27 April 2025

சித்திரை அஸ்வினி- ஸ்ரீ வடுக நம்பி திருநக்ஷத்ரம்.

 சித்திரை அஸ்வினி - ஸ்ரீ வடுக நம்பி திருவதார திருநாள்

எதிராசரை ஒழிய, ஒரு தெய்வம் மற்றறியா,மன்னு புகழ் சேர்"வடுகநம்பி !"




  "ஆசார்ய அபிமானமே உத்தாரகம்"

(ஆசார்யர்-ராமாநுஜரே அனைத்தும் தரவல்லவர்;உபாயமும் அவரே; உபேயமும் அவரே!!பெருமாளே இரண்டாம் பட்சம்) என்று வாழ்ந்து உணர்த்திய ஆந்த்ரபூர்ணர் என்னும், பெயருடைய ஸ்ரீ வடுகநம்பிகள் திருநட்சித்திரம் இன்று (27/04/2025) சித்திரையில் அஸ்வினி'

இவருடைய தனியன் ஸ்தோத்திரத்திலேயே இவரது சிஷ்ய நிஷ்டை கொண்டாடப் படுகிறது.

"ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம்,

ஸாளக்ராம நிவாஸிநம்,

பஞ்சாமோபாய ஸம்பந்தம்,

ஸாளக்கிராமார்யம் ஆஸ்ரயே"

"ராமாநுஜரின் சத்சிஷ்யர், சாளக்ராமம் என்னும் ஊரில் வாசம் செய்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சம உபாயத்தில், நிலை நின்றவர் ஆகிய சாளக்ராம ஆசார்யர் வடுகநம்பியைத் தொழுகிறேன்"


1.ஆசார்ய ஸ்ரீபாத தீர்த்தமாகிய ஸ்ரீசாளக்ராமம் ஏரி:

கர்நாடக மாநிலம் மேல்கோட்டைப் பக்கத்தில் உள்ள மிதிலாபுரி சாளக்ராமம் என்னும் இடத்தில் உள்ள ஏரி/குளத்தின் தண்ணீரை அந்த ஊர் மக்கள் உபயோகப் படுத்தி வந்தனர். அவர்கள் ரஜோகுணம் மிகுந்தவர்களாக இருந்தனர். அந்த மக்களை சாத்வீகர்களாக மாற்ற, ராமாநுஜர், 'ஊரார் நீர் முகக்கும் அந்தத் துறையில்' அவருடைய உயர்ந்த சீடர் முதலியாண்டான் திருவடிகளை விளக்குமாறு கூறினார்.

மிகச்சிறந்த ஆசார்யரான, முதலியாண்டான் திருவடிகளை விளக்கிய அந்த ஏரி பவித்ர ஸ்ரீபாத தீர்த்தமாயிற்று. ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தைப் பருகிய ஊரார் நற்குணங்கள் அடையப் பெற்று ஸ்ரீராமாநுஜர் திருவடிகளில் சரணம் அடைந்தார்கள். அதே ஊரைச் சேர்ந்த வடுகநம்பி தம்முடைய ஆசார்யர், ஜகத்குரு ஸ்ரீராமாநுஜரின் திருவடிகளையும் அந்த ஏரியில் விளக்கச் செய்து அதிபவித்ரமாக்கினார்.





2.உடையவர் திருவடி நிலைகளையே திருவாராதனப் பெருமாளாக வரித்தவர்

உடையவரின் திருவடி நிலைகளையே-பாதுகைகளையே, திருவாராதனைப் பெருமாளாக வரித்து, அவர்களுக்கு முறைப்படி நித்ய திருவாராதனம்/திருமஞ்சனம் செய்து, ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்துக் கொண்டுவந்தார். வேறு ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரிக்க மாட்டார்.

 ஒரு முறை உடையவருடன் யாத்திரை செல்லும் போது,உடையவரின்  திருவாராதனைப் பெருமாளைத் (காஞ்சி தேவப்பெருமாள்), ஒரு பெட்டகத்தில் வைத்து தம் தலையில் சுமந்து வந்தார். உடையவரின் திருவாராதனைப் பெருமாளோடு,உடையவரின் பாதுகைகளையும், சேர எழுந்தருளப் பண்ணி எடுத்து வந்தார். 

இதைக் கண்டு அதிர்ந்த உடையவர் 'வடுகா! இது என்ன(அபச்சாரம்) செய்தாய்?'என வினவ," உங்கள் தேவரில்(பெருமாள்), எங்கள் தேவருக்கு (அடியேனுடைய பெருமாளானஉங்கள் பாதுகைகள்) வந்த குறை என்ன?" என்றார்.

தம்முடைய அந்திம காலத்தில் சாளக்ராமத்தில் இருந்த போது ராமாநுஜரின் பாதுகைகளையே எப்போதும் வணங்கி ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரித்து வந்தார். தீர்த்த நியதியுடையராய் ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தையே, தாம் சேர்த்த தனமாகச் சேமித்து வைத்துப் பேணிக் கொண்டிருந்தார்.

3.பேதமை செய்த பெரியவாய கண்களும், ராமாநுஜர் என்னும் அமுதும்.

பெரியபெருமாளைச் சேவிக்கச் செல்லும் ராமாநுஜர், வடுக நம்பியையும் உடன் அழைத்துச் செல்வார்.

அங்கு அவர் பெரியபெருமாளைச் சேவித்துக் கொண்டிருக்கும் போது,வடுக நம்பி பெருமாள் பக்கமே திரும்பாமல், ராமாநுஜரின் திருமேனி வடிவழகைப் பக்தியுடன் சேவித்துக் கொண்டிருப்பார். ஒரு முறை உடையவர் இவரிடம் "பெருமாளைச் சேவிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பேதமை செய்யும் பெருமாளின் பெரியவாய கண்ணழகைச் சேவிக்கவும்" என்றார். 

அதற்கு இவர்"என் அமுதினைக் (தேவரீர் ராமாநுஜர்) கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்றார்!!

4.வடுகநம்பியிடம் தோற்ற உடையவர்:

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெருமாள் சந்நிதியில் விநியோகிக்கப்படும் பிரசாதத்தை ஸ்வீகரித்தபின் (உட்கொண்டபின்) கைகளைக் கழுவாமல் தலையில் (மேனியிலும்) தடவிக் கொள்வார்கள். (கழுவினால் பெருமாள் பிரசாதத்தின் சிறுமிகுதி கழுவும்போது கரைந்து கீழே விழுந்தவிடுமே என்னும் அச்சத்தால்). இன்றும் பெரும்பாலான திருமால் அடியார்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.

வடுகநம்பி உடையவர் மடத்திலும் இப்படியே செய்வார். உடையவர் அமுது செய்தருளிய தளிகைப் பிரசாதத்தை சாதித்தால், அதை நம்பி இரண்டு திருக்கைகளாலும் ஏற்றுக்கொண்டு பிரசாதம் ஸ்வீகரித்த பின், தம் கைகளை நீரில் விளக்காமல், தலையில் அப்படியே தடவிக்கொள்வார். 

இதைக் கண்ட உடையவர் கோபித்து,"கைகளைக் கழுவிக்கொள்"என, இவரும் கழுவிக் கொண்டார்.

மறுநாள் பெரியபெருமாள் சந்நிதியில் விநியோகிக்கப்பட்ட பிரசாதத்தில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொண்டு சேஷத்தை(மீதியதை) உடையவர் வடுகநம்பிக்குத் தந்தார்.நம்பி, பிரசாதம் ஸ்வீகரித்த பின், சென்று கை கழுவினார்.இதைப் பார்த்த உடையவர், பெருமாள் பிரசாதம் ஸ்வீகரித்தபின் கை கழுவலாமா என்று கோபித்தார்.

நம்பி"தேவரீர் நேற்று அருளிச் செய்தபடி செய்தேன்" என்றார். இது கேட்ட ராமாநுஜர்  "உமக்குத் தோற்றோம்"என்றார்.


5.'மால்'ஐ சேவிக்காமல்,'பால்':ஐக் காய்ச்சிய பக்குவம்:

உற்சவத்தில் ஒரு நாள்,நம்பெருமாள் வீதிப் புறப்பாட்டில் எழுந்தருளி வந்தபோது, ராமாநுஜர்,மடத்துக்குள் திருமடைப்பள்ளியில் இருந்த வடுகநம்பியை, பெருமாளைச் சேவிக்க வருமாறு அழைக்க,

"உம்முடைய பெருமாளைச் சேவிக்க வந்தால், அடியேனுடைய பெருமாளுக்குக்(ராமாநுஜர்) காய்ச்சும் பால் பொங்கிப் போகும்.வர இயலாது"என்றார்.



6.பந்துக்கள் பாத்திர பாவமும், ஸ்ரீ வைஷ்ணவ பாத்திர பவித்ரமும்.

ஒரு முறை வடுகநம்பியின் ஊரிலிருந்து அவருடைய பந்துக்கள் சிலர் ஸ்ரீரங்கம் வந்தனர்; இவரது திருமாளிகையில் தங்கினர். அவர்களுக்கு வேண்டிய உணவு சமைத்துக்கொடுத்தார். 

அவர்கள் ஊருக்குப் புறப்பட்டதும், அவர்களுக்காக உபயோகப்படுத்திய பாத்திரங்களை(மண் பாண்டங்களை) எடுத்து உடைத்து எறிந்து விட்டு, உடையவரின் சத்சிஷ்யர் முதலியாண்டான் திருமாளிகைப் புழக்கடையில் போட்டு வைத்திருந்த சில பழைய மண்பாண்டங்களை எடுத்து வந்து பிரசாதம் செய்யவும்/விநியோகிக்கவும், வைத்துக் கொண்டாராம்!!


7.'எங்கோ தூர' உள்ள பெருமாளும், 'இங்கேயே பக்கத்தில்'இருக்கும் ஆசார்யரும்!!

ஒரு முறை உடையவர் மடத்துக்கு வந்த ஒரு பாகவதர், ப்ரணவத்துடன் கூடிய, நாராயண நாமமாகிய திருமந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். வடுக நம்பிகள் அவரிடம் .நீங்கள் செய்வது 'நாவகார்யம்'.(நாவினால் சொல்ல ஒண்ணாதவற்றைச் சொல்வது !)இங்கே இவ்விடத்திலேயே இருக்கும் ராமாநுஜர் என்னும் தெய்வத்தைத் துதிக்காமல், (ஸ்ரீமதே ராமாநுஜாய நம:) எங்கோ தூர உள்ள அபெருமாளை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கிறேரே" என்று வியந்தாராம்!!


8.மதுரகவி ஆழ்வார் நிலையில், நின்ற வடுக நம்பி!

நம்மாழ்வார் தவிர வேறு தெய்வம் அறியேன்-

"தேவுமற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே"- என்று அறுதியிட்டுக்கூறிய மதுரகவிஆழ்வார் போல், வடுகநம்பியும் தம் ஆசார்யர் ராமாநுஜரைத் தவிர வேறு தெய்வமில்லை என்று உறுதிபடக் கூறினார்; வாழ்ந்தார்.

மதுரகவி ஆழ்வார்அருளிச் செய்தது ஒரே கிரந்தம் தான்-

'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்னும் திவ்யப்பிரபந்தம். அதிலும் அவர் மற்ற ஆழ்வார்களைப் போல் பெருமாளைப் போற்றிப் பாடாமல், தம் ஆசார்யர் நம்மாழ்வாரை மட்டுமே பாடியுள்ளார்.

வடுக நம்பி மூன்று கிரந்தங்கள் இயற்றினார்.

#யதிராஜ வைபவம்.

#ராமாநுஜ அஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம்.

#ராமாநுஜ அஷ்டோத்ர சதநாமாவளி. 

இவரும், மற்ற ஆசார்யர்களைப் போல் பெருமாளைப் போற்றி எழுதவில்லை. தத்துவ விசாரங்கள் செய்யவில்லை. மூன்று கிரந்தங்களிலும் தம் ஆசார்யர் ராமாநுஜரை மட்டுமே போற்றி எழுதியுள்ளார்!!


9 வடுக நம்பி நிலையில் நின்ற ஸ்ரீ வைஷ்ணவ நம்பி

(திருக்குறுங்குடி திவ்ய தேசப் பெருமாள்)

வடுக நம்பி உடையவர் மடத்தில் இருக்கும்போதும், அவர் யாத்திரை சென்றாலும் கூடவே இருந்து அவருக்கு சேவை செய்து கொண்டே இருப்பார் (வஸ்திரம் துவைத்தல், இருக்கை/படுக்கை சரி செய்தல்,பெட்டி/சாமான் எடுத்துச் செல்லுதல், மடைப்பள்ளி கைங்கர்யங்கள் முதலானவை). ஒரு முறை திருவனந்தபுரம் சென்றிருந்த போது, அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் திருவாராதனை முறைகளை மாற்ற விழைந்தார் உடையவர். ஆனால் அங்குள்ள நம்பூதிரிகளுக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் பெருமாளிடம் வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றவும்,உடையவரை தாம் ஆசார்யராக ஏற்று, அவர் மேன்மையை உலகறியவும், பெருமாள் கருடாழ்வாரை ஏவி ராமாநுஜரை இரவோடு இரவாக அருகில் உள்ள திருக்குறுங்குடியில் கொண்டு வந்து விட்டார். இது தெரியாத வடுகநம்பி அனந்தபுரத்தில் நித்திரையில் இருந்தார். இங்கு மறுநாள் காலை எழுந்ததும் உடையவர் எப்போதும் போல 'வடுகா' என்று விளிக்க, வடுகநம்பி 'அடியேன்,ஸ்வாமி'  என்று வந்து நின்றார். அருகில் உள்ள ஆற்றில் நீராடப் போனார்கள்.

வடுகநம்பி உடையவர் வஸ்திரங்களை துவைத்து எடுத்தார்.

அவர் நீராடி முடித்ததும் மடி வஸ்திரம் எடுத்துக் கொடுத்து, திருமண் பெட்டியும் எடுத்துக் கொடுத்தார். அங்குள்ள ஒரு பாறையில் அமர்ந்து, (அந்த இடம் இப்போது 'திருப்பரிவட்டப்பாறை' என்று சேவிக்கப்படுகிறது) உடையவர் திருமண்காப்பு தரித்துக் கொண்டு,

தாம் குழைத்த திருமண்ணின் மிகுதியில், வடுகநம்பிக்கும் இட்டுவிட்டார் (எப்போதும் போல).

பின்னர் இருவரும் திருக்குறுங்குடி நம்பி பெருமாளைச் சேவிக்க சந்நிதிக்குச் சென்றனர். கருவறையில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள் முகத்தில், ஈரம் காயாத, அப்போதிட்ட திருமண்காப்பு.

அதன் நிறம்/மணம்/அழகு எல்லாம் உடையவர் வைப்பது போலவே இருந்தன.

ஆச்சர்யம் அடைந்த உடையவர் வடுகநம்பிக்குத் காட்டலாம் என்றழைக்க, அவருடன் வந்த நம்பியைக் காண வில்லை.எங்கு தேடியும்/நேரமாகியும் அவர் தென்படவில்லை.அப்போது தான் தெரிந்தது,'வடுகநம்பி'யாய் வந்தவர் பெருமாளே என்பது. பெருமாள் ராமாநுஜரை ஆசார்யராக வரித்துக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவநம்பி என்னும் தாஸ்ய நாமத்தையும் ஏற்றுக்கொண்டார்.(உண்மையான வடுக நம்பி, நெடு நேரம் கழித்து,ஆசார்யரைக் காணாத பதட்டத்தில் வந்து சேர்ந்தார்).




10.வடுகநம்பி,ஆழ்வானையும்,ஆண்டானையும் 'இருகரையர்' என்பார்

கூரத்தாழ்வானும்,முதலியாண்டானும் எம்பெருமானாருக்கு அத்யந்த சீடர்கள். 12000 சீடர்களில் முதல் இரண்டு சீடர்கள்.எம்பெருமானாரே அவர்கள் இருவரும் முறையே தம் பவித்ரமும், திரிதண்டமும் போன்றவர்கள் என்று போற்றினார்.

ஆனால் வடுக நம்பி அவர்கள் இருவரையுமே, ஆற்றில் ஒரு கால்,சேற்றில் ஒரு கால் என்பது போல எம்பெருமானையும்/எம்பெருமானாரையும் இருவரையும் பற்றி இருக்கும்  'இரு கரையர்'என்றார். எம்பெருமானாரை மட்டும் பற்றினால் போதும் என்பது இவர் திண்மை.


11.வடுகநம்பி 'திருநாடு' அடையவில்லை, 'ஆசார்ய திருவடி' அடைந்தார்.

வடுகநம்பி தம் 95 ஆவது திருநட்சித்திரத்தில்,சாளக்ராமத்திலிருந்து பரமபதம் எய்தினார்.இந்த செய்தியை ஸ்ரீரங்கத்தில் இருந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் ஆசார்யரிடம், ஒரு ஸ்ரீவைஷ்ணவர் 'வடுகநம்பி திருநாடு அடைந்தார்' என்று சொன்னார்.

(ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பரமபதம்/வைகுண்டம் எய்துவதை, 'திருநாடு அடைதல்'என்பர்). உடனே இவர் அவரிடம் 'அப்படியல்ல;ஆசார்ய நிஷ்டரான வடுக நம்பி, ஆசார்யர் உடையவர் திருவடி அடைந்தார்' என்று சொல்வதே தகும். திருநாடு அடைந்தார் என்று சொல்வதுபொருந்தாது' என்றார்.(அதனால் தான் இன்றும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பரமபதித்தால் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று சொல்கிறோம்).

(---அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்---)


உன்னையொழிய ஒரு தெய்வம் மற்றறியா, 

      மன்னுபுகழ் சேர் வடுகநம்பி , தன்னிலையை  

      என்தனக்கு நீ தந்தெதிராசா, எந்நாளும் உன்தனக்கே 

     ஆட்கொள் உகந்து.

ஸ்ரீ மணவாள மாமுனிகள்-ஆர்த்திப் பிரபந்தம்.



அன்புடன் 

அனுபிரேம் 💗💗

2 comments:

  1. வடுகநம்பிப் பெருமான் சரித்திரம் படித்தேன்.

    அதுசரி,

    உபாயம், உபேயம்..   என்ன வேறுபாடு?

    ReplyDelete
    Replies
    1. உபாயம் என்பது வழி மற்றும் உபேயம் என்பது குறிக்கோள்.

      பகவானே நாம் உய்ய வழி என்றும், அவனுக்கு நாம் பண்ணும் நித்ய கைங்கர்யமே மிகவும் முக்கியமான குறிக்கோள் என்றும் ஶாஸ்த்ரம் விளக்குகிறது.

      அதனால் வடுக நம்பிக்கு சுவாமி ராமானுஜரே குறிக்கோள் அவரை அடையும் வழியும் அவரே

      Delete