02 August 2019

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்







போன வெள்ளியன்று காமாட்சியம்மன் கோவிலின் வரலாறும் , படங்களும் தரிசித்தோம் ...

இன்றைய வெள்ளியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்.

கடந்த ஜூன் மாத பயணத்தில் மீனாட்சியம்மன் தரிசனம் கிடைத்தது , அங்கு கோவிலின் உள்ளே கைப்பேசி அனுமதியில்லை எனவே வெளிப்புறம் எடுத்த படங்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலை காணலாம்.











இத்தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர்.

 இவரை வழிபட்டு இந்திரன் தன்னுடைய பாவத்தினை தீர்த்திக் கொண்டான். அதனால் சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது


பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றானது இக்கோவில்.

நான்மாடக்கூடல்

     மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.  மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.


ஆலவாய்

     சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

கடம்பவனம்

கடம்ப மரங்கள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் காணப்பட்டத்தால் மதுரைக்கு “கடம்பவனம்” என்கிற ஒரு பெயரும் உண்டு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தல விருட்சமாக கடம்ப மரமே இருக்கிறது.





 இத்தளத்தின் அம்பாள் மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.

இந்த கருவறை விமானத்தை தேவேந்திரன் அமைத்தார். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால் மீனாட்சி என்று பெயர் பெற்றார்.

கையில் கிளியைத் தாங்கியிருக்கும் மீனாட்சியிடம் பக்தர்கள் கோரிக்கை வைக்கும் போது, அதைக் கவனமாக கேட்கும் கிளி மீண்டும் மீனாட்சியிடம் அந்த கோரிக்கையை சொல்லி நினைவூட்டுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

 இந்திரன் சாபவிமோசனத்திற்காக இத்தலத்தினை தேடி வந்தபோது கிளிகளே சிவ வழிபாட்டிற்கு உதவி செய்தன.

மீனாட்சியை அங்கயற்கண்ணி என தமிழில் அழைக்கின்றனர். இவரை தடாதகை பிராட்டி என்றும் அழைப்பதுண்டு. இவர் மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிஷேகங்களைப் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
 மீனாட்சியம்மனை அலங்காரம் செய்த பிறகே பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூஜை  அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன்பின்பே மூலவரான சிவபெருமானுக்கு  பூஜைகள் செய்யப்படும்.





திருக் கோவில் வரலாறு


     விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான்.

உண்மையை அறியமுற்பட்ட போது, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் வழிபாட்டில் இருந்து வருகிறது. அதற்கு இந்திர விமானம் என்ற பெயர் கொண்டு மதுரை கோயிலில் இருந்துவருகிறது.

     ஒருமுறை மானவூரைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்ப வனத்தின் வழியாகச் சென்ற போது, இரவு இந்திர விமானத்தில் தங்க நேர்ந்தது. காலையில் அவன் எழுந்து பார்த்தபோது சிவலிங்கத்தை வழிபட்டதற்குரிய அடையாளங்கள் தெரிந்தது.

அதனை தேவர்களின் செயலென நினைத்த வியாபாரி மன்னன் குலசேகரபாண்டியனிடம் சென்று கூறினான். அதற்கு ஏற்றார்போல் முதல் நாள் இரவே, சிவபெருமான் பாண்டியனின் கனவில் தோன்றி குறிப்பிட்ட இடத்தில் ஒரு கோயிலும், அதனை மையமாகக் கொண்டு ஒரு நகரத்தையும் நிர்மாணிக்குமாறு பணித்தார்.

குலசேகரனும் காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது.









அன்னை மீனாட்சி வரலாறு

     கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள்.

ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.

     அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள்.

அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, "என்ன வரம் வேண்டும் கேள்!" என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.

     அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை.

காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.

     மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள்.அப்போது அம்பிகை, வித்யாவதிக்கு முற்பிறவியில் வாக்கு கொடுத்ததற்கேற்ப, மூன்று வயது குழந்தையாக கையில் மூன்று தனங்களோடு தோன்றினாள்.

கூடவே உரியபருவம் வந்து மணாளனைக் காணும் போது  ஒரு தனம் மறையும் என்ற அசரீரி கேட்டது. காஞ்சனமாலைக்கு முற்பிறவியில்  அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது.


மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும்  குழந்தைக்கு தடாதகை எனப் பெயரிட்டு  சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான்.

இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், "மீனாட்சி" என்று பெயர் பெற்றாள்.

     இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள்.











மீனாட்சி திருமணம்

     
     மலயத்துவசன் மறைவுக்குப் பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் "கன்னிநாடு" எனப் பெயர் பெற்றது. தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள்.

கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள்.

     சிவனுக்கு பக்கத்தில் தடாதகை இருந்ததை காண கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரம்மதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.






ஸ்தல பெருமை

மதுரை ஸ்ரீ சக்கர வடிவத்திலும், அதன் நடு பிந்துவில் மீனாட்சியும் அமர்ந்திருக்கிறாள். நண்பகல் வேளையில் மீனாட்சி சியாமளா சக்தியாக விளங்குகிறாள்.  மீன்கள் தன் கண்களாலேயே குட்டிகளை காப்பது போல், கண்ணுக்கு ஓய்வளிக்காமல் தன் பக்தர்களைக் காப்பவள் என்ற பொருள்படவே மீனாட்சி என்று அழைக்கப்படுகிறாள்.

மீனாட்சி அம்மன், நின்ற கோலத்தில் இடைநெளிந்து திருக்கரங்களில் கிளியை ஏந்தி அருள்பாலிக்கிறாள். இவளுக்கு இடப்பக்கத்தில், சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அம்மனின் இடப்பாகத்தில் இறைவன் அருள்புரிகிறார்.

இங்கிருக்கும் பொற்றாமரைக்குளம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறையும் தருவதாக அமைகிறது. இரட்டை கோபுரங்களில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரருக்கும் ஆனது.





நாங்கள் சென்றதும் ஒரு வெள்ளிக்கிழமையில், அன்று  மீனாட்சியம்மனின் மிக அழகிய  திவ்ய தரிசனம் கிடைத்தது. அம்மனின் சன்னதியில் நிற்கும் போது மனதில் ஒரு நிறைவு.

சன்னதியை சுற்றி வரைந்துள்ள ஓவியங்கள் அனைத்தும் அற்புதமானவை ..அம்மனின் வரலாற்று செய்திகள் அனைத்தும் அக்காட்சிகளில் உள்ளன .



 மதுரை மீனாட்சியம்மை

இரட்டை மணிமாலை

நேரிசை வெண்பா

கார்பூத்த கண்டத்தெங் கண்ணுதலார்க் கீரேழு
பார்பூத்த பச்சைப் பசும்கொம்பே - சீர்கொள்
கடம்பவனத் தாயேநின் கண்ணருள்பெற் றாரே
இடம்பவனத் தாயே யிரார்.



கட்டளைக் கலித்துறை

இராநின் றதுஞ்சொக்க ரெண்டோள்  
 குழைய விருகுவட்டாற்
பொராநின் றதுஞ்சில பூசலிட் 
   டோடிப் புலவிநலம்
தராநின் றதுமம்மை யம்மண
   வாளர் தயவுக்குள்ளாய்
வராநின் றதுமென்று வாய்க்குமென்
   னெஞ்ச மணவறையே.



நேரிசை வெண்பா

மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக் 
கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கன் 
அடியார்க் குடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் 
கொடியார்க் குளகொல் குணம். 




ஸ்ரீ மதுரை மீனாட்சியம்மனின் திருவடிகளே சரணம் ...



அன்புடன் 
அனுபிரேம் 

3 comments:

  1. வணக்கம் சகோதரி

    ஆடி வெள்ளியன்று மிகச் சிறப்பான பதிவு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்பற்றி மிக அழகாக விவரித்து எழுதியுள்ளீர்கள். எத்தனை எத்தனை கதைகள். அத்தனையும் பக்தியுடன் படிக்க மிகவும் நன்றாக அருமையாக உள்ளது. மிகவும் அழகான புகைப்படங்கள். சென்ற வருடத்தில் தாங்கள் அங்கு சென்று நிறைவாக தரிசித்திருந்தாலும், இந்த ஆடி வெள்ளியில் மீனாட்சி அம்மன் மகிமைகள் குறித்து எழுதி எங்களையும் மீனாட்சி அம்மனை மனமாற தரிசிக்க வைத்து, அம்மன் அருளைப் பெறவும் செய்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தலவரலாறு அருமை.
    படங்கள் தேய்வீகம்!
    நீங்கள் எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.
    இன்று காலை மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து வந்தேன். அவளை நினைக்காமல் அழைத்து விட்டாள்.
    மருத்துவரை பார்க்க போனால் அவர் விடுமுறை. மருத்துவர்களுக்கு எல்லாம் பெரிய மருத்துவரை தரிசனம் செய்து வந்து விட்டோம்.

    எவ்வளவு பேர் அங்கு புது தாலிகயிறு மாற்றிக் கொண்டு இருந்தார்கள். அம்மன் அருளால் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. ஆடி வெள்ளியன்று மதுரைத் தலம் பெருமை சொல்லும் சிறப்பான பகிர்வு. பல தகவல்கள் புதியவை. நன்றி.

    ReplyDelete