ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம்
முந்தைய பதிவு -- நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம்
தீர்த்தவாரி பதிவில்(2), நம்மாழ்வார் தாம் விக்ரமாக உருவாகிய தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி கண்டருளியதை அனுபவித்தோம்.
அங்கிருந்து அவர் விக்ரகரூபம் உருவானதால்,தாமிர பரணியையும் அவருக்கு ஒரு தாய்வீடாகக் கொள்ளலாம்.
ஆனால் 21/02/25 அன்று அவர் இரண்டு தாய் வீடுகளுக்கு எழுந்தருளினார் !
1.அப்பன் கோயில்:
ஆழ்வார் திருநகரிக்கு மிக அருகில் உள்ள அப்பன் கோயில் என்னுமிடத்தில் 'காரி' (திருத்தந்தையார்)க்கும், உடையநங்கை'(திருத்தாயார்) நம்மாழ்வார் 'மாறன்' ஆக 5124 வருடங்களுக்கு முன்னர் ஒரு வைகாசி விசாகத்தில் அவதரித்தார்.
அவருடைய அவதார ஸ்தலத்தில் "திருவேங்கடத்து அப்பன்" கோயில் கொண்டுள்ளார். திருவேங்கடத்து அப்பன் கோயில் என்பதே 'அப்பன் கோயில்' என்று வழங்கப் படுகிறது.
மாசி விசாகம் உற்சவம் இறுதி நாளன்று காலை 6.45க்கு 'அப்பனைச் சேவிக்க, ஆழ்வார் தம் ஆஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு விட்டார். 7.45க்கு அப்பன் கோயில் எழுந்தருளிய ஆழ்வாருக்கு, அப்பன் சூடிக்களைந்த மாலை, சடாரி, பரிவட்டம் மரியாதை செய்யப் பட்டது.
2. தந்தை தாயான தேவர்பிரான் கோயில்,திருத்தொலைவில்லி மங்கலம்.
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்* தேவ பிரானையே,*
தந்தை தாய் என்று அடைந்த* வண் குருகூரவர் சடகோபன்,*
முந்தை ஆயிரத்துள் இவை* தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்* அடிமைசெய்வார் திருமாலுக்கே
(6-5-11)
என்று நம்மாழ்வார் 'சென்றடைந்த தந்தை தாய்' கோயிலுக்குக் காலை 8.50க்கு எழுந்தருளினார் ஆழ்வார்.
'துலை/தொலை வில்லி மங்கலம்' என்னும் திவ்ய தேசத்தில் இரண்டு எம்பிரான்கள் வெவ்வேறு கோயில்களில் சேவை சாதிப்பதால், இந்த ஊர் 'இரட்டைத் திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆழ்வார் இரண்டு எம்பிரான்களையும் ஒரே திவ்ய தேசமாகக் கொண்டு பாடியுள்ளார்.
முதலில் வடபுறம் உள்ள அரவிந்தலோசனன் சந்நிதியில் மங்களாசாசனம்.
முன் மண்டபத்தில் ஆழ்வாரை வரவேற்க, பெருமாள் வழி மேல் லோசனம்-விழி வைத்துக் காத்திருந்தார். பெருமாளின் சடாரி,மாலை, பரியட்டம் ஆழ்வாருக்குச் சாற்றப்பட்டு கும்ப தீபாராதனை செய்யப்பட்டது.
அப்போது அரையர் ஸ்வாமி, அரவிந்த லோசனனை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த,
திருந்து வேதமும் வேள்வியும்* திருமா மகளிரும் தாம்,* மலிந்து
இருந்து வாழ் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
கருந் தடம் கண்ணி கைதொழுத* அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்*
இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'* என்று என்றே நைந்து இரங்குமே.
(6-5-8)
என்று தாள இசையுடன் சேவித்தார்.
திருவாய்மொழி (10-10) கோஷ்டி முடிந்து அனைவருக்கும் தீர்த்தம், ஸ்ரீராமாநுஜம், திருத்துழாய் சாற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தென்புறம் உள்ள 'தேவர்பிரான்' கோயிலுக்கு எழுந்தருளினார்.
தேவர்பிரானே, எதிர்கொண்டு அழைத்த, தேவமைந்தன்:
ஆழ்வார், அர்ச்சிராதி மார்க்கத்தில் பயணித்த தம்மை தேவர்கள், நித்யசூரிகள் எல்லோரும் ஆனந்தமாக வரவேற்றதைப் பற்றி
சூழ்விசும் அணி முகில்* தூரியம் முழக்கின*
ஆழ் கடல் அலை திரைக்* கை எடுத்து ஆடின*
ஏழ் பொழிலும்* வளம் ஏந்திய என் அப்பன்*
வாழ் புகழ் நாரணன்* தமரைக் கண்டுஉகந்தே. (2)
என்று தொடங்கும் 10-9-1 ஆம் பாசுரத்திலிருந்து 10 பாசுரங்களில் மிக அலங்காரமாகப் பாடியுள்ளார்.
இவை பத்துக்கும் சிகரமாக 11 ஆம் பாசுரத்தில்,
வந்துஅவர் எதிர் கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம் இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்து அலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள் ஆயிரத்து* இவை வல்லார் முனிவரே. (2)
என்று கொண்டாடுகிறார். இங்கு 'வந்து அவர்' என்பது "பிராட்டியோடே கூட எம்பெருமான் தாமே வந்து எதிர்கொள்ள"என்கிறார் நம்பிள்ளை.
நம் போன்ற ஜீவாத்மாக்களுக்காக, எம்பெருமான் ஆழ்வாருக்கு வைகுண்டத்தில் அளித்த வரவேற்பை, இங்கு காட்டிக் கொடுக்கிறார்.
ஆம்; தேவர்பிரான், ஸ்ரீதேவி,பூதேவி தாயார்களுடன் திருச்சிவிகையில் கோயில் வாசலுக்கு வெளியே வந்து, தம் அருமைத் திருக்குமாரனை எதிர் கொண்டு வரவேற்றார்.
தேவர்பிரான் தம் சடாரி ,மாலை பரியட்டம் ஆகியவற்றை ஆழ்வாருக்குச் சாற்றி பொங்கும் பரிவுடன் அழைத்துச் சென்றார்.
அரையர் ஸ்வாமி, தந்தை தாய் பாசுரமான,' சிந்தையாலும்,சொல்லாலும், செய்கையினாலும் தேவ பிரானையே ' பாசுரத்தைத் தாளத்துடன் சேவித்தார்.
முன் மண்டபத்தில் ஆழ்வாரும், பெருமாள்,பிராட்டியரும் எழுந்தருளிய பின்(நாற்புறமும்) திரையிடப்பட்டது. பல காலம் பிரிந்திருந்த தனயன், தம்மைப் போற்றிப் பாடி, வேதத்தைத் தமிழில் செய்து, சான்றோன ஆகிய வைபவங்கள் குறித்து அவர்கள் உரையாடினரோ?
பேச மறந்தனரோ?
கொஞ்சிக் குலாவினரோ? கொண்டாடினரோ?
தனயனுடன் வந்திருந்த அடியார்கள் அனைவருக்கும், தேவர் பிரான் தம் கோயில் மண்டபத்திலேயே அருமையான மதியப்பிரசாதம் வழங்கினார்.
திருமஞ்சனம்,சாற்று மறை:
மதியம் 3.30க்கு ஆழ்வாருக்குத் திருமஞ்சனம் தொடங்கினர். ஒரு இளம் அர்ச்சகர், ஆழ்வாரைக் குழந்தை போல் பாவித்து, மிக மென்மையாக/நேர்த்தியாக திருமஞ்சனம் செய்தார். ஸ்தலத்தார் ஸ்வாமி திருமஞ்சனக் கட்டியம் கூறினார்.
அனைவருக்கும் எண்ணெய்,ஈரவாடைத் தீர்த்தம் சாதிக்கப்பட்டது. ஆழ்வாருக்குக் திருமண்காப்பு சாத்தியபோது, பவித்ர மாலைகளையும், குறவன் கொண்டையும் அணிந்திருந்தார். ( திருமுடி இடது புறம் நீட்டிக் கொண்டிருக்கும் இறகு--பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு முறை ஒரு குறவனும்,குறத்தியும் தாங்கள் வைத்திருந்த தேனும், தினைமாவும் ஆழ்வாருக்கு அமுது செய்வித்தனராம்.அந்த வைபவத்தைப் போற்றும் வகையில் ஆழ்வார் உற்சவங்களில் சில சமயத்தில் குறவன் கொண்டை அணிந்து கொள்கிறார் !)
திருமஞ்சனம் முடிந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதர தேவர்பிரானும், ஆழ்வாரும் கண்கவர் அலங்காரத்தில் அருகருகே எழுந்தருளினார்கள். அரையர் ஸ்வாமி ஆரம்பித்து வைக்க,அத்யாபகர்கள் திருவாய்மொழி 10 ஆம் பத்து சேவித்தனர்.
பாசுரங்கள் சேவித்து முடிந்ததும், அரையர் ஸ்வாமி தேவர்பிரானுக்கு முன்னால் நின்று பலவாறாக 'மங்களங்கள்' வாசித்தார். 'பெருமாள் கொண்டாட்டங்கள்' முழங்கினார். அதே போல ஆழ்வாருக்கும் தனியாக 'மங்களங்கள்'/'கொண்டாட்டங்கள்'. தேவர்பிரான் திருவடிகளில் ஆழ்வாரின் பிரதிநிதியாக ஸ்ரீ சடகோயத்தை எழுந்தருள்வித்து, திருத்துழாய் சேர்த்துக் கொண்டே இருந்தனர்.(நம்மாழ்வார் மோட்சம் போல).
பின்னர் அந்தத் திருத்துழாயில் சிறிதளவு நம்மாழ்வார் திருமுடியிலும், திருமேனியிலும் சாற்றப்பட்டது. தேவர்பிரான் அணிந்து கொண்டிருந்த இரண்டு மாலைகளும் ஆழ்வாருக்கு சாற்றப்பட்டன.
சாற்று மறை முடிந்து அனைவருக்கும் தீர்த்தம்,ராமாநுஜன், திருத்துழாய் சாதிக்கப்பட்டது.
பிரியாவிடை:
மாலை 7 மணிக்கு ஆழ்வார் பல்லக்கில், ஆழ்வார் திருநகரியில் உள்ள தம் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளப் புறப்பட்டார்.
தேவர் பிரானுக்கு ஆழ்வாரைப் பிரிய மனமில்லை. அவரும், பிராட்டிமார்களுடன் கோயிலுக்கு வெளியே எழுந்தருளி, ஆழ்வார்திருநகரி பாதை பிரியும் இடம் வரை ஆழ்வாருடன் கூடவே வந்தனர். அவ்விடத்தில் ஆழ்வாரும், பெருமாளும் வெகுநேரம் நின்றனர். பொங்கும் பரிவால்ல், பெருமாளும், பிராட்டிமாரும் தாம் சூடியிருந்த மாலைகள் எல்லாவற்றையும் --பெருமாள் 3 மாலைகள்,பிராட்டிமார் இரண்டிரண்டு மாலைகள்,
மொத்தமாக 7 மாலைகள்---களைந்து ஆழ்வாருக்குச் சூட்டினர். அவர்கள் மாலைகள் இல்லாமால் மிக எளிமையான ஆபரணங்கள் மட்டுமே அணிந்திருந்தனர் ! ஆழ்வார் புறப்பட்டு தந்தை தாயை வலம் வந்து மிக வேகமாக புறப்பட்டு ஆழ்வார் திருநகரி நோக்கிச் சென்று விட்டார்.
பிரிவாற்றாமையால் வேகமாகச் சென்றார் போலும் !
ஆனால்,தேவர்பிரானோ, ஆழ்வார்,ஆழ்வார் திருநகரி பாதையில், கண்ணுக்கு எட்டிய தூரம் செல்லும் வரை--சுமார் 3/4 கி.மீ.-- அசையாமல், வைத்த கண் வாங்காமல், ஆழ்வார் பல்லக்கையே பார்த்துக் கொண்டிருந்து பிரியா விடை தந்தருளினார். பெருமாள் திருமுக மண்டலத்தில் ஒரு மெல்லிய சோகம் !
அங்கிருந்த அனைவரும் பெருமாளின் பிரியாவிடை சோகத்தில் மூழ்கினர்.
மாசி விசாகம் உற்சவத்தின் மிக முக்கியமான உற்சவம் இன்றைய வைபவம்.
No comments:
Post a Comment