04 July 2020

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்....

"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் அவதார நாள்... ஆனி மூலம் 










1433ஆம் ஆண்டு,ஜூலை மாதம் 9ஆம்நாள்-தமிழ் பிரமாதீச ஆண்டு,
ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று,
மணவாள மாமுனிகளின் திருநட்சித்திரமான மூலத்தில்,
பெரிய பெருமாள்-அழகிய மணவாளர்,

ஸ்ரீரங்கம் பெரிய கோவில் காயத்ரி மண்டபத்தில்,
ஸ்ரீராமானுஜரின் மறு அவதாரமான ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, இந்தத் தனியனைச்சொல்லி, ஒரு சுவடியில் எழுதி மாமுனிகளிடம்  சமர்ப்பித்தார்.


தனியன் என்பது ஆசார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம். ஆழ்வார்களுக்குப் பல ஆசார்யப்பெருமக்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தனியன்களைப் பாடியுள்ளனர்.

ஆழ்வார்கள், ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களுக்கும் தனித்தனியாக தனியன்கள் உள்ளன. ஆழ்வார்,ஆசார்யர் இயற்றிய கிரந்தங்களில் இல்லாமல், தனியாக இருப்பதாலும்,
ஆனால் அவற்றைச் சேவிக்கும்(படிக்கும்/பாடும்) முன், இந்த ஸ்தோத்ரத்தைச் சேவித்தே தொடங்க வேண்டும் என்பதால் தனியன் எனப்படுகிறது.


"ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"




"ஶ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய்மொழிப்பிள்ளையின்
(மாமுனிகளின் ஆசார்யர்) எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும்,
பக்தி,ஞானம்,வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும்,
யதிராஜரான ராமானுஜர் மீது, அளவுகடந்த, பக்திநிறைந்தவருமான,
அழகிய மணவாள மாமுநிகளை அடியேன் வணங்குகிறேன்"

தனியனைப் பாடியவர்,
ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த,சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே !!



















நம்பிள்ளையின் திருவாய்மொழி 36000 படி ஈட்டை உள் அர்த்தங்களை   அழகான தமிழில் எல்லோருக்கும் புரியும்படி விரிவுரைக்கும் வல்லமை பெற்றவர்  மணவாள   மாமுனிகள்...



மணவாள   மாமுனிகளிடமிருந்து    திருவாய்மொழியின்

 விசேஷ அர்த்தங்களைத் தான்

எவ்வித இடையூறுகளும் இன்றிக் கேட்க வேண்டும்

என்ற ஏக்கமும் ,


மணவாள மாமுனிகளைத் தனக்கு

 ஆசார்யனாகப் பெற வேண்டும் என்ற

திருவுள்ளமும் பெரிய பெருமாளுக்கு ஏற்பட,


ஒரு பவித்ரோத்சவ சாற்றுமறை நன்னாளிலே,

 ஈடு 36000த்தின் வ்யாக்யானங்களைக் கொண்டு

 நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களைத்

 தனக்குக் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்று நியமித்தார்.

இந்தக் காலக்ஷேபம் எந்த விதமான இடையூறுகளும்  இடைஞ்சல்களும் இன்றி நடக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனை மணவாள மாமுனிகள் பெருமிதத்தோடும் ,

 இப்பணிக்குத் தன்னைப் பெரிய பெருமாள்

 தேர்ந்தெடுத்ததை மிக நைச்யத்தோடும் (தன்னடக்கத்தோடும்) ஏற்று மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து ,அடுத்த நாள் மணவாளமாமுனிகள்

 பெரிய பெருமாள் சந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில்

அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில்,

நம்பெருமாள் தனது தேவிமார்களோடும்,

சேனை முதல்வரோடும்,

கருடனோடும்,

 திருவானந்தாழ்வானோடும் மற்றுமான

ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார்.


இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை

 ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி


உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு துவங்குகிறார்.


பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ச்ருதி, ஸ்ரீபாஷ்யம், ச்ருதப்ரகாசிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விசதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார்  10 மாத காலம் சாதித்து வந்தார்.




 இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று

அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் 

 அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில்,

மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும்,

பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி


 “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் ”

என்று சாதித்து மேலும் சாதிக்குமாறு  கேட்க


“தீபக்த்யாதி குணார்ணவம்”

என்றும் மேலும் சாதிக்கப் பணிக்கும் பொழுது



 “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ”

என்று முடித்து ஓடி சென்றுவிட்டார்.


இந்த தனியன் ச்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும்  வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன்

நம்பெருமாளே அன்றி சாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர்.




நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன்  சமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை...

அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் சேவிப்பதற்கு முன்னும் பின்னும்  இதனைச் சேவிக்க உத்தரவும் இட்டார்.



இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை சாதித்தார்.



மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .நம்பெருமாளே அரங்கநாயகம்  என்று பெயர் கொண்ட  ஐந்து வயது அர்ச்சக குமாரனாக இந்தத் தனியன்  ஸ்லோகத்தை ஒரு சிஷ்யனின் காணிக்கையாக கொடுத்துவிட்டுச் சென்றார்.


அதனாலேயா ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு இவரை ஆசாரியனாக இன்றும் கொண்டாடுகிறார்கள். மணவாள மாமுனிகள் எங்கே எழுந்தருளியிருந்தாலும் ஆதிசேஷனில் இருப்பதைக் காணலாம்.


அவருக்கு அந்த சேஷ பீடத்தை அருளியவரும் நம்பெருமாளே.






 


பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து 
எட்டாம் திருமொழி – ஏழையேதலன் - 1




1418

ஏழைஏதலன்கீழ்மகனென்னாது 
இரங்கி மற்றவற்குஇன்னருள்சுரந்து * 
மாழைமான்மடநோக்கிஉன்தோழி
உம்பிஎம்பியென்றொழிந்திலை * உகந்து 
தோழன்நீஎனக்குஇங்கொழியென்ற 
சொற்கள்வந்து அடியேன்மனத்திருந்திட * 
ஆழிவண்ண! நின்னடியிணையடைந்தேன் 
அணிபொழில்திருவரங்கத்தம்மானே. (2)



1419
வாதமாமகன்மர்க்கடம்விலங்கு
மற்றோர்சாதியென்றொழிந்திலை * உகந்து
காதலாதரம்கடலினும்பெருகச் செய்
தகவினுக்குஇல்லைகைம்மாறென்று *
கோதில்வாய்மையினாயொடும் உடனே
உண்பன்நானென்றஓண்பொருள் * எனக்கும்
ஆதல்வேண்டுமென்றுஅடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!




1420
கடிகொள்பூம்பொழில்காமருபொய்கை 
வைகுதாமரைவாங்கியவேழம் * 
முடியும்வண்ணம்ஓர்முழுவலிமுதலை 
பற்ற மற்றதுநின்சரண்நினைப்ப *
கொடியவாய்விலங்கின்னுயிர்மலங்கக் 
கொண்டசீற்றமொன்றுண்டுளதறிந்து * உன் 
அடியனேனும்வந்துஅடியிணையடைந்தேன் 
அணிபொழில்திருவரங்கத்தம்மானே! 

ஆச்சாரியார் திருவடிகளே சரணம்....


அன்புடன்

அனுபிரேம்....

3 comments:

  1. அருமையான பதிவு. பெரியவாச்சான் பிள்ளையின் பெரியாழ்வார் திருமொழி 400 பாடல்களுக்கான வியாக்யானம் லுப்தமானபோது (மறைந்துவிட்டது), ஸ்ரீ மணவாள மாமுனிகளே அதற்கும் வியாக்யானம் எழுதினார். ஸ்ரீவைணவத்தின் பெரிய ஆச்சார்யர் சுவாமி மணவாள மாமுனிகள்.

    அவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

    ReplyDelete
  2. ஃ போட்டோக்கள் வழக்கம் போல சூப்பர்.
    மணவாள மாமுனிகள் பற்றிய செய்திகள் அருமை .இதுவரை நான் அறியாதது

    ReplyDelete