02 July 2020

ஸ்ரீமந் நாதமுனிகள் திருநட்சத்திரம்...

ஸ்ரீமந்  நாதமுனிகள்  திருநட்சத்திரம் ஆனி அனுஷம் இன்று ..












நாதமுனிகள் வாழி திருநாமம்



ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே

ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே

பானுதெற்கில் கண்டவன் சொற்பல உரைத்தான் வாழியே

பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்துகற்றான் வாழியே

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே

கருணையினால் உபதேசக் கதியளித்தான்  வாழியே

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே

நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே



ஸ்ரீ நாதமுனிகள்

பிறந்த காலம்      - கி.பி. 823 - கி.பி. 917
பிறந்த ஆண்டு  - சோபக்ருத ஆண்டு
மாதம்   - ஆனி
திருநட்சத்திரம்  - அனுசம்
திதி    - பௌர்ணமி (புதன் கிழமை)
இடம்  - காட்டு மன்னார் கோயில் (வீரநாராயணபுரம்)
அம்சம்  - சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர்.

நாதமுனிகள் யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.
இவரது இயற்பெயர் திருவரங்க நாதன். ஆனால் இவர் சிறந்த யோகியாக இருந்ததால் இவரை திருவரங்க நாதமுனிகள் என்று அழைத்தனர்.


அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று.








   

வீரநாராயணப்பெருமாள் கோவிலுக்கு, மேல்கோட்டைப் பக்கமிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்திருந்தார்கள்.

அவர்கள் பெருமாள் முன்பாக "ஆராவமுதே அடியேனுடலம், நின்பாலன் பாயே" என்று தொடங்கி 11 பாசுரங்கள் சேவித்தனர்.  

கடைசிப் பாசுரத்தில் "குருகூரச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்,மழலை தீரவல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே" என்று முடித்தனர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நாதமுனிகள், ஆயிரத்துள் பத்துப் பாசுரங்களைக் கேட்டு உகந்தேன்.

மற்ற பாசுரங்களையும் பாடுங்கள் என்றார். 

அதற்கு அவர்கள் எங்களுக்கு இந்தப் பத்து தான் தெரியும்.
இவற்றை யார் இயற்றினார்கள்; மற்ற பாடல்கள் பற்றியெல்லாம் தெரியாது என்று கூறி
விட்டனர்.

ஆர்வத்தால் உந்தப்பட்ட நாதமுனிகள், பாடலில் குருகூர் என்றிருந்ததால், குருகூரைத் (ஆழ்வார் திருநகரி) தேடிச் சென்றார்...

அங்கு சென்று விசாரித்த போது யாருக்கும் ஒன்றும் தெரிய வில்லை.

மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தில் வந்த 'பராங்குச நம்பி' என்று ஒரு வயதானவர் ஒருவர் திருக்கோளூரில் இருப்பதாகவும் அவரைக் கேட்டுப் பாருங்கள் என்றனர்.

அங்கு சென்று அவரைக் கேட்டபோது,"மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு" பாசுரங்களைச் சொல்லி, இவற்றை குருகூர் திருப்புளியமரத்தடியில் இருக்கும் ஆழ்வார் விக்ரகத்துக்கு முன் அமர்ந்து, நிஷ்டையுடன், "12000"முறை சொன்னால் ஆழ்வார் பிரத்யட்சமாவார் என்றார்.

உடனே நாதமுனிகள் பக்திப்பெருக்கு/நிஷ்டையுடன் நம்மாழ்வார் முன் அமர்ந்து தொடர்ந்து, 12000 முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு சேவித்தார்.

அவருடைய வைராக்ய பக்தியில், நெகிழ்ந்த ஆழ்வார் பிரத்யட்சமாகி, இவர் வேண்டிய ஆயிரம் பாசுரங்கள் மட்டுமல்லாமல், அவரும் மற்ற ஆழ்வார்களும் பாடிய மற்ற மூவாயிரத்தையும் பாடிக் கொடுத்தார்.


."பொலிக,பொலிக,பொலிக"

"கண்டோம்,கண்டோம்;கண்ணுக்கினியனகண்டோம்" பாசுரங்களைச் சொல்லும் போது இவை பின்னர் அவதரிக்கப் போகும் "நாளைய-பவிஷ்யத ஆசார்யர்" (ராமானுஜர்) அவதரிப்பதைக் கொண்டாடும் பாசுரங்கள் என்று அருளினார். 




பெருவியப்பும் உவகையும் அடைந்த நாதமுனிகள் அந்த ஆசார்யரைத், தமக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஆழ்வாரிடம், "பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
....குருகூர்நம்பி !, முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே " பாசுரத்தை நெக்குருகச் சேவித்து வேண்டினார்.

அன்றிரவு நாதமுனிகள் கனவில் நம்மாழ்வார், காஷாயம் தரித்து திரிதண்டம் ஏந்தி, அழகிய திருமுகம், நீண்ட திருக்கரங்களுடன் தோன்றி, இவரே பவிஷ்யத ஆசார்யர் என்றார். 

மறுநாள், நாதமுனிகள் ஆழ்வாரிடம் பவிஷ்யத ஆசார்யர் விக்ரகம் பிரசாதிக்குமாறு வேண்டினார் ஆழ்வாரும் அந்த விக்ரகத்தை ஒரு சிற்பிக்குக் காட்டிக் கொடுக்க, அவரும் பவிஷ்யத ஆசார்யர் விக்ரகத்தை தத்ரூபமாக வடித்துக் கொடுத்தார். 

நாலாயிரத்தையும்,நாளைய ஆசார்யரையும் எடுத்துக் கொண்டு காட்டுமன்னார் கோவில் திரும்பினார். 

நாலாயிரச் சுவடிகளுக்கும்,பவிஷ்யத ஆசார்யர் விக்ரகத்துக்கும் திருவாராதனை செய்து வந்தார்.

இந்த பவிஷ்யத ஆசார்யர் விக்ரகம், நாதமுனிகளின் சீடர்கள் உய்யக்கொண்டார், மணக்கால்நம்பிகள் வழியாக ஆளவந்தாரை அடைந்தது.

இந்த விக்ரகத்தை வைத்துத்தான், ஆளவந்தார் காஞ்சிபுரத்தில் ராமானுஜரை அடையாளம் கண்டு"ஆம்,முதல்வன்இவர்" என்று நிர்ணயித்தார்.

ஆளவந்தாருக்குப் பின் அந்த விக்ரகம், அவர் சீடர் திருக்கோஷ்டியூர நம்பியின்
திருவாராதனையில் இருந்தது.

இந்த ஆச்சர்யமான பவிஷ்யத ஆசார்யர் விக்ரகத்தை இன்றும் நாம் திருக்கோஷ்டியூரில் சேவிக்கலாம் உடையவரின் இந்தத் திருமேனி "தன்னை உணர்த்திய திருமேனி" என்று போற்றப்படுகிறது....(மதுரகவி ஆழ்வாருக்கு தாமிரபரணி நதி தீர்த்தத்தில் கிடைத்த பவிஷ்யத ஆசார்யர் விக்ரகம் வேறு. அவரை, ஆழ்வார்திருநகரி சதுர்வேதி மங்கலத்தில் சேவிக்கலாம்).







இசையுடன் பாடும் படி அமைந்த நாலாயிரம் பனுவல்களுக்கும் தகுந்த இசைமுறைகளை அமைத்து கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் என்னும் தன்னுடைய இரு மருமகன்களுக்கும் கற்றுக் கொடுத்து அதன் மூலம் நாலாயிரம் பாசுரங்களும் உலகத்தில் பரவும் படி செய்தார் நாதமுனிகள்.


ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யாமுனமுனிகள் /யமுனைத்துறைவர் .

அவருக்கு ஆளவந்தார் என்றும் ஒரு பெயர் உண்டு.

தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.

உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்.






திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி – ஆராவமுதே

பேறுகிட்டாமையால் ஆராவமுதாழ்வாரிடத்தில் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமருதல்



ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே 
நீராயலைந்துகரைய உருக்குகின்றநெடுமாலே! 
சீரார்செந்நெல்கவரிவீசும் செழுநீர்த்திருகுடந்தை 
ஏரார்கோலந்திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே! (2)

1 3194



எம்மானே! என்வெள்ளைமூர்த்தி! என்னையாள்வானே! 
எம்மாவுருவும்வேண்டுமாற்றால் ஆவாய்! எழிலேறே! 
செம்மாகமலம்செழுநீர்மிசைக்கண்மலரும் திருக்குடந்தை 
அம்மாமலர்க்கண்வளர்கின்றானே! என்நான் செய்கேனே?!

2 3195



என்நான்செய்கேன்? யாரேகளைகண்? என்னைஎன் செய்கின்றாய்?  
உன்னாலல்லால்யாவராலும் ஒன்றும்குறைவேண்டேன் 
கன்னார்மதிள்சூழ்குடந்தைக்கிடந்தாய்! அடியேனரு வாணாள்  
சென்னாள்எந்நாள்? அந்நாள் உன்தாள்பிடித்தே செலக்காணே.

3 3196



செலக்காண்கிற்பார்காணுமளவும் செல்லும்கீர்த்தியாய்!  
உலப்பிலானே! எல்லாவுலகுமுடையஒருமூர்த்தி!  
நலத்தால்மிக்கார்குடந்தைக்கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய் * ஆகாசத்தைநோக்கி அழுவன்தொழுவனே.

4 3197



அழுவன்தொழுவன்ஆடிக்காண்பன் பாடியலற்றுவன்  
தழுவல்வினையால்பக்கம்நோக்கி நாணிக்கவிழ்ந்திருப்பன் 
செழுவொண்பழனக்குடந்தைக்கிடந்தாய்! செந்தாமரைக்கண்ணா! 
தொழுவனேனைஉனதாள் சேரும்வகையேசூழ்கண்டாய்.

5 3198


சூழ்கண்டாய்என்தொல்லைவினையையறுத்து உன்னடிசேரும் 
ஊழ்கண்டிருந்தே * தூராக்குழிதூர்த்து எனைநாள கன்றிருப்பன்?  
வாழ்தொல்புகழார்குடந்தைக்கிடந்தாய்! வானோர் கோமானே! 
யாழினிசையே! அமுதே! அறிவின்பயனே அரியேறே!

6 3199


அரியேறே என்னம்பொற்சுடரே! செங்கண்கருமுகிலே!  
எரியே! பவளக்குன்றே! நால்தோளெந்தாய்! உனதருளே! 
பிரியா அடிமை என்னைக்கொண்டாய்! குடந்தைத் திருமாலே!  
தரியேன் இனிஉன்சரணம்தந்து என் சன்மம்களையாயே.

7 3200


களைவாய்துன்பம்களையாதொழிவாய் களைகண்மற்றிலேன்  
வளைவாய்நேமிப்படையாய்! குடந்தைக்கிடந்தமாமாயா!  
தளராவுடலம் எனதாவி சரிந்துபோம்போது 
இளையாதுஉனதாள்ஒருங்கப்பிடித்துப் போதஇசைநீயே.

8 3201


இசைவித்து என்னைஉன்தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே! 
அசைவிலமரர்தலைவர்தலைவா! ஆதிப்பெருமூர்த்தி! 
திசைவில்வீசும் செழுமாமணிகள்சேரும் திருக்குடந்தை 
அசைவிலுலகம்பரவக்கிடந்தாய்! காணவாராயே.

9 3202


வாராவருவாய்வருமென்மாயா! மாயாமூர்த்தியாய்! 
ஆராவமுதாய் அடியேனாவி அகமேதித்திப்பாய் 
தீராவினைகள்தீர என்னையாண்டாய்! திருக்குடந்தை 
ஊரா! *உனக்காட்பட்டும் அடியேன்இன்னம் உழல்வேனோ? (2)

10 3203


உழலையென்பின்பேய்ச்சிமுலையூடு அவளையுயிருண்டான்  
கழல்களவையேசரணாக்கொண்ட குருகூர்ச்சடகோபன் 
குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் 
மழலைதீரவல்லார் காமர்மானேய்நோக்கியர்க்கே. (2)

11 3204










ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

தெருளுற்ற வாழ்வார்கள்  சீர்மையறிவாரார் 
 அருளிச்செயலை யறிவாரார்  அருள் பெற்ற
நாதமுனிமுதலாம்  நந்தேசிகரையல்லால் 
 பேதை மனமே உண்டோ பேசு 
36 







ஓம் நமோ நாராயணாய நம!!




அன்புடன்
அனுபிரேம்...

18 comments:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. ஸ்ரீ நாதமுனி சுவாமிகளின் வரலாறு, அவர் வைஷ்ணவத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அனைத்தையும் மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள். பாசுரங்களைப் பாடி மகிழ்ந்தேன். அழகான பதிவு. தொடரட்டும் தங்களின் பக்திப் பதிவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
    ஓம் நமோ நாராயணாய நம..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி கமலா அக்கா ..

      Delete
  2. சிறப்பான தகவல்கள்.

    தொடரட்டும் பக்திப் பரவசம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி வெங்கட் சார் ...

      Delete
  3. https://mathysblog.blogspot.com/2014/01/blog-post_9.html

    https://mathysblog.blogspot.com/2014/01/2.html

    ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு பற்றி எழுதும் போது ஸ்ரீமந் நாதமுனிகள் பற்றிய வரலாறு எழுதியிருக்கிறேன்.
    ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்கி கொண்டேன். படங்களும், வரலாறும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி மா ..

      உங்கள் தளத்தில் ஏற்கனவே கண்டு தரிசித்து இருக்கிறேன் மா ...

      Delete
  4. மிகப் பொருத்தமாக ஆராவமுதே பாசுரத்தை இன்று போட்டிருக்கீங்க.

    குருபரம்பரை கதைகளை திரும்பத் திரும்பப் படித்தாலும் அலுப்பதில்லை.

    சென்ற வருடத்தில் காட்டுமன்னார் கோவிலில், ஆளவந்தார் திருநட்சத்திரம் அன்று சேவித்து பிரசாதம் அன்வயித்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது.

    பிறகு வந்து இடுகையை முழுமையாகப் படித்து எழுதறேன். பார்த்த உடன் சட் என்று கண்ணில் பட்டது, ~ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தோன் வாழியே` என்ற வாழித்திருநாம வரிகள்.

    அனுஷம் - அனுடம். இதுபோல திருமாலையில் தேஜஸ் என்பதை தேசு எனவும், வைஷ்ணவர்கள் என்பதை வைட்டினவர்கள் என்றும் ப்ரபந்தங்களில் பார்க்கலாம் (இன்னும் பலப்பல உதாரணங்கள் உண்டு). ஆழ்வார்களின் தமிழ்ப்புலமை வியப்பிற்குரியது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி சார் .....

      Delete
  5. படங்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது அனு. நல்ல விவரணம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி கீதா அக்கா .....

      Delete
  6. நீங்கள் தெரிந்துகொள்வதற்காக ஒரு கேள்வி (நான் பதில் சொல்லமாட்டேன்).

    நம்மாழ்வார், தன் ஆயிரம் பாசுரங்கள் மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் பாடிய மூவாயிரத்தையும் சேர்த்து நாலாயிரம் பாடல்களையும் கொடுத்தார் என்று எழுதியிருக்கீங்க.

    நாலாயிர திவ்யப்ப்ரபந்தத்தில், 4000 என்ற எண்ணிக்கை, இராமானுச நூற்றந்தாதியின் 108 பாடல்களையும் உள்ளடக்கியது. நாதமுனிகள் காலத்தில் இராமானுசர் பிறக்கவில்லை. அதற்கு நூறு ஆண்டுகள்(?) கழித்துத்தான் இராமானுச நூற்றந்தாதியே ஆக்கப்பெறும்.

    ஆனால் பொதுவா நாலாயிரம் பாடல்களையும் ஆழ்வார், நாதமுனிகளுக்குக் கொடுத்ததாகத்தான் சொல்லுவர். அது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. நாதமுனிகள் தாம் பெற்ற நாலாயிரம் பாசுரங்களையும் இயல், இசைக்குத் தக்கவாறு பிரித்தார்.

      அவ்வாறு பிரித்த ஒவ்வொரு பகுதியிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்கள் இருக்குமாறு அடைவு படுத்தினார்.

      பாசுரங்களை அவர் இசைப்பா, இயற்பா எனப் பிரித்து, இசைப்பாக்களை மூன்று
      பகுதிகளாகவும், இயற்பாக்களை ஒரு பகுதியாகவும் வகுத்தருளினார்.

      சுமார் ஆயிரம் பாடல்கள் இயற்பாவாகவும் மற்றையவை
      இசைப்பாவாகவும் வகுக்கப்பட்டிருக்கின்றன.

      முதலாயிரம்,
      இரண்டாவது ஆயிரமாகிய பெரியதிருமொழி,
      நான்காவது ஆயிரமாகிய திருவாய்மொழி ஆகிய மூன்றும் இசைப்பாக்கள்.
      இவையாவும் பண்ணுடன் பாடுதற்கு உகந்தவை என்னும் கருத்திலேயே இசைப்பா என்று தனியாகப் பிரித்துத்
      தொகுக்கப்பட்டன.

      மூன்றாவது ஆயிரமாகிய இயற்பா, இயலாகச் சேவிக்கத்தக்கது என்னும் பொருளில் அவ்வாறு பெயர்பெற்றது.

      இப்பாகுபாடும் இயல், இசை, நாடகம் என்னும் பழைய தமிழ் இலக்கிய மரபை நினைவூட்டுவதாய் உள்ளது. நாதமுனிகள் இசைப்பாக்களைத் தேவகானத்திலே ஏறிட்டுச் சேவித்ததாகவும் இயற்பாவை இயலாகச் சேவித்து வந்ததாகவும் கோயிலொழுகு என்னும் நூல் கூறுகின்றது.

      முதலாயிரம் 10 பிரபந்தங்கள் - 947

      இரண்டாம் ஆயிரம் - பெரியதிருமொழி
      (3 பிரபந்தங்கள்) 1134

      மூன்றாம் ஆயிரம் - இயற்பா (10) பிரபந்தங்கள் 593

      நான்காம் ஆயிரம் (ஒரே பிரபந்தம்) 1102

      24 பிரபந்தங்களுக்கும் மொத்தப் பாசுரங்கள்:

      3776


      நாதமுனிகளின் தொகுப்பில் அடங்கிய பிரபந்தங்கள்
      எண்ணிக்கை இருபத்துநான்கு ஆகும்.

      நாதமுனிகளுக்குப் பிறகு இராமாநுசர் காலத்தில் திருவரங்கத்து அமுதனார் பாடிய இராமாநுச நூற்றந்தாதியை அதன் தகுதிநோக்கி இயற்பாவை அடுத்து ஓதுவதற்கு உரியதாக மட்டுமே அமைத்தனர்.
      ஆதலால் பிரபந்தங்கள் இருபத்துநான்கு என்பதில் எந்த மாற்றமும்
      ஏற்படவில்லை.

      கோயிலொழுகு என்னும் நூல் நாதமுனிகள் பற்றிப் பேசுகையில் ஆழ்வார் பன்னிருவர் என்றும்,
      அவர்களால் இயற்றப்பெற்ற பிரபந்தங்கள் இருபத்துநான்கு என்றும் குறிக்கக் காண்கிறோம்.

      இக்குறிப்பு, நாதமுனிகள் தம் காலத்திலேயே ஆழ்வார்களின் பிரபந்தங்களை
      இருபத்துநான்காக வகுத்திருக்கலாம் என்று கருத இடமளிக்கிறது.


      நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் உள்ள மொத்தப் பாசுரங்களின் எண்ணிக்கை 3776 ஆகும். இவ்வாறே பதிப்பாசிரியர் பலரும் கொண்டுள்ளனர். இக்கணக்கில் நாலாயிரம் பாசுரம் பூர்த்தியாகவில்லை. ஆதலால் தனித்தனிப் பாடல்களாகக் கருதத்தக்க திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல், பெரிய திருமடல் இரண்டையும் 226 பாசுரங்களாகக் கணக்கிட்டு (இரண்டு அடிகளை ஒரு பாசுரமாகக்கொண்டு சிறிய
      திருமடல் 78லும்; பெரியதிருமடல் 148லும்; ஆகப்பாசுரம் 226)

      நாலாயிரமாகக் (3774 + 226 = 4000) கொள்ளும் முறை பின்பற்றப்பட்டது. இவ்வாறு கொண்டவர் நம்பிள்ளை;தென்கலை நெறியினர்.

      திருமடல்களை 118 பாசுரங்களாகக் கணக்கிட்டு, (சிறிய திருமடல் 40; பெரிய திருமடல் 78),
      நூற்றெட்டுப் பாசுரங்கள் கொண்ட இராமாநுச நூற்றந்தாதியையும் சேர்த்து நாலாயிரம் எனக்கொண்டவர் வேதாந்ததேசிகர்.இவர் வடகலை நெறியை நிறுவியவர். இவரது கணக்கின்படியும்
      நாலாயிரம் என்னும் எண்ணிக்கை (3774 + 40 + 78 + 108 =4000) நிறைவுபெறுகிறது.


      திருவாய்மொழிப் பாசுரங்கள் மொத்தம் 1102. எனினும் ஆழ்வார் தாமே, குருகூர்ச் சடகோபன் நேர்ந்த ஓர் ஆயிரம் (3-5-11; 3-6-11, 3-8-11; 3-9-11) எனப் பலவிடத்தும் பாடிச் செல்கின்றார். பெரிய திருமொழியில் பாசுரங்கள் 1084.
      அவைகளைக் குறித்தும் ஓர் அடியார் மங்கையர் கோன் ஈந்தமறையாயிரம் என்றே பேசுகிறார். இங்கெல்லாம் ஆயிரம் என்றே பேசப்படினும் முதலாயிரத்தில் ஆயிரத்துக்குக் குறைவாகவும், பெரியதிருமொழி, திருவாய்மொழிகளில் ஆயிரத்துக்கு அதிகமாகவும் பாடல்கள் அமைந்துள்ளன.
      இச்சான்றுகளால் ஆயிரத்துக்கு நூறு, ஐம்பது குறைந்தாலும் மிகுந்தாலும் ஆயிரம் என்று கூறும் வழக்கு இருந்ததாகத் தெரிகிறது. எனவே நாலாயிரக் கணக்குக்கு நூறு இருநூறு குறைந்தாலும் நாலாயிரம் என்றே வழங்கலாம் என்று இதற்கு அமைதி கூறுவார் அறிஞர் பிரதிவாதி பயங்கரம்
      அண்ணங்கராச்சாரியர்.

      Delete
    2. மேலே சொன்ன கருத்துக்கள் சரியா சார் ...

      Delete
    3. நானும் நீங்க எழுதிய மறுமொழியில் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்கிறேன். நன்றி

      Delete
  7. களைவாய் துன்பம் களையாது ஒழியாய் களைகண் மற்றிலேன்
    வளைவாய் நேமிப்படையாய் குடந்தைக் கிடந்த மாமாயா
    தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது
    இளையாது உனது தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
    Replies
    1. அருமை சார் ..

      இப்படி பதம் பிரித்த பாடல்கள் கொண்ட புத்தகம் ஏதும் இருந்தால் கூறவும் ......

      Delete
    2. வாய்ப்பு கிடைக்கும்போது பதம் பிரித்த நாலாயிரம், நந்தினி பதிப்பகம் (கடுகு சார் வெளியிட்டது) வாங்குங்கள். நன்றாக பதம் பிரிக்கப்பட்டிருக்கிறது. விற்பனை உரிமை ஸ்ரீ எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன், பெசண்ட் நகர், போன் 9444187365. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் உங்களுக்கு ஒரு செட் தருகிறேன்.

      Delete
  8. பாசுரங்களும் ஃ போட்டோக்களும் ரொம்பவே சூப்பர்

    ReplyDelete