ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம்-
முந்தைய பதிவு -- நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம்
மாசி விசாகம் அன்று காலை ஆழ்வார் விஸ்வரூபம் முடிந்து 6 மணிக்கு, நம்மாழ்வார் மூலவர் திருமஞ்சனம்.பின்னர் தங்கப்பல்லக்கில் ஆழ்வார் உள்பிரகாரப் புறப்பாடு.
பொலிந்து நின்றபிரான் ஸ்ரீசடாரியும்,சூடிக்களைந்த மாலையும் ஆழ்வாருக்குச் சாத்தப்பட்டது.
7.45க்கு ஆழ்வார் தீர்த்தவாரிக்குப் புறப்பாடுஆவார்.
தாமிரபரணி திருச்செங்ஙனித் துறைக் கரையில் உள்ள சிங்கப்பெருமாள் சந்நிதிக்கு 8 மணிக்கு எழுந்தருளினார். பின் 9 மணி முதல் 10 மணி வரை சந்நிதி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார்.
நிறைய பக்தர்கள் நீராஞ்சனத்துக்காக தேங்காய்,நெய் சமர்ப்பித்தனர். தேங்காய் மூடிகளில்,நெய் ஊற்றி தீபாராதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் திருமஞ்சன எண்ணெய்.மஞ்சள் காப்பு,ஈரவாடைத் தீர்த்தம், சாதிக்கப்பட்டது.
தீர்த்தவாரி:
ஆழ்வார் காலை 10 மணிக்கு தீர்த்தவாரிக்கு, பல்லக்கில் எழுந்தருளினார். ஆற்றில் இறங்கும் முகத்துவாரத்தில் ஒரு மேசையின் மேல், திருமஞ்சன வேதி வைத்து, அதில் ஆழ்வாரை எழச் செய்தனர்.
ஆசார்யரையும்,பவிஷ்யத ஆசார்யரையும் தந்தருளிய தாமிரபரணி-தண்பொருனை நதி, தன் தலைமகனை நீராட்டும் உவகையில், தண்ணென்று, ஸ்படிகம் போன்று, தூய பெருநீராக ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தது.
ஆழ்வார் திருமுடி, திருமேனியில் மல்லிகைச் சரங்கள் சூட்டி, ரோஜா மாலை அணிந்திருந்தார். சந்தனம்/மஞ்சள் கரைசலை ஆழ்வார் மேல் திருமஞ்சனம் செய்து கொண்டே இருந்தார்கள். பின் தாமிரபரணி தீர்த்த திருமஞ்சனம்.
அதன்பின்,இரண்டு அர்ச்சகர்கள் ஆழ்வாரைக் கைத்தலமாக எழச்செய்து தாமிரபரணியில் ஒரு முழுக்கு செய்தார்கள். ஆற்றில் நின்றிருக்கும் பக்தர்கள் அனைவரும் ஆற்றில் முழுகி எழுந்தனர். பின்னர் ஆழ்வாருக்குத் கட்டியிருந்த காப்பு அகற்றி, மீண்டும் ஒரு முறை ஆற்றில் தீர்த்தம் ஆடச்செய்தனர்.
பவிஷ்யதாசார்யருக்கு அநுக்ரஹம்:
அதன்பின் ஆழ்வார் பல்லக்கில், ஸ்ரீராமாநுஜ சதுர்வேதி மங்கலத்தில் உள்ள பவிஷ்யதாசார்யர் சந்நிதிக்கு எழுந்தருளினார். மண்டபத்தில் ஆழ்வாருக்கு,இடப்புறமாக சற்றுக்கீழே பவிஷ்யதாசார்யர், ராமாநுஜர் எழுந்தருளி இருந்தார். ஆழ்வார் இங்கு திருமண் சாற்றிக் கொண்டார். திருவாய் (பத்தாம் பத்து) மொழி கோஷ்டி ஆனது.
அனைவருக்கும் தீர்த்தம், ஸ்ரீராமாநுஜம் சாதிக்கப்பட்டது.
ஆழ்வார் அங்கிருந்து புறப்படும் போது,பவிஷ்யதாசார்யர் மண்டப முகப்பு வரை கைத்தலமாக எழுந்தருளி ஆழ்வாருக்குப் பிரியாவிடை கொடுத்தார்.
சாற்றுமறை:
ஆழ்வார் சந்நிதிக்கு முன்னால் இருக்கும் திண்ணையில் ஆழ்வார் பட்டுமெத்தை ஆசனத்தில் வீற்றிருந்தார். ஜீயர்/ ஆசார்யர்கள் மந்திர உச்சாடனம் செய்து ஆழ்வாருக்கு மந்திர அட்சதை செலுத்தினர்.இந்த மந்திர அட்சதை அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் ஆழ்வார் பொலிந்து நின்ற பிரான் சந்நிதிக்குச் சென்று,முன் மண்டபத்தில் பெருமாளுக்கு, இடப்புறம்,சற்றுக்கீழே பெருமாளை நோக்கி எழுந்தருளினார்.
ஜீயர்/அரையர்/அத்யாபக ஸ்வாமிகள் கருட மண்டபத்தில் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி சேவித்தார்கள்.
மதியம் 2 மணிக்கு மண்டபத்தில் திருவாய்மொழி சாற்றுமறை, தீர்த்தம், ஸ்ரீ ராமாநுஜம் சாற்றி பிரசாத விநியோகம் . இரவு 7 மணிக்குப் பெருமாள், ஆழ்வார் புறப்பாடு.
பொலிந்து நின்றபிரான்,ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவி சமேதரராய் ஒரு வெட்டிவேர் சப்பரத்திலும், ஆழ்வார் இன்னொரு வெட்டிவேர் சப்பரத்திலும் எழுந்தருள்வார்கள். மாடவீதி, ரதவீதிகளில் புறப்பாடு கண்டு, இரவு 9மணியளவில் கோயிலுக்குள் வருவார்கள்.
இராமாநுச நூற்றந்தாதி சேவித்து வரும் அத்யாபகர்கள் சாற்று மறைப் பாசுரங்கள் சேவிப்பர். அதன்பின் இரவு 10 மணியளவில் அரவணை ஆராதனையுடன்,இன்றைய மாசி விசாகம் திருநாள் வைபவங்கள் நிறைவடையும்.
தாமிரபரணி:
இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்,பொதிகை மலையில் தோன்றி கிழக்காக 70 மைல் ஓடி வங்கக்கடலில் புன்னக்காயல் அருகே கலக்கிறது.
தாமிரபரணி நதிக்கரையில் பல வைணவதிவ்யதேசங்களும்,சிவ ஸ்தலங்களும் உள்ளன. அதில் மிக முக்கியமான திவ்யதேசம் ஆழ்வார் அவதரித்த 'திருக்குருகூர்' என்னும் ஆழ்வார் திருநகரி. ஆழ்வார் அவதரித்த மாதிரியே, ஒரு வைகாசி விசாகத்தில் தான் தாமிரபரணியும் தோன்றியதாம்.
இந்த நதி வற்றாத ஜீவநதி. கடுமையான வறட்சிக் காலத்திலும் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். பல அரிய மூலிகைகள், திரவியங்கள்,தாதுப்பொருட்கள் கலந்த தீர்த்தம்.இந்நதியில் தொடர்ந்து நீராடினால் தீராத நோயும் தீரும் என்கிறார்கள்.
இந்நதிக்கரையில் பல அறிஞர்கள்/மெத்தப் படித்தவர்கள் தோன்றியதால், தற்காலத்தில், தென்னிந்தியாவின் 'தேம்ஸ் நதி' என்றும் அழைக்கிறார்கள்.
நாம் நமது வீடு,வண்டி, இயந்திரம் முதலானவற்றுக்கு வருடாவருடம், வரி,சந்தா,காப்பீடு கட்டி புதுப்பித்துக் கொள்வது போல, தாமிரபரணியும் வருடத்துக்கு இரு முறை (வைகாசி/மாசி விசாகம்) நம்மாழ்வார் தீர்த்தவாரி கண்டருள்வதால் தன்னைப் புதுப்பித்து, மேலும் புனிதப் படுத்திக் கொள்கிறதோ ...!!
No comments:
Post a Comment