15 October 2018

ஸ்ரீ அனந்தாழ்வான் சன்னதி, திருமலை (8)

 ஓம் நமோ நாராயணா








அனந்தாழ்வான்   மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து, சுவாமி  ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.

ஸ்ரீரங்கத்தில் ஆச்சாரியார் ஆளவந்தாருக்குப் பின் அவரது பீடத்தில் ஏறிய ராமானுஜர், திருவாய்மொழிக்கு அனைவரும் கேட்டு மகிழும் வகையில் பொருள் கூறினார்.

அப்போது ஒரு பாடலில் ‘சிந்து பூ மகிழும் திருவேங்கடம்’ என்பதற்குப் பொருள் கூறும்போது ‘மலர் மண்டபமாகிய திருமலையில் சிறப்பாக நந்தவனம் அமைத்துத் தொண்டு செய்ய யாரேனும் இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.





திருவேங்கடவனுக்கு பணி செய்ய தாம் செல்வதாக அனந்தாழ்வார் தெரிவித்ததைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ராமானுஜர்.

அவரை ஆரத்தழுவி "அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!" என்று கூறவே. அன்றிலிருந்து, அவர் திருமலை 'அனந்தான்பிள்ளை' என்று போற்றப்பட்டார்.

ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தாழ்வான், அங்கு ஒரு பூவனத்தை நிறுவி, பெருமாளுக்கு மலர் சேவை செய்து வந்தார்.

திருவேங்கடவனுக்கு புஷ்பக் கைங்கர்யம் சமர்ப்பிக்க ஒரு புஷ்கரனியை தோண்டலானார். கர்ப்பிணியான தன் மனைவியிடம் இந்த கைங்கர்யத்தில் வேறு யாரையும் ஈடுபடுத்தாமல் தாங்கள் இருவர் மட்டுமே செய்யவேண்டும் என்று பணித்தார்.

அனந்தாழ்வான் மண்ணைத் தோண்டி கொடுக்க, அவர் மனைவி அதை சென்று தூரத்தில் கொட்டி வந்தார்.



அப்போது சிறுவன் ஒருவன் அவரின் மனைவியிடம் தான் அந்த மண்ணை கொட்டிவருவதாக வற்புறுத்தி, செய்யலானான்.




மனைவி மண்ணை சீக்கிரமாக கொட்டி வருவதையடுத்து, அனந்தாழ்வான் என்ன நடக்கிறது என்று பார்த்தார்.


சிறுவனின் செயலைப் பார்த்து கோபப்பட்ட அனந்தாழ்வான், மனைவியை கோபித்துக் கொண்டார்.

சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட, மேலும் கோபமுற்ற அனந்தாழ்வான், கையில் இருந்த கடப்பாறையை சிறுவனின் மேல் வீசினார். அது சிறுவனின் தாடையில் பட்டு இரத்தம் கசிந்தது!



இதைக் கண்ட அனந்தாழ்வான், தவறை உணர்ந்து சிறுவனின் அருகே செல்ல முயன்றார். சிறுவன் ஓட, அனந்தாழ்வானும் பின் பற்றினார்.

 திருவேங்கடமுடையான் கோவிலுக்குள் சென்ற சிறுவனைக் காணவில்லை. ஆனால், திருவேங்கடமுடையானின் திருமுகத்தில் சிறுவனுக்கு அடிபட்ட அதே இடத்தில் இரத்தக் கசிவு இருப்பதை கண்டார்.




வந்தது  திருவேங்கடவன்தான் என்று உணர்ந்தார்.

திருவேங்கடவனை தாக்கி விட்டோமே என்று பாதம் பணிந்தார்.

பச்சைக் கற்பூரத்தை எடுத்து திருவேங்கடவனின் திரு முகத்தில் அடிபட்ட இடத்தில் வைத்து அழுத்தினார். இரத்தக் கசிவு நின்றது.

இன்றும் திருவேங்கடவனின் திருமுகத்தில் இருக்கும் பச்சைக் கற்பூரம் அவனது லீலையை உணர்த்துகிறது!.






மற்றொரு நாள் அனந்தாழ்வான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரைப் பாம்பு தீண்டி விட்டது. இருந்தபோதிலும் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.

இதைக் கண்ட திருமலை வாசன். 'பாம்புக் கடிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லையே, ஏன்?' என்று கேட்டார்.

அனந்தாழ்வான், 'பாம்பின் விஷ வலிமையால் நான் இறக்க நேர்ந்தால் உமது அருளால் வைகுண்டம் தான் சென்று, அங்கும் என் கைங்கர்யங்களைத் தொடருவேன் அல்லது உமது அருளால் நான் பிழைத்திருந்தால் இங்கு தொடர்ந்து கைங்கர்யங்களைச் செய்து வருவேன்' என்று வைராக்கியமாய்ச் சொன்னார்.




அனந்தாழ்வான் உருவாக்கிய புஷ்கரணி

இராமனுசர் திருமலைக்கு வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும் தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி, "அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்" என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!

இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது. அத்தோட்டம், இப்போது 'அனந்தாழ்வான்' தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.








நாங்கள் சென்ற பொழுது கோவிலின் உள்ளே  திருப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. தசாவதார காட்சிகள் செய்யும் பணிகள் நடந்துக் கொண்டிருந்தது .அதனால் வெளியிலிருந்தே தரிசித்துவிட்டு வந்தோம்.







திருமலை ஸ்ரீவாரி  பிரம்மோற்சவம்  - ஹனுமந்த வஹான திவ்ய  சேவை.








686.   
உம்பர் உலகு ஆண்டு*  ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்*
அம்பொற் கலை அல்குல்*  பெற்றாலும் ஆதரியேன்*
செம் பவள-வாயான்*  திருவேங்கடம் என்னும்*
எம்பெருமான் பொன்மலைமேல்*  ஏதேனும் ஆவேனே


நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே.

 அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.

தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன்.

சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.

சுவாமி புஷ்கரணி ( 7)

திருமலையில் (6)

கோதையும் , பெரியாழ்வாரும் - திருமலை வேங்கடவன் தரிசனம் 5

முழங்கால் முறிச்சான் - திருமலை வேங்கடவன் தரிசனம் 4..

திருமலை வேங்கடவன் தரிசனம் 3....காளி கோபுரம்

திருமலை வேங்கடவன் தரிசனம் 2 ..
அன்புடன்,
அனுபிரேம்

3 comments:

  1. பதிவு மிக அருமை அனு.

    ReplyDelete
  2. ஒரு படத்துல இந்த கதை வரும். நான் பார்த்திருக்கேன். விஜயக்குமாரி அம்மா நடிச்சிருப்பாங்க

    ReplyDelete
  3. அனந்தாழ்வானைப் பற்றி இன்று இப்பதிவு மூலமாக அறிந்தேன். அருமை.

    ReplyDelete