10 April 2025

“பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்”







ஸ்ரீரங்கத்தில் ராமானுஜருக்கு பிறகு எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை ஆகியோர் ஸ்ரீராமானுஜரின் நியமனப்படி கோயில் நிர்வகித்து வந்தார்கள். நம்பிளையின் சிஷ்யர்களில் இரு கண்களாக போற்றப்படுபவர் இருவர் – வடக்குத் திருவீதிப்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும்.

வடக்கு திருவீதிப்பிள்ளைக்கும் அவர் மனைவி ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் கி.பி 1205ல் ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் பிள்ளை லோகாசாரியார் அவதரித்தார்.

ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். ( இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்). 

கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதன் 22ஆம் தேதி டில்லியிலிரிந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.

தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். வழியில் உள்ள  சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்துப் போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும்.

 ஸ்ரீரங்கத்தை நோக்கி முகம்மதிய படை வருகிறது என்ற செய்தி கேட்டு அடியார்கள், அரங்கனுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று அஞ்சினர்.

 ஸ்ரீரங்கநாராயண ஜீயர், அர்சகர்கள், திருகோபுரத்து நாயனார், பிள்ளைலோகாசாரியார் மற்றும் சிலர் ஒன்றுக் கூடி அழகிய மணவாளன் முன்பு இங்கேயே இருப்பதா ? அல்லது கோயிலை விட்டு புறப்படுவதா ? இதில் எது விருப்பம் என்று திருவுள்ளச் சீட்டு போட அதில் பெருமாள் கோயிலில் இருப்பதே விருப்பம் என்று வந்தது. அதன் பின் வழக்கம் போல் கோயில் வேலைகள், உத்ஸவம் என்று ஈடுபட்டனர்.


பங்குனி உத்ஸவம் ஆரம்பித்து எட்டாம் நாள் பன்றியாழ்வான்(வராகப் பெருமாள்) கோயிலில் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்த சமயம், அங்கே பன்னிராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுமியிருந்தார்கள்.

 அந்த சமயத்தில் முகம்மதியர்கள் சமயபுரம் கடந்து வருகிற செய்தி கேட்டு பிள்ளைலோகாசாரியரும் அவர் சிஷ்யர்கலும் உடனடியாகச் செயலில் இறங்கினார்கள்.


பிள்ளைலோகாசரியர் மற்றும் அவரது சீடர்கள் திருவரங்கனின் மூலவரை காப்பதற்காக கருவறை வாசலை கல்சுவரால் அடைத்து, சுவருக்கு முன்பு தற்காலிகமாக ஒரு விக்ரஹத்தை வைத்தனர். ஸ்ரீரங்க நாச்சியார் மூலவரையும், திருவாபரணங்களையும் வில்வ மரத்தின் அடியிலெ பாதுகாப்பாக வைத்து, மற்றைய ரகசிய அறைகளையும் அடையாளம் தெரியாமல் செய்தார்கள்.

அழகிய மணவாளனையும் ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு செய்தார்.நம்பெருமாள் ஊரை விட்டு வெளியேறுகிறார் என்ற செய்தி கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் அனைவரும் வருத்தமடைந்து பெருமாளைப் பின்தொடர்ந்தால் அது பேராபத்தில் முடிந்துவிடும் என்று கருதி பிள்ளைலோகாசரியர் ஒரு சிறு தந்திரம் செய்தார்.

 சன்னதிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலையை தொங்கவிடச் செய்து, ஆலய மணியை அடிக்கச் செய்தார். இதனால் பெருமாளுக்குத் திருவாராதனம் நடைபெற்றுக்கொண்டு இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

 திரைச்சீலைக்கு மறுபுறம் திருகோபுரத்து நாயனாரும், பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடை அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேரதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் தயார் நிலையில் இருந்த மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் ஸ்ரீரங்கத்தை காவேரி ஆற்றின் தெற்கு கரையிலுள்ள மாரச்சிபுரம் அடைந்து, பிறகு மணப்பாறை மற்றும் வேலூர் மார்க்கமாக தென் திசை நோக்கி கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள்.



காட்டு வழியில் செல்லும் போது

காட்டுவழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்து சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். அப்போது நம் பிள்ளைலோகாசாரியருக்கு வயது 118 !

பல நாட்களுகளுக்கு பின் கடும் பயணத்தை மேற்கொண்ட பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை சென்றடைந்தனர். காடும், குகையும், செந்தாமரை குளமும் அதன் அருகில் வற்றாத சுனையும் அமைந்த அந்த இடமே உகந்தது என்று உணர்ந்தார்கள்.

அழகிய மணவாளனைப் பின் தொடர்ந்து வரும் முகம்மதியர்கள் மதுரையையும் தாக்ககூடும் என்பதாலேயே மதுரை நகரின் எல்லைப் பகுதியான ஜ்யோதிஷ்குடியில் ஒரு குகையில் மறைவாக அழகியமணவாளனை எழுந்தருளப் செய்து திருவாராதனம் செய்தார்.

 அப்போது நம்பெருமாள் திருமுகத்தில் வியர்வை அரும்பியது. தம்மோடு தொடர்ந்து வந்த திருமலையாழ்வாரின் திருத்தாயரான மூதாட்டியைப் பெருமாளுக்கு விசிரிவிடச் சொன்னார். அவள் பெருமாளின் திவ்யமான திருமேனி வியர்க்குமோ ? என்று வினவ அதற்கு பிள்ளைலோகாசார்யர் ”வேர்த்துப் பசித்து வயிறசைந்து” என்ற ஆண்டளின் பாசுரத்தை ( நாச்சியார் திருமொழி 12-6) நினைவுறுத்தினார். அவளும் விசிர பெருமாளுக்கு வியர்வை அடங்கியது.

இதற்கிடையில் உலூக்கான் நடத்திய படுகொலைகளும் அடித்த கொள்ளைளும் ரத்ததை உறையச் செய்பவை. கோயிலுக்குள் நுழைந்ததும் அவன் உற்சவர் விக்கிரகத்தைத்தான் தேடினான். 

உற்சவர் இல்லாத்தால் கோபத்தில் அங்கே கூடியிருந்த அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். 

அன்று மட்டும் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.

ஸ்ரீரங்கத்தில் பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் தலை துண்டிக்கப்பட்ட செய்தி கேட்டு பிள்ளைலோகாசார்யர் மிகவும் வருந்தினர். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தாலும், வயோதிகத்தாலும் வழிநடை அலுப்பினாலும் உடல்தளர்ந்து நோய்வாய்ப்பட்டார். தமக்கு அந்திம காலம் நெருங்வதை உணர்ந்ததும் தம் திருமேனியை துறக்க நம்பெருமாளிடம் விடைபெற்றுக்கொண்டார். நம்பெருமாள் திருவாய் மலர்ந்து “உமக்கும், உம் ஸ்பரிசம் பட்டவர்களுக்கும் திருக்கண்ணால் நோக்கியவர்களுக்கும் மோட்ஷம் தந்தோம்” என்று அருளினார்.

கருணை உள்ளம் கொண்ட இவர் தன் கண்களூக்கு எட்டியவரை மரம், செடி கொடிகளையும், சிற்றெறெம்புகளையும், ஸ்பர்சித்து அவற்றுக்குத் தம்மோடு ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்தி அவைகளுக்கும் மோட்சம் பெற அருளினார்.

கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து ஜ்யோதிஷ் குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளிபடுத்தித் திருவரசு எழுப்பினார்கள்.

”வேர்ச் சுடுவர்கள் மண் பற்றுக் கழற்றாப்போலே ஞானியை விக்ரகத்தோடே ஆதரிக்கும்” என்பது ஸ்ரீவசனபூஷ்ணத்தின் வாக்யம். இதன் பொருள் – குளிர்ச்சிக்காகவும், வாசனைக்காகவும் வெட்டிவேரை பயன் படுத்தும் போது வேரிலுள்ள மண்ணைக் கழுவி தனியாக பிரித்து எடுக்காமல் அப்படியே சூடிக்கொள்வார்கள். அது போல பகவான், ஆசாரியர்களின் திருமேனியை தன் பக்கத்தில் வைத்து ரக்ஷித்துக்கொண்டு இருக்கிறான். அகவே ஆசாரியர்கள் திருமேனியை திருபள்ளிபடுத்திய இடத்திற்கு திருவரசு என்பார்கள்.

நம்பெருமாள் பிறகு மதுரை அழகர் மலை, கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு திருநாராயணபுரம் பிறகு திருமலை, சிங்கபுரம்(செஞ்சிக்கு அருகில்) பிறகு மீண்டும் 48 வருடம் கழித்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். 

ஸ்ரீரங்கம் வந்து சேர்வதற்கு முன் கொள்ளிடக்கரையின் வடப்பகுதியில் மண்ணச்ச நல்லூரில் போகும் மார்கத்தில் அழகிய மணவாளம் என்ற கிரமத்தில் சில மாதங்கள் இருந்தார் அங்கே ஒரு வண்ணானால் அழகிய மணவாளனுகு சூட்டப்பட்ட பெயரே நம்பெருமாள் என்பது.

 “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” இந்நிகழ்விற்கு   பின்  ஸ்ரீரெங்கத்தில் ......

 ஸ்ரீரங்கம் கோவில் தற்போதைய சந்தனு மண்டபத்தில் முஸ்லிம் படைத்தளபதி ஒருவன் தங்கி இருந்து எவரையும் வழிபடவிடாமல் செய்து வந்தான். சிறிது காலம் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே வாழ்ந்த அந்த தளபதி பிறகு பல நோய்களுக்கு உட்பட்டு அதற்கு ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மந்திர தன்மைகள் காரணம் என்று எண்ணி பயந்து சமயபுரம் அருகே தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வாழ்ந்தான்.

இந்த காலத்தில் செஞ்சியில் நம்பெருமாள் இருப்பதை அறிந்த திருமணதூண்நம்பி உத்தமநம்பியை செஞ்சிக்கு அனுப்பி கண்ணனூரில்  (இன்றைய சமயபுரம்) உள்ள சுல்தானின் படை பலம் மற்றும் பல்வேறு விசயங்களை எடுத்து சொல்லி. 

கோபணார்யனை படை எடுத்து வரும் படி செய்தார்.

தற்கால போஜிஸ்வரர் கோவிலில் ஒரு சிறு கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்த சுல்தானை வெல்ல விஜயநகர சாம்ராஜியத்தை நிறுவிய ஹரிரரின் மகனான விருப்பண்ண உடையாரின் தலைமையில் (பன்றிக்கொடி கொண்டு ) உலகை தாங்கிய வராக பெருமான் கொடி சின்னம் ஏந்தி, 

ஒரு 70000 போர் வீரர்களுடன் கோபனார்யன் நம்பெருமாளையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு தற்கால மண்ணச்சநல்லூர் மேற்கே உள்ள கோபுரப்பட்டி என்கிற ஊரில் நம்பெருமாளை நிலை படுத்தி மூன்று மாதங்கள் கடுமையான போர் நிகழ்த்தி எதிர்புறம் சுமார் 100000 பேர் கொண்ட (காக்கை சின்னக்கொடி ஏந்திய துலுக்கர் ) படையை வெல்ல, தினமும் அரங்கனை வேண்டி  ஒரு தாசியை அனுப்பி அவள் மூலமாக அந்த சுல்தானை விஷம் வைத்து கொன்று அந்த படைகளை வென்றான்.

ஹோசாள மன்னனால் வெல்லமுடியாத அதே சுல்தான் படைகள் அரங்கன் “ரெங்கராஜனாக” தலைமை ஏற்று வந்த போது தோல்வியுற்று தமிழகமெங்கும் அவர்கள் வேர் அறுக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை சென்று விருப்பண்ண உடையார் வெற்றிக்கொடியை நாட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் தென் இந்தியாவில் எந்த ஒரு துலுக்கரும் இல்லை என்கிற செய்தியையும் அறிவித்தான்.

48 ஆண்டுகளுக்கு பின் அழகிய மணவாளன் ஶ்ரீரங்கம் எழுந்தருளினார். இவர்தான் அழகிய மணவாளன்  என அடையாளம் காண  யாரும் இருந்திருக்கவில்லை. பின்பு ஈரங்கொல்லியால் இவர்தான் நம்பெருமாள்  என காட்டிகொடுக்கபட்டார்.

எங்கெல்லாம் சனாதன தர்மம் அழிகிறதோ அங்கெல்லாம் நான் வருவேன் என்று துவாபரயுகத்தில் பகவத்கீதையில் உரைத்த கண்ணன் சொன்ன வார்த்தையை உண்மையாக்கிய ஒரே  தெய்வம் திரேதா யுகத்தில் ஶ்ரீ இராமபிரானின் நித்ய ஆராதன பெருமான், கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் நமது அரங்கனே !! அரங்கனே!! அரங்கனே !!!













இன்று பெருமாள் - காலையில் - 

1. அஸ்வத்த தீர்த்தம்/ அஸ்வ தீர்த்தம்- சென்று திருவடி விளக்கினார் .. 

இந்த தீர்த்ததில் - அனந்தன் - கிருஷ்ணா சிலை போல ஒன்று கண்டு எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்ய பட்டு இருக்கு - வெகு காலம் முன்பாக தனி சந்நிதி இருக்க வேண்டும். அஸ்வத்த மரம் என்பது, ஆலமரம் (பீப்பல் மரம்) என்று அழைக்கப்படும் ஒரு புனிதமான மரம். 

2. திருவானைகோவில்  வியசாராஜா மட   எல்லைகரை ஆஞ்சநேயர் கோவிலில் -அந்த கோவில் புனர்நிர்மாணம் ஆன பிறகு பெருமாள் எழுந்தருளிய காட்சி.
 
3. பில்வ தீர்த்தம் ;- இங்கு ஒரு ஸ்ரீநிவாசர் சந்நிதி இருந்தது - இந்த தீர்தம் இருக்கும் பகுதியில் பெரிய 24 கால் மண்டபம் ராணி மங்கம்மா காலத்தில் கட்டப்பட்டது - இந்த ஸ்ரீநிவாச சந்நிதி மற்றும் இடம் பற்றிய குறிப்பு ராஜா ராஜன் (தஞ்சை பெரிய கோவிளை கட்டியவன் இட்ட ஸ்ரீரங்கம் கோவில் தானத்தில் குறிப்பிடபட்டது.





பெருமாள் திருமொழி 

3. மெய் இல் வாழ்க்கை 

அழகிய மணவாளன் பால் பித்தன் எனல் 


668  

மெய் இல் வாழ்க்கையை*  மெய் எனக் கொள்ளும்*  இவ்
வையம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஐயனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்*  என்தன் மாலுக்கே (2)  1

  

669

நூலின் நேர்-இடையார்*  திறத்தே நிற்கும்* 
ஞாலம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா*  அரங்கா என்று* 
மால் எழுந்தொழிந்தேன்*  என்தன் மாலுக்கே   2



670
  
மாரனார்*  வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
பாரினாரொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆர-மார்வன்*  அரங்கன் அனந்தன்*  நல் 
நாரணன்*  நரகாந்தகன் பித்தனே 3



671
 
உண்டியே உடையே*  உகந்து ஓடும்,*  இம்
மண்டலத்தொடும்*  கூடுவது இல்லை யான்*
அண்டவாணன்*  அரங்கன் வன் பேய்-முலை*
உண்ட வாயன்தன்*  உன்மத்தன் காண்மினே  4


 
672

தீதில் நன்னெறி நிற்க*  அல்லாது செய்*
நீதியாரொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆதி ஆயன்*  அரங்கன் அந் தாமரைப்* 
பேதை மா மணவாளன்*  தன் பித்தனே  5

 


ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் - ஸ்ரீ ரெங்க நாச்சியார்

 திருவடிகளே சரணம் !!


அன்புடன்
அனுபிரேம்



16 comments:

  1. தலைப்பைப் படித்தபின் உடனே பதிவைப் பார்க்கணும் என்று தோன்றியது.

    இந்த வரலாற்றை எப்போது படித்தாலும் மனது கனக்கும்.

    இதன் வடுக்கள் தெரியாமல், ஒன்றும் தெரியாதவர்களெல்லாம் யூடியூபில், 12000 பேருக்கு முடியை எடுத்தாங்க, முடியை எடுப்பதே மரணத்துக்குச் சமம் என்றெல்லாம் பினாத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்த கலகம் நடந்த இடம், வைணவர்கள் கொல்லப்பட்ட இடம் இப்போது தெனந்தோப்பாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், எத்தகைய பெரிய வரலாறு நமது நமக்காக, நம் பெருமாளுக்காக எத்தனை பெரிய கைங்கரியம் ... நம் கண் முன்னாள் இருக்கும், சான்றுகளுடன் இருக்கும், இச்செய்திகளை நாம் முழுமையாக அறிந்துக் கொள்ளாமல் இருப்பதே பெரும் பிழை என எனக்கு தோன்றும் ...இன்னும் அவ்வரலாறு படிக்க வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்

      Delete
  2. சில படங்களின் கீழே நீங்க விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உதாரணம், குளத்தின் கீழே உள்ள பழங்கால மண்டபம், குளத்தின் மேலே உள்ள படத்தில் உள்ள தகவல் பலகை போன்றவை

    ReplyDelete
    Replies
    1. தனி தனியாக தரவில்லை ஆனால் சேர்த்து பதிவிட்டு இருக்கிறேன் சார்

      இன்று பெருமாள் - காலையில் -

      1. அஸ்வத்த தீர்த்தம்/ அஸ்வ தீர்த்தம்- சென்று திருவடி விளக்கினார் ..

      இந்த தீர்த்ததில் - அனந்தன் - கிருஷ்ணா சிலை போல ஒன்று கண்டு எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்ய பட்டு இருக்கு - வெகு காலம் முன்பாக தனி சந்நிதி இருக்க வேண்டும். அஸ்வத்த மரம் என்பது, ஆலமரம் (பீப்பல் மரம்) என்று அழைக்கப்படும் ஒரு புனிதமான மரம்.

      2. திருவானைகோவில் வியசாராஜா மட எல்லைகரை ஆஞ்சநேயர் கோவிலில் -அந்த கோவில் புனர்நிர்மாணம் ஆன பிறகு பெருமாள் எழுந்தருளிய காட்சி.

      3. பில்வ தீர்த்தம் ;- இங்கு ஒரு ஸ்ரீநிவாசர் சந்நிதி இருந்தது - இந்த தீர்தம் இருக்கும் பகுதியில் பெரிய 24 கால் மண்டபம் ராணி மங்கம்மா காலத்தில் கட்டப்பட்டது - இந்த ஸ்ரீநிவாச சந்நிதி மற்றும் இடம் பற்றிய குறிப்பு ராஜா ராஜன் (தஞ்சை பெரிய கோவிளை கட்டியவன் இட்ட ஸ்ரீரங்கம் கோவில் தானத்தில் குறிப்பிடபட்டது.

      Delete
  3. தண்ணீர் இல்லாத குளம் எது? உறையூரில் கமலநாச்சியார் கோயிலில் இருப்பதா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார், இது திருவரங்கத்தில் உள்ள அஸ்வத்த தீர்த்தம்/ அஸ்வ தீர்த்தம், இன்று நம்பெருமாள் எல்லை கரை சென்று இந்த தீர்த்தத்தில் திருவடி விளக்கினார்.

      Delete
  4. மிகச் சுருக்கமாக இந்த வரலாற்றைச் சொல்லிட்டீங்க. மனதில் ஆத்திரம் பொங்குகிறது. ஆனால் அந்தக் காலத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்?

    இதுபோலவே திப்பு சுல்தான் காலத்தில் மேல்கோட்டை மற்றும் சுற்றுப் புறங்களில் வைணவர்கள் தீபாவளியின்போது கொலை செய்யப்பட்டதும், அதனால்தான் மாண்டியா ஐயங்கார்கள் இப்போதும் தீபாவளி கொண்டாடுவதில்லை, அதனை துக்க தினமாக நினைக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. படம் போல கண்ணில் நிற்கிறது அந்த காட்சிகள், காலையில் இதற்காக படிக்க ஆரம்பிக்கவும் வேறு வேலைகள் ஏதும் ஓடாமல் மனதில் இந்த காட்சிகள் மட்டுமே ... இந்த முறை கோவிலொழுகு புத்தகம் அப்பாவிடமிருந்து வாங்கி வாசித்தேன், ஆனால் மிக சுருக்கமாகவும் சற்று கடின பதத்தில் வார்த்தைகளும் உள்ளன. விரைவில் திருவரங்கன் உலா புத்தகம் வாங்கி வாசிக்க வேண்டும் .

      Delete
    2. இன்னும் நிறைய நிறைய இது போன்ற தகவல்களை பகிர வேண்டும், ஆச்சாரியர்கள் பற்றி இன்னும் முழுதாக படித்து பகிர வேண்டும்.

      மேலும் M A திவ்ய பிரபந்தமோ இல்லை ஸ்ரீ வைஷ்ணவம் வகுப்பிலோ சேர வேண்டும் என்று பல எண்ண குவியல்கள் இன்று

      Delete
    3. வாழ்த்துகள் அனு.!

      கீதா

      Delete
    4. நான் முதல் வருடத் தேர்வு எழுத முடியாமல் யாத்திரை சென்றதால் தொடரவில்லை. நீங்கள் எம் ஏ தி.பி சேர்ந்தால் சொல்லுங்கள்.

      Delete
    5. பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ...எப்பொழுது என்று அறியேன்

      Delete
  5. இன்னும் இது போல நிறைய பகிரவேண்டும் என்கிற உங்கள் சேவை தொடரட்டும்.  அழகிய படங்கள், விவரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  6. இந்த நிகழ்வும் வரலாறும் வாசித்திருக்கிறேன், அனு. வாசித்த போது மனம் மிகவும் வேதனைப்பட்டு என்னை அறியாமலேயே கண்ணில் நீர் வந்ததுண்டு. பாட்டியும் எனக்குச் சொல்லியிருக்கிறார் சின்ன வயதில். அதன் பின் பிரபந்தம் கற்றுக் கொண்ட போது சொல்லிக் கொடுத்த குரு மாமாவும் சொன்ன பின் நான் வாசித்துத் தெரிந்து கொண்டது.

    இப்ப உங்கள் பதிவின் தலைப்பு டக்கென்று யோசிக்க வைத்து வந்ததும் தெரிந்தது அந்த நிகழ்வு என்று

    படங்கள் மற்றும் சொல்லியது அனைத்தும் நல்லாருக்கு

    கீதா

    ReplyDelete
  7. நன்றி கீதா அக்கா

    ReplyDelete