடசாலையில் இருவரும் பயின்று வந்த காலத்தில், வித்யார்த்திகள் அனைவரும் காசி யாத்திரை சென்றனர்.அங்கு யாதவப் பிரகாசர் ராமாநுஜரை கங்கையில் மூழ்கடித்துக் கொல்லத் திட்டமிட்டு உள்ளார், என்பதை அறிந்த கோவிந்தர், ராமாநுஜரை எச்சரித்துத், தப்பிச் சென்று விடும்படி கூறினார்.
அப்படியே ராமாநுஜர் விந்திய மலைக் காட்டுக்குள் சென்று, பேரருளாளர்,பெருந்தேவித் தாயாரால்(வேடன், வேடுவச்சியாக வந்து) வழிகாட்டப்பட்டு காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டார்.
"உள்ளங்கை கொணர்ந்த நாயனார்" ஆக மாறிய கோவிந்தர்!
கோவிந்தர் யாதவப்பிரகாசரோடும், மற்றவர்களோடும் தொடர்ந்து யாத்திரைசென்றார்.யாதவப்பிரகாசர் போதித்த அத்வைத சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
ஒரு முறை கங்கையில் முழுகி நீராடிய போது,கோவிந்தர் கையில், ஒரு பாண சிவலிங்கம் அகப்பட்டது.
மிக மகிழ்ந்த கோவிந்தர் அந்த லிங்கத்தை அப்படியே உள்ளங்கையில் வைத்து, மேலே கொண்டு வந்தார். அனைவரும் அவரை சிவனருள் பெற்றவர் என்று கொண்டாடினர்;
"உள்ளங்கை கொணர்ந்த நாயனார்" என்று போற்றினர். இப்படியாக அவர் ஒரு சிவாசார்யார் ஆகி விட்டார்.
காளஹஸ்தி வந்து அங்குள்ள சிவன் கோவிலில் கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
நாயனாரைத் திருத்திப் பணி கொண்ட, உடையவர்
ஶ்ரீரங்கத்தில்,ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ராமாநுஜர், கோவிந்தரை ஶ்ரீவைஷ்ணவத்துக்குக் கொண்டுவர விழைந்தார்.
தங்கள் இருவரின் தாய்மாமாவும், சிறந்த ஶ்ரீ வைஷ்ணவ ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிகளிடம் கோவிந்தரைத் திருத்திப் பணி கொள்ளுமாறு வேண்டினார்.
திருமலை நம்பிகளுக்கும் அந்த சிந்தனை இருந்ததால், உடனே காளஹஸ்திக்கு சென்றார்; அங்கு குளக்கரையில் மலர் பறிக்கச் சென்று கொண்டிருந்த கோவிந்தரைக் கண்ட, நம்பிகள் அவரிடம் ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னமாலையிலிருந்து ஸ்லோகங்களை எடுத்துச் சொன்னார்.
ஸ்தோத்ர ஸ்லோகங்கள் எழுதிய ஓலைச் சுவடியை அவர் கண்படும்படி அவர் வரும் வழியில் இட்டார்.
அதைப் பார்த்த கோவிந்தர் "ஸ்ரீவைஷ்ணவர்கள் பொருளை நழுவ விடலாமோ?"என்றார்.
நம்பிகள்"நாங்கள் எதையும்/யாரையும் நழுவ விடமாட்டோம்!!"என்றார்.
கோவிந்தர் ஒன்றும் பேசாமல் சென்று விட்டார்.சில நாட்கள் கழித்து மீண்டும் காளஹஸ்திக்கு சில சீடர்களோடு சென்ற நம்பிகள் கோவிந்தர் வரும் வழியில், ஒரு ஓலைச்சுவடியில் , திருவாய்மொழிப் பாசுரம்:
"தேவும்,எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும்,பூசனையும் தகுமோ?"
(2-2-4)
எழுதிப் போட்டார். அதை எடுத்துப் படித்த கோவிந்தர், அங்கேயே போட்டுவிட்டுச் சென்று விட்டார்.
திரும்பி வரும்போது, மீண்டும் அதை எடுத்துப் படித்தார். நின்று சுற்று, முற்றும் பார்த்தார். சற்றுத் தொலைவில் ஒரு மரத்தடியில் நம்பிகள் காலட்சேபம் செய்து கொண்டிருந்ததைக் கவனித்தார்.
மெல்ல அங்கு சென்று, பின்னால் நின்று செவி மடுத்தார். மேற்சொன்ன பாசுர வியாக்யானத்தைக் கேட்ட கோவிந்தர், ஓடிச் சென்று நம்பிகளின் திருவடிகளில் விழுந்தார்.
நம்பிகள் அவருக்கு மேலும் வேதம், உபநிஷத், பகவத்கீதை முதலியவற்றிலிருந்து பிரமாணங்களை எடுத்துக் கூறினார். அவருடன் திருமலைக்கு அழைத்து வந்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்து, தம் சீடராக்கிக் கொண்டார்.
திருமலையில் நம்பிகளுடன் இருந்து அவருக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் செய்து வந்தார்.(உள்ளங்கையில் கொணர்ந்த பாணலிங்கம் இன்றும் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் உள்ள பாபஹரீஸ்வரர் கோவிலில்,மூலவருக்கு அருகில் வைத்துப் பூஜை செய்யப்படுகிறது.அந்த ஊரில் எம்பார் ஸ்வாமிக்கும் (கோவிந்தர்)ஒரு தனிக் கோவில் உள்ளது.)
ஆச்சர்யமாக, ஆசார்ய அபிமானத்தை வெளிக்காட்டிய கோவிந்தர்:
கோவிந்தர் பெரிய திருமலை நம்பிகளிடம் கைங்கர்யம் செய்து வந்த காலத்தில், ஒவ்வோர் நாளும் இரவில் ஆசார்யருக்குப், படுக்கை விரித்துச் சரி செய்து வைப்பார். அந்தப் படுக்கையில் அவரே ஒருமுறை படுத்துப் புரண்டு எழுவார்.
ஒரு நாள் இதைப் பார்த்து விட்ட ராமாநுஜர், திருமலை நம்பிகளிடம் கூற, நம்பிகள் அவரிடம், ஆசார்யருக்கு இட்ட படுக்கையில் அவர் படுத்தது, பெரிய அபச்சாரம் அல்லவோ?ஏன் இப்படிச் செய்தீர் என்று கேட்டார்.
அவர், இந்த அபச்சாரத்திற்குத், தமக்கு நரகம் தான் கிடைக்கும் என்ற தெரிந்திருந்தாலும், படுக்கையில் ஏதாவது ஊசி,முள், குப்பை இருந்து அவை ஆசார்யர் திருமேனிக்கு வலி ஏற்படுத்துமே, என்றே தாம் படுக்கையில் முதலில் படுத்துப் பார்த்ததாகவும் கூறினார்!!
ராமாநுஜருக்கு,கோவிந்தரை 'நாடு புகழும் பரிசாக'த் தந்த திருமலை நம்பிகள்:
குருவுக்கு சீடர் தட்சிணை தருவது போல,சிறந்த சீடருக்கு குருவும் பரிசு கொடுப்பாரல்லவா?
திருமலை நம்பிகளிடம்,ஶ்ரீராமாயணத்தை வெகு நன்றாகக் கற்றுத் தேர்ந்த ராமாநுஜரிடம், தாம் அவருக்கு எதேனும் பரிசு கொடுக்க விரும்புவதாகக் கூறினார் நம்பிகள்.உடனே ராமாநுஜர் கோவிந்தரைத் தம்முடன் ஶ்ரீரங்கத்துக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டினார்.
அவ்வாறே நம்பிகள் கோவிந்தரை அழைத்து,"கோவிந்தரே! நமக்கு எப்படிக் கைங்கர்யம் செய்தீரோ, அப்படியே எம்பெருமானாருக்கும் செய்து கொண்டிரும், உம்மை அவருக்குத் தானமாகக்கொடுத்தேன்" என்று ராமாநுஜரோடு செல்லுமாறு பணித்தார்.
அங்கிருந்து ஶ்ரீரங்கம் செல்லும் வழியில் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர். கோவிந்தர் எதிலும் ஆர்வமில்லாமல்,மேனி இளைத்து,சோகத்துடனே இருந்தார்.இதைக் கவனித்த உடையவர், அவரை திருமலை நம்பிகளின் பிரிவு வாட்டுகிறது என்பதை உணர்ந்தார்.
உடனே அவரை திருமலை சென்று நம்பிகளுடன் சில காலம் இருந்து வருமாறு சொல்லி, துணைக்கு இரு சீடர்களையும் அனுப்பி வைத்தார்.
கோவிந்தர் தாய்ப்பசுவிடம் செல்லும் கன்று போலத் துரிதமாகச் சென்றார்.
திருமலை சென்றதும், நம்பிகளின் திருமாளிகை முன்பு தண்டனிட்டு நின்றார்,மற்ற இருவரும் சென்று நம்பிகளிடம் கோவிந்தர் வரவைத் தெரிவித்தனர். உள்ளே இருந்து கோபமாக "அந்தப் பைத்தியக்காரனை யார் இங்கே வரச்சொன்னது. போகச் சொல்லுங்கள்"என்றார்.
நம்பிகளின் தேவியார் அத்தனை தூரம் வந்திருக்கும்,கோவிந்தருக்குப் பிரசாதம் கொடுத்து, நல்வார்த்தை கூறி அனுப்பலாமே என்று கூற நம்பிகள்,
"தானம் கொடுத்த மாட்டுக்குப் புல் இடுவார் உண்டோ?" யாரிடம் கொடுத்தோமோ அவரே பராமரிக்கட்டும்.கொடுத்ததைத் திரும்பிப் பெறும் வழக்கம் ஶ்ரீவைஷ்ணவனிடம் கிடையாது" என்றார்.
இதைக் கேட்டுப் புரிந்து கொண்ட,கோவிந்தர் மீண்டும் ஒரு முறை திருமாளிகை வாசலில் தண்டனிட்டுவிட்டு, உடனே திரும்பினார்.
காஞ்சி வந்து எம்பெருமானாரிடம் நடந்ததைக் கூறினார்.உடையவர் திருமலை நம்பிகளின் மேதாவிலாசத்தையும்,ஶ்ரீவைஷ்ணவ ஆதார ஞானத்தை எடுத்துக்காட்டியதையும் உகந்து, கோவிந்தரைக் கண் குளிரக் கடாட்சித்து, அவருக்கு எல்லாமாக இருந்து நன்றாகத் திருத்திப் பணி கொண்டார்.
(சுவாமியின் வைபவங்கள் இன்னும் பல உண்டு மற்றோரு பதிவில் தொடரலாம்...)
3150
குன்றம் ஏந்திக்* குளிர் மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்
சென்று சேர்* திருவேங்கட மா மலை,*
ஒன்றுமே தொழ* நம் வினை ஓயுமே. (2)
3151
ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்பு பிணி,*
வீயுமாறு செய்வான்* திருவேங்கடத்து
ஆயன்,* நாள் மலர் ஆம்* அடித்தாமரை,*
வாயுள்ளும் மனத்துள்ளும்* வைப்பார்கட்கே.
3152
வைத்த நாள் வரை* எல்லை குறுகிச் சென்று,*
எய்த்து இளைப்பதன்* முன்னம் அடைமினோ,*
பைத்த பாம்பு அணையான்* திருவேங்கடம்,*
மொய்த்த சோலை* மொய் பூந் தடந் தாழ்வரே.
எம்பார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment