21 March 2019

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை

ஸ்ரீரங்கம்  திருக்கோயிலில்  நடைபெற்ற  ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாச்சியார்  பங்குனி உத்திரம்   சேர்த்தி சேவை  (21 .03 .19 )






பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே

பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே

மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே

மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே

எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே

இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே

செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே











 பிரம்மதேவன் கொண்டாடிய முதல் உற்சவம் `பங்குனி உத்திரம்’ என்கிறது ஸ்ரீரங்கத் தலபுராணம். எனவேதான் திருவரங்கத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவத்தை ‘ஆதி பிரம்மோற்சவம்’ என்கிறார்கள்.

பங்குனி உத்திர விழாவின் இன்னொரு சிறப்பு -பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்!

 பெருமாளுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடல் என்பது உலகமயமான ஊடல் போலத் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த தத்துவம் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நிகழும் பாசப் போராட்டம்.


திருச்சியில் உள்ள உறையூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி கமல மலரில் அவதரித்த தலம், உறையூர் திருத்தலம்.

இங்கே உறையூரில், கமலவல்லி நாச்சியார் எனும் திருநாமத்தில் அவளின்  திருக்கோயில் அமைந்துள்ளது.

 தாயாரின் திருநட்சத்திரம் - ஆயில்யம்.  எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூருக்கு வருவார்; அவருடன் கமலவல்லி நாச்சியார், ஏக சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவார்.

பெருமாள் தான் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் மாலைகள் அனைத்தையும் கமலவல்லிக்கு அணிவித்தும், கமலவல்லி நாச்சியார் அணிந்திருக்கும் மாலைகளைத் தான் வாங்கி அணிந்தும் கொள்வார்.

அப்படியொருமுறை, கமலவல்லி நாச்சியாரைச் சந்தித்துவிட்டு மகிழ்வுடன் ஸ்ரீரங்கத்தை நோக்கித் திரும்பும்போதுதான் தனது கையில் கமலவல்லியின் புது மோதிரம் பளபளப்பதைக் கவனிக்கிறார்.

பழைய மோதிரத்தைக் கமலவல்லியின் கரங்களில் அணிவித்தது அவரது நினைவுக்கு வந்தது.

புது மோதிரத்துடன் சென்றால் `அணிந்திருந்த பழைய மோதிரம் என்ன ஆனது என்று ரங்கநாயகி கேட்பாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது?’ என்று சிந்தித்த ரங்கநாதர் தனது மோதிரம் தொலைந்துபோனதாக நாடகம் ஆடுகிறார்.

அனைவரும் காவிரியாற்றில் மோதிரத்தைத் தேடுகிறார்கள்.

பிறகு `மோதிரம் தொலைந்துவிட்டது’ என்று கூறியபடியே கோயிலுக்குள் நுழைகிறார் ரங்கன். வழக்கமாக ரங்கன் கோயிலுக்குள் நுழைந்தால் வாத்திய கோஷங்கள் அதிரும்.

ஆனால், கமலவல்லியைச் சந்தித்துவிட்டு வரும் ரங்கனோ சத்தமில்லாமல் வருகிறார்.


ரங்கனின் செய்கையின் பொருளை தாயார் அறியாமல் இருப்பாரா என்ன?

‘உள்ளே வராதீரும்’ என்று கூறி வாயில் கதவைச் சாத்திவிடுகிறார்.

ரங்க நாயகியைச் சமாதானப்படுத்த, பெருமாள் முயற்சி செய்கிறார்.

தாயாரோ, ‘நீங்கள் உறையூருக்கே செல்லலாம். இனி இங்கு வரத் தேவையில்லை’ என்று உறுதியுடன் தெரிவித்துவிடுகிறார்.

மேலும் கெஞ்சிப் பார்த்த திருவரங்கன் வருத்தமும் சோர்வும் கொண்டு திரும்புவதுபோல பாவனை செய்கிறார்.

அப்போது, தாயார் கதவைத் திறந்து மெள்ள எட்டிப் பார்க்கிறார். அதைக் கண்ட ரங்கனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. மீண்டும் கதவருகே ஓடிவந்து தாயாரிடம் கெஞ்சத் தொடங்குகிறார்.

இப்படியே ஊடலும் கெஞ்சலும் மாறிமாறி மூன்று முறை தாயார் கதவைத் திறந்து சாத்துகிறாள்.



உற்சவத்தின்போது தாயார் சார்பாக ‘தலத்தார்’ எனும் ஊழியர்களும், பெருமாள் சார்பாக `தொண்டுக் குலத்தார்’ எனும்  ஊழியர்களும் சமாதானம் பேசுவார்கள்.

தலத்தார் எல்லோரும் பெருமாளிடம் நியாயம் கேட்க, குலத்தார் அனைவரும் தாயாரிடம் கெஞ்சுவர்.

வடக்குச் சித்திர வீதி மக்கள் அனைவரும் அன்னைக்கு ஆதரவாக வெண்ணெய் மற்றும் பூக்களைப் பல்லக்கின் மீது வீசி எறிவார்கள். தெற்கு சித்திர வீதி மக்கள் ரங்கனுக்கு ஆதரவாக இருப்பார்கள்.


கடைசியில் திருவரங்கன் செய்த தவறுக்காக மட்டையடி விழும்.
இதை `மட்டையடி உற்சவம்’ என்று கூறுகிறார்கள்.

கடைசியாக நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்துவைப்பார். அதன் பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர்.


ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான். எனவே, மண்டபத்துக்கு இந்தத் திருநாமம் உண்டானதாம்.


இந்த நாளில், சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறும். அதேபோல், ஸ்ரீஅரங்கனுக்கு, ஸ்ரீராமானுஜர் அருளிய 'சரணாகதி ஸ்ரீவைகுண்ட கத்யங்கள்’ சொல்லி ஸேவிக்கப்படுவதும் வழக்கத்தில் உள்ளது!












889.

இனிதிரைத் திவலை மோத*  எறியும்தண் பரவை மீதே,* 
தனிகிடந்து அரசு செய்யும்*  தாமரைக் கண்ணன் எம்மான்,*
கனியிருந்து அனைய செவ்வாய்க்*  கண்ணனைக் கண்ட கண்கள்,* 
பனிஅரும்பு உதிருமாலோ*  என்செய்கேன் பாவியேனே!  


890.

குடதிசை முடியை வைத்துக்*  குணதிசை பாதம் நீட்டி,* 
வடதிசை பின்பு காட்டித்*  தென்திசை இலங்கை நோக்கி,*
கடல்நிறக் கடவுள் எந்தை*  அரவணைத் துயிலுமா கண்டு,* 
உடல்எனக்கு உருகுமாலோ*  என்செய்கேன் உலகத்தீரே! (2)

  
891.   
பாயும் நீர் அரங்கந்தன்னுள்*  பாம்பணைப் பள்ளி கொண்ட,* 
மாயனார் திருநன் மார்வும்*  மரகத உருவும் தோளும்,*
தூய தாமரைக் கண்களும்*  துவரிதழ் பவள வாயும்,* 
ஆயசீர் முடியும் தேசும்*  அடியரோர்க்கு அகலல்ஆமே?  



ஸ்ரீரங்கம் நம்பெருமாள்  ஸ்ரீரெங்கநாச்சியார் சேர்த்தி படங்களை பதிவிட்ட திரு.விஜயராகவன் கிருஷ்ணன் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மிகவும் நன்றி...



அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. சிறப்பான சேர்த்தி தரிசனம். நன்றி.

    ReplyDelete
  2. பங்குனி உத்திரக் காட்சி மிக அருமை. எங்கள் அண்ணனாட்க?லுக்கு திருமணம் நிகழ்ந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

    ReplyDelete
  3. படங்கள் நன்றாக இருக்கின்றன..

    துளசிதரன், கீதா

    ReplyDelete