இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 1
"பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே!" 1
- இராமானுஜ நூற்றந்தாதி
நாம் அன்னி வாழ நெஞ்சே சொல்லு என் உடையவரின் நாமங்களை...
காட்டுமன்னார்குடியில் ஒன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர் நாதமுனிகள். அவர் பிறந்த காலத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாசுரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடப்பெற்று வந்தன.
எல்லோரும் முறையாகப் பயின்று பாடும்படியாக அவை தொகுக்கப் பெறவில்லை. அனைத்து பாசுரங்களையும் அறிந்தவர் என்று ஒருவரும் காணப்படவில்லை.
அப்படியிருக்கும் போது இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு இறைவனை வணங்க வந்த அடியவர்கள் சிலர் 'ஆராவமுதே' என்று தொடங்கும் திருவாய்மொழியின் பத்து பாசுரங்களைப் பாடினார்கள்.
அப்பாசுரங்களின் அழகிலும் இனிமையிலும் பொருளாழத்திலும் கவரப்பட்ட இளைஞரான நாதமுனிகள் அப்பாடல்களைப் பற்றி அந்த அடியார்களிடம் விசாரிக்க, அவர்கள் தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகவும் அப்பாசுரங்கள் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரங்கள் என்றும், அவை திருக்குடந்தைப் பெருமாளைப் பாடும் பாசுரங்கள் என்றும் அதனால் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துத் தங்களுக்குப் பாடமாயின என்றும் தெரிவித்தனர்.
அப்பாசுரங்களின் முடிவில் 'ஆயிரத்தில் இந்தப் பத்துப் பாசுரங்கள்' என்ற குறிப்பு வந்ததைக் கேட்டு அந்த ஆயிரம் பாசுரங்களும் அவர்களுக்குத் தெரியுமா என்று நாதமுனிகள் கேட்க, 'தெரியாது. ஆழ்வாரின் பிறந்த ஊரான திருக்குருகூர் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் கிடைக்கலாம்' என்று அவர்கள் கூறினார்கள்.
அதன்படியே நாதமுனிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு வந்து விசாரிக்க அங்கும் அவருக்கு அப்பாசுரங்கள் கிடைக்கவில்லை.
நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் தன் ஆசாரியரின் மேல் எழுதிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் மட்டுமே கிடைத்தன.
அந்தப் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளியின் கீழ் அமர்ந்து அப்பாடல்களைப் பல்லாயிரம் முறை ஓதினார் நாதமுனிகள்.
அவர் பாடி முடிக்கையில், நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் காட்சி கொடுத்தார். அவருக்கு 4000 திவ்விய பிரபந்தங்களையும் அருளினார். இதைக்கண்ட நாதமுனிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நம்மாழ்வார் தன் மடியிலிருந்த ஒரு அழகான சிறிய சிலையைக் கொடுத்து நாதமுனிகளிடம் இதை தினமும் பூஜிக்கச் சொன்னார். நாதமுனிகளிடம் இந்தச் சிலையைக் கொடுக்கும் பொழுது "பொலிக! பொலிக!" என்று சொல்லிக் கொடுத்தார்.
கி.பி.1017ல் பிறக்கப்போகிற இராமானுஜருக்குக் கலியுகம் தொடங்கிய போதே கட்டியம் கூறியவர் நம்மாழ்வார்.
நம்மாழ்வார் கொடுத்த விக்கிரகம் தான் இன்றும் உலகைக் காத்துவரும் ஸ்ரீ இராமானுஜர். நாதமுனிகள் தான் அறிந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களை உலகறிய வெளியிட்டார். நாதமுனிகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைத் தொகுத்தார்.
அந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களையும் உயிர் மூச்சாக மதித்து, அதை நம்மிடையே எளிய முறையில் பரப்பியவர் சுவாமி இராமானுஜர்.
இன்னும் அனுபவிப்போம்...
ஸ்ரீபெரும்புதூர் ஸ்வாமி இராமானுஜர்
உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!
அன்புடன்
அனுபிரேம் 💗💗
🙏உடையவர் வைபவம் தொடர நல்வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி
Deleteசிறப்பு.
ReplyDeleteநன்றி சார்
Deleteநம்மாழ்வார், தன்னுடைய உருவம் வேண்டும் என்று கேட்ட நாதமுனிகளுக்கு, தாமிரவருணியில் உள்ள நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் என்று சொல்ல, முதலில் அமைந்த சிலை, நம்மாழ்வார் போல இல்லை. அது பிற்பாடு உதிக்கப்போகும் ஆச்சார்யார் என்று நம்மாழ்வார் சொல்லி, திரும்பவும் காய்ச்சச் சொல்ல, அதில் கிடைத்தது நம்மாழ்வார் விக்கிரகம் என்று படித்த நினைவு.
ReplyDeleteஆமாம் சார், அடுத்த பதிவுகளில் விரிவாக வரும்
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இறைவனாரின் படங்கள் அருமை. சுவாமி இராமானுஜர் பற்றிய தெய்வீக கதையை படித்தறிந்து கொண்டேன். அவரின் திருவடிகள் பற்றி தொழுது பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும் அவரின் சிறப்புகளை அறிய தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அக்கா
Delete