21 February 2025

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம்

நேற்று (20/02/2025) மாசி விசாகம் ...



நம்மாழ்வார் அவதார வைகாசி விசாக உற்சவம் நவதிருப்பதி பெருமாள்களின் 9 கருட சேவையுடன் உற்சாகமாகக் கொண்டாடப்படும்.


இது என்ன மாசி விசாக  உற்சவம்...

ஒரு மாசி மாத விசாகத்தன்று தான், ஆழ்வார் திருநகரியில் நாம் சேவிக்கும் உற்சவ மூர்த்தியான, பின்னானார் வணங்கும் சோதியாக, நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்குக் கிடைத்தார்.

தை விசாகத்தன்று மதுரகவி ஆழ்வார் தம் திருவாரதனைக்காக ஒரு ஆழ்வார் விக்ரகம் வேண்டும் என்று நம்மாழ்வாரைப் பிரார்த்தித்தார்.

நம்மாழ்வார் தாமிரபரணி ஆற்று தீர்த்தத்தை எடுத்து நன்றாகக் காய்ச்சினால் தம் விக்ரகம் கிடைக்கும் என்று அருளினார்.

மதுரகவியாரும், தாமிரபரணி பொருநல், சங்கணித்துறையிலிருந்து தீர்த்தம் எடுத்துக் காய்ச்சிய போது, ஒரு விக்ரகம் கிடைத்தது. 

ஆனால் அந்த மூர்த்தி நம்மாழ்வார் போல இல்லை.

  மதுரகவிகள் ஆழ்வாரிடம் இது பற்றிக் கேட்க, அவர் "இவரே பவிஷ்யத ஆசார்யர்-வருங்காலஆசார்யர்(ராமாநுஜர்). இவரைத்தான் "பொலிக!பொலிக!! போயிற்று வல்லுயிர்ச் சாபம்"என்னும் பாசுரத்தில் அடையாளம் காட்டியுள்ளேன்" என்றார்.

 ராமாநுஜர் இப்பூவுலகில் 1017 ஆம் ஆண்டு அவதரிப்பதற்கு, 4000 ஆண்டுகளுக்கு முன்னமே, நம்மாழ்வார் அவருடைய விக்ரகத்தை, மதுரகவிகளுக்குத் தந்தருளினார். 

மதுரகவிகள் மீண்டும் ஆழ்வார் விக்ரகம் வேண்டவே, மீண்டும் ஒரு முறை தாமிரபரணி தீர்த்தத்தைக் காய்ச்சுமாறு கூறினார். அவ்வாறு செய்த போது ஒரு மாசி விசாகத்தில் நம்மாழ்வார் விக்ரகம் கிடைத்தது.

(முதலில் கிடைத்த ராமாநுஜர் விக்ரகத்தை திருப்புளிய மரத்தடியில் வைத்து ஆராதனை செய்தனர்.காலப்போக்கில் அந்தவிக்ரகம் பூமிக்குள் புதைந்து விட, நம்மாழ்வார், திருவாய்மொழிப் பிள்ளையின் (மணவாள மாமுனிகளின் ஆசார்யர்) கனவில் இவரைக் காட்டிக் கொடுக்க, அவர் அந்த விக்ரகத்தை எடுத்து "ராமாநுஜ சதுர்வேதி மங்கலம்" என்னும் ஊர் அமைத்து, அங்கு ராமாநுஜர் கோவில் கட்டி அங்கு பிரதிஷ்டை செய்தார்.)




ராமாநுஜரை முதலில் தந்தருளிய மகத்துவம்:

நம்மாழ்வார் விக்ரகத்தை வேண்டிய மதுரகவிகளுக்கு, ராமாநுஜரை ஏன் முதலில் வரச் செய்தார்?

ஆழ்வார் திருநகரியில் ஆழ்வாரின் திருவடிகள் "ராமாநுஜன்" என்று போற்றப் படுகின்றன.

மற்ற திவ்யதேசங்களில்/திருக் கோயில்களில் ஆழ்வாரின் திருவடிகள் "மதுரகவிகள்" என்று அழைக்கப்படுகின்றன. எல்லாத் திவ்ய தேசங்களிலும், பெருமாள் கோயில்களிலும் பெருமாளின் திருவடிகள் நம்மாழ்வாரின் மற்றொரு திருநாமமான சடகோபர் என்னும் பெயரில் "சடகோபம்- சடாரி" என்று அழைக்கப் படுகின்றன. நாம் பெருமாளை/ஆசார்யரைச் சேவிக்கும் போது அவருடைய "திருவடிகளையே" முதலில் சேவிக்கிறோம்.

திருவடிகளிலேயே சரணம் அடைகிறோம். 

பெரியபெருமாள், திருப்பாணாழ்வாருக்குத் தம் திருமேனியழகைக் காட்டி அருளிய போது, காட்டவே கண்ட பாணர் 

"திருக் கமலபாதம் வந்து என்கண்ணின் உள்ளன ஒக்கின்றவே" என்று திருவடிகளை முதலில் சேவித்தார். 

நம்மாழ்வாரும் தம் திருவடிகளான, ராமாநுஜரை முதலில் காட்டி அருளினார்.

மதுரகவிகளும் "மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே" என்று கண்ணிநுண் சிறுத்தாம்பு இரண்டாம் பாசுரத்தில் பாடுகிறார்.

எனவே வைகாசி விசாகத்துக்கு உள்ள மேன்மை, மாசி விசாகத்துக்கும் உண்டு.

நாம் பிரத்யட்சமாக சேவிக்கும் நம்மாழ்வார் அவதரித்தது,மாசி விசாகத்தில்.




இந்த ஆண்டு மாசி விசாக  உற்சவம்-

நேற்று  (20/02/25) மாசி விசாகம் ! இந்த ஆண்டு உற்சவம் 13 நாட்கள்-

09/02/25 முதல் 21/02/ 25 வரை விமரிசையாக நடை பெறுகிறது. 

10 ஆம் நாள்  ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் பிராட்டிமாருடன் தெப்பத்தில் எழுந்தருளினார். (கோயிலுக்கு மேற்கில் திருநெல்வேலி சாலையில் 1 கி.மீ. தூரத்தில் தெப்பக்குளம் உள்ளது)

11 ஆம்  திருநால்  இரவு 8 மணிக்கு ஆழ்வார் -ஆசார்யர்கள் தெப்போற்சவம் நடைபெற்றது.


ஆழ்வார்,ஆசார்யர்கள் தெப்போற்சவம் !!

 இரவு 8 மணிக்கு ஆழ்வார், 

ஆசார்யர் தெப்பத்தில் ஸ்ரீநம்மாழ்வார்--நாச்சியார் திருக்கோலத்தில், 

ஆழ்வார் அறிமுகப்படுத்திய மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஸ்ரீபவிஷ்யதாசார்யர்-- ராமாநுஜர், 

ஆழ்வாரில் ஆழ்ந்த ஸ்ரீ கூரத்தாழ்வான், 

ஸ்ரீபிள்ளை லோகாசார்யர், 

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஆகியோர் எழுந்தருளினார்கள்.


ராமாநுஜரும், ஆழ்வானும் ஆழ்வாருக்கு வலப்புறத்திலும், தேசிகனும், பிள்ளைலோகாசார்யரும், இடப்புறத்திலும்.பவிஷ்யதாசார்யர் மற்றும் கூரத்தாழ்வானுக்கு இராமாநுஜ சதுர்வேதி மங்கலத்தில் தனிச்சந்நிதிகள் உள்ளன.

வடக்கு மாடவீதியில் வேதாந்த தேசிகனுக்கும், பிள்ளை லோகாசார்யருக்கும், தனிச் சந்நிதிகள் உள்ளன.

முன்னதாக நம்மாழ்வார் திருச்சிவிகையில் எழுந்தருளி வரும்போது,மேற்கு, வடக்கு மாட வீதி சந்திப்பில் தேசிகனும்,பிள்ளைலோகாசார்யரும் ஆழ்வரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

பவிஷ்யதாசார்யர் சந்நிதி முகப்பில் பவிஷ்யதாசார்யரும்,ஆழ்வானும் வரவேற்றனர்.

அங்கிருந்து ஆழ்வார் ராமாநுஜர்,தேசிகன்,ஆழ்வான், பிள்ளை லோகாசார்யர் ஆகியோர் தொடர தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். 

திரும்புகாலில் மேற்கு மாட வீதி முனையில் நம்மாழ்வாருக்கு முன்னால் ஆசார்யர்கள்  எழுந்தருளி நிற்க ஆழ்வார் அவர்களுக்கு "ஸ்ரீராமாநுஜம்" சாதித்தருளினார்.

ஆசார்யர்கள் ஒவ்வொருவராக ஆழ்வாரை வலம் வந்து, மங்களாசாசனம் செய்து விட்டு அவரவர் ஆஸ்தானம் அடைந்தனர்.

ஆழ்வாரும் தமது ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார்.

"திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்,

கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்

உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே !"

(கண்ணிநுண் சிறுத்தாம்பு --3)

என்று மதுரகவி ஆழ்வார் பாடியபடி நம்மாழ்வாருக்கு உரியனாய்/அடியவ

னாய் இருந்தால்,அவர் ஸ்ரீமந்நாராயணனை--பொலிந்து நின்ற பிரானைக் காட்டிக் கொடுப்பார்.

நம்மாழ்வாருக்கு அடியார் என்றால் அவர் திருவடிகளில் சரணடைய வேண்டும்.

ஆழ்வாரின் திருவடிகள் எம்பெருமானார்--'ராமாநுஜன்' அன்றோ ? 


"உறு பெருஞ் செல்வமும், தந்தையும், தாயும் உயர்குருவும்,

வெறி தரு பூமகள் நாதனும்,  மாறன் விளங்கிய சீர்--

நெறி தரும் செந் தமிழ் ஆரணமே என்று, இந் நீள் நிலத்தோர்* 

அறிதர நின்ற, இராமானுசன் எனக்கு ஆரமுதே !"(இரா.நூற்.19)

எம்பெருமானார் உத்தாரக ஆசார்யர்.

அவருக்கு அடுத்து வந்த ஆசார்யர்கள் அனைவரும்--உபகார ஆசார்யரான அஷ்மத் ஆசார்யர் வரை --நம்மை எம்பெருமானார் திருவடிகளில் சேர்த்து விடுவர்.

அந்த வகையில் பெருமாள் தெப்பம் முதலாக, தொடர்ந்து ஆழ்வார், ஆசார்யகள் தெப்பம்.













நம்மாழ்வாரைப் பாடத் தொடங்கிய மதுரகவி ஆழ்வார், ஆழ்வாருக்கு மிகவும் உயிரான கண்ணன் எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் அனுபவிக்கிறார்.

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2)

1   937

நம்மாழ்வாரின் பாசுரங்களே தனக்கு மிகவும் இனிமையாக இருப்பதாகவும் அவற்றைச் சொல்லிச் சொல்லியே தன்னைத் தரித்துக்கொள்வதையும் விளக்குகிறார்.


நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

2    938


நம்மாழ்வாரின் அடியவனாக இருப்பதாலே எம்பெருமான் தானே விரும்பி வந்து மதுரகவி ஆழ்வாருக்குத் தன் தரிசனத்தைக் காட்டிக்கொடுத்த நன்மையைப் பேசி மகிழ்கிறார்.


திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே  

 3 939


ஆழ்வார் நமக்குச் செய்த நன்மையைப் பார்த்தால், அவருக்கு எதுவெல்லாம் விருப்பமோ, அவற்றை நாமும் விரும்ப வேண்டும் என்கிறார். மேலும் தன்னுடைய தாழ்ச்சியையும் ஆழ்வார் தன்னை ஏற்றுக்கொண்ட விதத்தையும் பேசி அனுபவிக்கிறார்.


நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலின் 
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

4   940


தான் முன் பாசுரத்தில் கூறிய தாழ்ச்சியை விளக்கி, அப்படி இருந்த தான் இப்பொழுது ஆழ்வாரின் காரணமற்ற அருளாலே திருந்தியுள்ளதைத் அறிவித்து ஆழ்வாருக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறார்.


நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும், முன் எல்லாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே

941

 
ஸ்ரீ  நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 



தொடரும் ..

அன்புடன்
அனுபிரேம் 💖💖 

No comments:

Post a Comment