06 August 2026

1.ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

ஒன்றாம் திருநாள்  -

 மூலவர்  -  கண்ணன்,

உற்சவர்  -  ஆண்டாள் திருக்கோலத்தில் 










நாச்சியார் திருமொழி

பன்னிரண்டாம் திருமொழி – 

12. மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல் 


எம்பெருமானின் எல்லோரையும் ரக்ஷிப்பேன் என்று சொன்ன வாக்கை நம்பினாள். அது பலிக்கவில்லை. பெரியாழ்வார் ஸம்பந்தத்தை நம்பினாள். அதுவும் பலிக்கவில்லை. இதை எண்ணிப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தாள். எம்பெருமான் ஸ்வதந்த்ரன் ஆகையாலே பெரியாழ்வாராகிய ஆசார்யர் மூலம் எம்பெருமானைப் பெற முயன்றாள்.

 அதுவும் கைகூடாததால் “எம்பெருமானோ ஸ்வதந்த்ரன், தன்னுடைய அடியார்களை ரக்ஷிக்காமல் விட்டால் அவனுக்கு அவப்பெயர் ஏற்படும், அவன் நம்மை ரக்ஷிப்பது என்று முடிவெடுத்துவிட்டால் வேறு யாரும் தடுக்க முடியாது, ஆகையால் அவன் ஸ்வாதந்த்ரியமே நமக்குப் பேறு கிடைப்பதற்கு வழியாக இருக்கும்” என்று எண்ணி மீண்டும் அவனிடமே செல்லப்பார்க்கிறாள். 


இப்படி உறுதியுடன் இருந்தும் அவன் வாராததால், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். அளவு கடந்த ப்ரேமத்தாலே அவன் வருமளவுக்கு இவளுக்குப் பொறுமை இல்லை. தன் ஸ்வரூபத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும் எப்படியாவது எம்பெருமானிடம் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணி, தன்னருகில் இருப்பவர்களைப் பார்த்து “எப்படியாவது என்னை எம்பெருமான் இருக்கும் வடமதுரை, த்வாரகை போன்ற இடங்களில் சேர்த்து விடுங்கோள்” என்று ப்ரார்த்திக்கிறாள்.


முதல் பாசுரம். “எம்பெருமான் வந்து கைக்கொள்ளும் வரை நாம் காத்திருக்கவேண்டும். இப்படிப் பதறக்கூடாது” என்று சொல்ல “என் நிலையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் பேச்சுக்கு இடமில்லை. உங்கள் வார்த்தையைக் கேட்பதற்கும் எனக்கு ப்ராப்தியில்லை”.


மற்று இருந்தீர்கட்கு அறியலாகா

 மாதவன் என்பதோர் அன்பு தன்னை

உற்று இ ருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் 

ஊமையரோடு செவிடர் வார்த்தை

பெற்று  இருந்தாளை ஒழியவே போய்ப் 

பேர்த்து ஒரு தாயில் வளர்ந்த நம்பி

மற் பொருந்தாமற் களம் அடைந்த 

மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்


என்னுடைய நிலைக்கு மாற்பட்டு இருக்கிற உங்களுக்கு அறிய முடியாததாய் மாதவன் விஷயமான அன்பை அடைந்திருக்கிற எனக்கு நீங்கள் கூறுவதெல்லாம் ஊமையும் செவிடனும் பேசிக்கொள்வதுபோல் வீணானது. இப்போது செய்யத்தக்கது, பெற்ற தாயான தேவகிப்பிராட்டியை விட்டு வேறொரு தாயாகிய யசோதையில் வீட்டிலே வளர்ந்தவனும் மல்யுத்தகளத்திலே மல்லர்கள் வருவதற்கு முன்பு தான் அங்கே முன்பே வந்திருப்பவனுமான கண்ணபிரானுடைய மதுராபுரியின் அருகிலே என்னைக் கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment