இன்று மத்வ நவமி..
மாத்வ சம்பிரதாயத்தை தோற்றுவித்த மஹான் ஸ்ரீ மத்வாச்சாரியார் பத்ரிகாச்ரமம் பிரவேசித்த தினம்.
இதே நாள் 1317 ஆம் ஆண்டு ஆசார்ய மத்வர் உடுப்பியில் கிருஷ்ணர் கோவிலுக்கு அருகே உள்ள அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு ஐத்ரேய உபநிடதம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர்மேல் பூமழை பெய்து அவரை மூடியது. அவரை அதற்குமேல் யாரும் அங்கு காண முடியவில்லை. அப்போது அவருக்கு வயது 79. ஆனால் அவர் இன்றும் இமாலயத்தில் உள்ள பத்ரிகாசிரமத்தில் வாழ்ந்து மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ வேதவ்யாசருக்கு சேவை செய்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
அத்வைத சித்தாந்தத்தை ஆசார்ய ஆதி சங்கரரும், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஆசார்ய ஸ்ரீ ராமானுஜரும் நிறுவினார்கள்.
ஆசார்ய மத்வருக்கு "பூர்ண பிரக்ஞர்" மற்றும் "ஆனந்ததீர்த்தர்"என்ற பெயரும் உண்டு.
இவர் வாயு பகவானின் மூன்றாவது அவதாரமாக கருதப்படுகிறார்.
திரேதா யுகத்தில் அனுமனும், துவாபர யுகத்தில் பீமனும் முதல் இரண்டு அவதாரங்கள். ஆசார்ய மத்வர் ஒரே நேரத்தில் அனுமனாக ராமருக்கும், பீமனாக கிருஷ்ணனுக்கும், மத்வராக வேதவியாஸருக்கும் பூஜை செய்ததைப் பார்த்த இவருடைய சிஷ்யர் த்ரிவிக்ரிம பண்டிதாசாரியார் அந்த க்ஷணத்தில் இயற்றியதே “ஹரி வாயுஸ்துதி”. இந்த சக்தி வாய்ந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்தால் துன்பம், நோய், பிரச்சனைகள் நீங்கி சகல நன்மைகள் கிட்டும்.
இவருடைய தத்துவம் என்னவென்றால்
பரமாத்மா ஸ்ரீ ஹரி மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கிறார்.
ஸ்ரீ ஹரி ஒருவரே சுதந்திரமானவர். உலகில் வாழும் மற்ற உயிர்களும் ஜடப்பொருள்களும் ஸ்ரீ ஹரியை சார்ந்தே அவர் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முக்தி என்பது பகவான் ஸ்ரீ ஹரியின் திருவடிகளை அடைவதே.
தூய பக்தித் தொண்டினால் மட்டுமே அந்த முக்தி சாத்தியமாகும். பிரத்யக்ஷம், அனுமானம், சாஸ்திரங்கள் ஆகிய மூன்றும் அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள்.
மத்வசித்தாந்தத்தின்படி இந்த உலகம் மாயை அல்ல. உண்மையானது.
ஸ்ரீ ஹரி அதாவது பரமாத்மா வேறு மற்ற நம்மைப்போன்ற ஜீவாத்மா வேறு. இதுதான் த்வைதம் என்பது. த்வைதம் என்றால் இரண்டு என்று பொருள்.
அவர் தன் கொள்கைகளுக்கு ”தத்வ வாத” என்று பெயர் சூட்டினார்.
ஆசார்ய மத்வர் கூறிய ஐந்து பேதங்கள்
1.ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
2. ஒரு ஜீவன் மற்ற ஜீவனிடமிருந்து வேறுபட்டது. ஜீவன்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டு.ஜீவன்கள் படிப்படியாக தங்களை மேம்படுத்திக் கொண்டு முக்தி நோக்கி செல்கின்றன
3.ஜீவாத்மா மற்ற ஜடப் பொருள்களிலிருந்து வேறு பட்டது
4.ஜடப்பொருள் பரமாத்மாவிடமிருந்து வேறுபட்டது
5.ஒரு ஜடப்பொருள் மற்ற ஜடப்பொருளிலிருந்து வேறு பட்டது
மகாவிஷ்ணுவை அடைய ஒரே மார்க்கம் பக்தி மார்க்கம் மட்டுமே.
ஆசார்ய மத்வர் கர்நாடகா மாநிலத்தில் உடுப்பிக்கு 12 கி.மீ தொலைவில் உள்ள பாஜகக்ஷேத்திரம் என்ற இடத்தில் மத்யகேஹ பட்டருக்கும் வேதவதிக்கும் 1238 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று 32 இலட்சணங்கள் கொண்ட மகனாய் அவதரித்தார்.
தாய் தந்தையர் இவருக்கு வைத்த பெயர் வாசுதேவன்.
தாய்மொழி துளு. பதினாறு வயதில் சந்நியாசம் பெற்றார்.ஆசார்ய மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம், நீராடிய குளம் ஆகிய எல்லாவற்றையும் பாஜக க்ஷேத்திரத்தில் இன்றும் பார்க்கலாம்.
இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.பாரததேசம் முழுதும் பாதயாத்திரை மேற்கொண்டார்.
ஸ்ரீவேதவ்யாசரிடம் பாடம் பயின்று, அவருடைய அருளினால் ப்ரம்ம சூத்ர பாஷ்யம் உட்பட 37 கிரந்தங்களை இயற்றினார். இவை சர்வ மூல க்ரந்தம் எனப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை பகவத் கீதா பாஷ்யம், ஸுத்ர பாஷ்யம், கீதா தாத்பர்யம், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம், தசோபநிஷத் பாஷ்யம், பாகவத தாத்பர்ய நிர்ணயம், அனு பாஷ்யம், த்வாதச ஸ்தோத்ரம், தந்த்ர ஸாரம் ஆகியவையாகும். ருக் வேதத்தில் உள்ள முதல் 40 சூக்தங்களுக்கு அவர் பாஷ்யமும் செய்து அருளியுள்ளார். முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் கொண்ட மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்ற கிரந்தம் மகாபாரதத்தின் உட்கருத்துக்களை யெல்லாம் எடுத்துச்சொல்வது.
மத்வ சம்பரதாயத்தில் முதன்மையாக ஸ்ரீ ஹரியை வழிபட்டாலும், ருத்ர வழிபாடுகளையும் மேற்கொண்டு மத்வ யதிகளுக்கு அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்திய பெருமை ஆசார்ய மத்வரையே சாரும்.
உலகப் பிரசித்தி பெற்ற உடுப்பி கிருஷ்ணர் கோயிலை நிர்மாணித்து கிருஷ்ண விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தவர் இவரே.
இன்றும் உடுப்பியில் அவர் ஏற்படுத்திய எட்டு மடங்களின்.( கிருஷ்ணாபூர் , சிரூர்,காணியூர், சோதே,பாலிமார், அதமார், பெஜாவர், புத்திகே) பீடாதிபதிகள் அங்குள்ள கிருஷ்ணர் விக்கிரகத்திற்குப் பூஜை செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு மடத்தின் பீடாதிபதியும் ஆசார்ய மத்வர் ஏற்படுத்திய " பர்யாய" முறைப்படி இரண்டு வருடங்கள் பூஜை செய்யலாம். ஒவ்வொரு மடத்தின் இரண்டு வருட காலம் தொடங்கும்போது விறகுகளை கோயிலுக்கு வெளியே தேர் போல அடுக்கி வைத்து அந்த விறகுகளை தினமும் சமையல் செய்ய உபயோகித்து தினமும் அன்னதானம் செய்யப்படுகிறது. இரண்டு வருடம் முடியும்போது விறகு தீர்ந்து விடும்.
ஆசார்ய மத்வரின் வாழ்க்கையில் நடந்த பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய "சுமத்வவிஜயம்" என்ற நூலில் உள்ளன.
அவற்றில் இரண்டு நிகழ்வுகள் மட்டும் கீழே ...
வாசுதேவனின் தந்தை மத்யகேஹ பட்டருக்கு கடன் கொடுத்தவர் கடனைத் திருப்பிக்கேட்க வீட்டுக்கு வந்தாராம். கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் தந்தை தவித்ததைப் பார்த்த வீட்டின் பின்புறம் இருந்த புளிய மரத்தின் அடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வாசுதேவன் கை நிறைய புளியங்கொட்டைகளை எடுத்து வந்து கடன் கொடுத்தவரிடம் கொடுத்து எடுத்துக்கொண்டு போகச்சொன்னதும் கடன் கொடுத்தவரும் அதை எடுத்துக்கொண்டு போக வீட்டை அடைந்ததும் புளியங்கொட்டைகள் தங்கக்காசுகளாக மாறியிருந்ததாம்.
ஒரு முறை ஆசார்ய மத்வர் தன் சிஷ்யர்களோடு பதரிகாஸ்ரமத்திலிருந்து திரும்பி வந்தபோது மறு கரைக்கு செல்ல கங்கை நதியைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனால் அங்கே படகுகள் இருக்கவில்லை.
ஆசார்ய மத்வர் தன் சிஷ்யர்களை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு கங்கை நதிநீர்மேல் நடந்தார். அவர் சிஷ்யர்கள் கண்ணிலிருந்து மறைந்தார்.
படகுகள் இல்லாமல் கங்கை நதியின் அடுத்த கரையை அடைந்தது ஆச்சரியம். அவர் அணிந்திருந்த வஸ்திரங்கள் நீரில் நனையாதது இன்னுமொரு ஆச்சரியம். இதையறிந்த அந்த ராஜ்ஜியத்தின் மன்னன் ஆசார்ய மத்வரின் சிஷ்யர்கள் மறு கரையிலிருந்து அழைத்துவர படகுகள் ஏற்பாடு செய்து கொடுத்தானாம்.
ஆசார்ய மத்வரின் பரம்பரையில் வந்த ஜயதீர்த்தர், பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், ஸ்ரீ பாத ராஜர் , வியாஸராஜர், வாதிராஜர், ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் மற்றும் பலர் மத்வர் போற்றிய கொள்கைகளையும், தர்மத்தையும் நிலை நாட்டுவதற்காக பாடுபட்டனர்.
இவரது வழி வந்த மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் உலகப் பிரசித்தி பெற்ற குரு என்பது குறிப்பிடத்தக்கது.
மத்வ சித்தாந்தத்தை கடைபிடிக்கும் உலகெங்கும் உள்ள மத்வர்கள் வீடுகளிலும், ஆஞ்சநேயர் கோவில்களிலும், உடுப்பியிலும் மற்றும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள மத்வ மடங்களிலும்,வெளிநாடுகளில் உள்ள மத்வ மடங்களிலும் மத்வ நவமி இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் திவ்ய சேவை இன்று
541.
ஆவல் அன்பு உடையார்* தம் மனத்து அன்றி-
மேவலன் விரை சூழ்* துவராபதிக்-
காவலன்,கன்று மேய்த்து விளையாடும்*
கோவலன்வரில்* கூடிடு கூடலே!*
643.
பொருத்தம் உடைய நம்பியைப்* புறம்போல் உள்ளும் கரியானைக்*
கருத்தைப் பிழைத்து நின்ற* அக் கரு மா முகிலைக் கண்டீரே?*
அருத்தித் தாரா கணங்களால்* ஆரப் பெருகு வானம் போல்*
விருத்தம் பெரிதாய் வருவானை* விருந்தாவனத்தே கண்டோமே*
644.
வெளிய சங்கு ஒன்று உடையானைப்* பீதக ஆடை உடையானை*
அளி நன்கு உடைய திருமாலை* ஆழியானைக் கண்டீரே?*
களி வண்டு எங்கும் கலந்தாற்போல்* கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்*
மிளிர நின்று விளையாட* விருந்தாவனத்தே கண்டோமே*
3787.
மற்றொன்று இல்லை; சுருங்கச் சொன்னோம்*; மா நிலத்து எவ் உயிர்க்கும்*
சிற்ற வேண்டா; சிந்திப்பே அமையும்* கண்டீர்கள்; அந்தோ!*
குற்றம் அன்று; எங்கள் பெற்றத் தாயன்* வடமதுரைப் பிறந்தான்*
குற்றம் இல் சீர் கற்று, வைகல்* வாழ்தல் கண்டீர் குணமே.
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரண்..
அன்புடன்
அனுபிரேம்💞💞💞
நல்ல விவரமாக எழுதப்பட்ட பதிவு. பெஜாவர் மடம் பெயர் மாத்திரம் கேள்விப்பட்டிருக்கேன். உடுபி இன்னும் சேவிக்கும் வாய்ப்பு வரலை
ReplyDelete