முருகா ...முருகா ..
முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம்,
அறுவரும் ஒருவர் ஆன நாள் கார்த்திகையில் கார்த்திகை,
அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தைப்பூசம்,
அசுரரை அழித்தாட்கொண்ட நாள் ஐப்பசியில் சஷ்டி,
வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் பங்குனி உத்திரம்...
அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக,
திருக்கையில் வேல் ஏந்திய நாளே தைப்பூசம்!
''வினைகள் தீர்க்கும் வேல்!''
''வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை''
வேல் அறிவின் அடையாளம். மயில் ஓங்காரத்தின் அடையாளம்.
துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்.
“ தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை வணங்குவ தெமக்கு வேலை “
– சைவ எல்லப்பநாவலர்
முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.
பாம்பன் சுவாமிகள் இதனை ‘படை அரசு’ என்று போற்றுவார். ‘படைநாயகம்’ என்றும் பெயருண்டு.சூரபத்மனுடன் போரிடுவதற்கு போர்க் கோலம் பூண்டுவந்த முருகனிடம், சிவபெருமான் பதினோரு ஆயுதங்களுடன் மிகவும் மகிமை பொருந்திய வேலாயுதத்தையும் அளித்தார் என்கிறது கந்தபுராணம்.
கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்பற்றி கூறப்பட்டுள்ளது.
வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், ப்ரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார்.
வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.
அருணகிரிநாதரும் சிவபிரான் வேல் அளித்த செய்தியை திருப்புகழில் காட்டுகிறார். எனினும், அம்பிகை பராசக்தி, முருகனுக்கு வேல் கொடுத்த செய்தியை மிகச் சிறப்பாக, '‘எம் புதல்வா வாழி வாழி எனும்படி வீறான வேல்தர என்றும் உளானே மநோகர…’' என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.
இச் செய்தியை கல்லாடம் நூலிலும் காண முடிகிறது.
வேல் தத்துவம் பற்றி விவரிக்கும் ஆன்றோர்கள், பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவாய் உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.
''வேலாயுதம்'' பஞ்சாட்சர மூலமந்திரம் ஆகும் என்றும் சிறப்பிப்பார்கள். சூரனை அழிக்க வேல் ஏவிய செய்தியைச் சொல்ல வந்த அருணகிரியார், '‘சிவம் எனும் அஞ்செழுத்தை முந்த விடுவோனே'’ என்று குறிப்பிடுவார்.
எனவே, வேலாயுதத்துக்கு மேலாயுதம் எங்கும் இருப்பதற்கில்லை.
பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.
பெறுதற்கரிய பேறுகள் எல்லாவற்றிலும் தலையாயது அறிவுப் பேறு ஒன்றே!
அறிவுக்கு மூன்று இலக்கணங்கள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன.
அறிவு ஆழமாக இருக்கும்; பரந்து விரிந்து விளங்கும்; கூர்மையாகத் திகழும்.இப்போது வேலாயுதத்தை நினையுங்கள். வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது. இடைப்பகுதி விசாலமாக விளங்குகிறது. நுனிப் பகுதி கூர்மையாகத் திகழ்கிறது.
‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’ என்று சிவப்பரம்பொருளைப் பாடுவார் மாணிக்கவாசகர்.
சிவப்பரம்பொருளே முருகன்;முருகனே சிவப்பரம்பொருள்.
எனவே அறிவு, ஞானம், வேல் என்பன ஒரே பொருளைத் தரும் சொற்கள் .
அறிவானது வேலைப்போன்று கூர்மையானதாக இருக்கவேண்டும்;
அறிவானது வேலைப்போன்று அகன்று விளங்கவேண்டும்;
அறிவானது வேலைப்போன்று ஆழமாக இருக்கவேண்டும்
இங்கு அறிவானது புறப்பொருள்களை மாத்திரம் அறியும் அறிவன்று; ஆன்மாவை அறியும் அறிவு; பதியினை அறியும் அறிவு; அதுவே ஆத்ம ஞானம்; அதுவே திருவடிப் பேற்றை நல்கும்.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடான குன்றுதோறாடல் (எ) திருத்தணிகை சுப்ரமணியசுவாமி
ஔஷத மயில்!
ஔஷதம் என்பதற்கு, `நோய்களைத் தீர்க்கும் மருந்து’ என்பது பொருள்.
மயில் தோகையை மருந்தாக நாட்டுப்புற வைத்தியர்கள் பயன் படுத்துவதை இப்போதும் காணலாம்.
நாம் இங்கு சொல்லப்போவது பிறவிப்பிணியாகிய நோயைத் தீர்க்கும் மயிலாகும். பவரோக வைத்தியநாதனாகிய முருகப் பெருமான், இம்மயில்மீது அருவமாக எழுந்தருள்கிறான். அவன் இருப்பதைக் குறிக்க வேல் மட்டுமே விளங்கும்.
தவத்திரு பாம்பன் சுவாமிகளுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, மயிலும் வேலும் தோன்றி அந்நோயை நீக்கியது இங்கு எண்ணத்தக்கதாகும். அந்த நிகழ்ச்சியை அவர் `அசோக சாலவாசம்' எனும் நூலில் விவரித்துள்ளார்.
அவருக்கு இரண்டு பொன் மயில்கள் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது.
பல அடியார்களின் வாழ்வில், மயில் தன் தோகையால் வீசுவதுபோன்ற தோற்றங்கள் ஏற்பட்ட பிறகு அவருடைய நோய் தீர்ந்த வரலாறுகள் உள்ளன. எனவே, இந்த மயில் `ஔஷத மயில்’ எனப்பட்டது. இதில் முருகன் அருவமாக எழுந்தருளியிருப்பதால், மயில்மீது அவனுடைய சக்திவேல் மட்டுமே தோன்றும்.
''வேலும் மயிலும் துணை '' ''வேல் அறிவின் அடையாளம். மயில் ஓங்காரத்தின் அடையாளம். துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்''.
- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் .
தருமபுரி, அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
பாடல் 28 ... வேலே விளங்கும்
வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான்மன வாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ் வாறு புகல்வதுவே.
......... சொற்பிரிவு .........
வேலே விளங்கும் கையான் செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி
மாலே கொள இங்ஙன் காண்பது அல்லால் மனம் வாக்குச் செய-
லாலே அடைதற்கு அரிதாய் அரு உருவாகி ஒன்று
போலே இருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே?
......... பதவுரை .........
வேலாயுதமே விளங்கும் திருகரத்தையுடைய திருமுருகப்பெருமானின்
சிவந்த திருவடியில் விழுந்து அன்புடன் வணங்குவதே அப்பரம்பொருளை
இவ்வுலகத்தில் காண்பதற்குரிய ஒரே வழியாகும். மனம், வாக்கு, செயல்
என்ற முக்கரணங்களால் பெறுதற்கு அரியதாகி அருவமும் உருவமும்
ஆகி எப்போதும் மாறுபாடின்றி ஒரு தன்மையாகவே திகழும்
பரம்பொருளை வேறு எவ்வாறு எடுத்துச்சொல்வது?
குமாரவயலூர் முருகப் பெருமான்
ஓம் முருகா சரணம்
ஓம் சண்முகா சரணம்
அன்புடன்
அனுபிரேம் 💗💗💗💛
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. படங்களும், முருகனைப் பற்றிய குறிப்புக்களும் நன்றாக உள்ளது. குழந்தை முருகன்கள் நன்றாக உள்ளனர்."வேல் இருக்க வினையுமில்லை மயில் இருக்க பயமுமில்லை." என்ற பாடலை பாடி முருகனை பணிந்து வணங்கி கொண்டேன்.இந்நன்நாளில் இறைவன் நமக்கு பல நலன்களை தந்தருள வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எத்தனையோ பாடல்கள். "தைப்பூசத் திருநாளிலே" என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தைப்பூச வாழ்த்துக்கள் கமலா அக்கா ..
Deleteநிச்சியமாக .."வேல் இருக்க வினையுமில்லை மயில் இருக்க பயமுமில்லை."
முருகன் துணை
தலைப்பைப் படித்தவுடன் 2004ல் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் ஒரு சாஃப்ட்வேர் implementation கம்பெனியைத் தேர்ந்தெடுக்க சிங்கப்பூர் சென்றிருந்தேன். நான் ஆலோசித்தவர்கள் சைனீஸ் (சிங்கப்பூரில் சைனீஸ், இந்தியர்கள்...என்று கலந்துள்ளனர். அனைவரும் அந்த நாட்டின் குடிமக்கள்). அவர் என்னைச் சில இடங்களுக்கு மாலை கூட்டிப்போனார். 'தப்பூசம்' எங்களுக்கு முக்கியமான விழா என்றார். அனைத்து பிரிவினரும் கூடி ஒரே நாட்டின் குடிமக்களாக நன்றாக வாழ்வதற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ReplyDeleteஆமாம் சார் நம்மூர் போல இப்பொழுது உலகெங்கும் முருகன் புகழ் பரந்து விரிந்து உள்ளது
Deleteஅம்மாடி... தைப்பூச சிறப்புப் பதிவு மிக அருமை. முருகனின் சிறப்பு யாவற்றையும் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDelete"வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழி காட்ட மோவிலுக்கு சென்றேனடி.. முருகன் கொலுவிருக்க கண்டேனடி..... "
சூலமங்கலம் சகோதரிகள் பாடல் காதில் ஒலிக்கிறது!
நன்றி சார் எல்லாம் முருகன் அருள்
Delete// மோவிலுக்கு சென்றேனடி //
ReplyDelete'கோவிலுக்கு' என்று திருத்தி வாசிக்கவும்!