17 August 2026

10. ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம்

🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

ஆறாம்  நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும்  ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.

எட்டாம் நாள் இரவு  -- ஶ்ரீ ஆண்டாள் -  புஷ்பப் பல்லக்கு,  ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு (போன வருட படங்கள்)

ஒன்பதாம் நாள் - ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஶ்ரீ ரெங்கமன்னார் ஆடிப்பூர திருத்தேர் ...

ஒன்பதாம் நாள் இரவு திரு ஆடிப்பூர நந்தவனத்தில், ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த புனித இடத்தில் வைத்து விசேஷ ஆராதனையும், வேத பிரம்ம கோஷமும் 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பத்தாம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம் 










ஆண்டாள் செட்டியக்குடித் தெருப்பெண் அலங்காரத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

அரங்கன் வந்து தன்னைக் கைத்தலம் பற்றும் நாளும் விரைவில் வராதோ என்று ஆண்டாள்-தலைவி ஏங்கி,ஏங்கி உருகி மெலிந்து விடுவாராம்.

தலைவியின் தாய் தன் மகள் பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று 'இரக்கம் இல்லாத பெருமாளே' என்று கோபித்துக் கொள்வார்.


வாள்-நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள்;விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்! உம்மைக்
காண, நீர் இரக்கம் இலீரே

(திருவாய்மொழி 2-4-2)

தலைவியின் நிலை, தாயின் புலம்பல்,  தோழி இயம்புதல் ஆகியவற்றை பல பாசுரங்கள் வாயிலாக அரையர் ஸ்வாமி எடுத்துரைப்பார்.

108 திவ்ய தேசப் பெருமாள்கள், ஆண்டாள் நாச்சியாரை மணம் புரிய வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து விடுகிறார்களாம்.

அவர்களில் யார் ஆண்டாள் கனாவில் கண்ட பெருமாள் என்று கட்டுவிச்சி என்னும் குறத்தி குறி சொல்வாள். அரையர் ஸ்வாமியே குறத்தியாகவும் இருந்து சொல்வார்.

இதற்காக ஆண்டாள் சந்நிதியில் பாரம்பரியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நன்முத்துக்களை ஒரு தாம்பாளத்தில் பரப்பி, அவற்றை கைகளால் அலைந்து ஒவ்வொருவராக விலக்கி நிறைவாக அரங்கர்/ரங்கமன்னார் தான் ஆண்டாள் கவர்ந்த பெருமாள் என்று ஆண்டாளும், ரங்கமன்னாரும் கூடுவதாக கட்டுவிச்சி (அரையர்) உரைப்பார்.

இந்த வைபவத்தில் அரையரே கேள்வி-பதில் சொல்வார்....

தகுந்த பாசுரங்களை இசைப்பார்....சில இடங்களில் அபிநயமும் செய்வார்....






பட்டு உடுக்கும்; அயர்ந்து இரங்கும்; பாவை பேணாள் 
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் * 
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள், 
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் *
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் 
மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே 
கட்டுவிச்சி! சொல் என்னச் சொன்னாள், நங்காய்! 
கடல் வண்ணர் இது செய்தார்,காப்பார் ஆரே? 

11 2062

(திருநெடுந்தாண்டகம்)

என் மகளை இந்நிலைமைக்கு ஆளாக்கியவர் யார்? தாயின் கேள்விக்கு கட்டுவிச்சி தன் பதிலைப் பதிவு செய்கிறாள்..
அழகனின்.. அந்த அரங்கனின்.. காரியமே இது..

என்ன இது?

அவனே இதற்குக் காரணம் என்றால் என் மகளைக் காப்பவர் யார்?
அப்படி என்னதான் செய்துவிட்டான் அழகன்?
பட்டாடையை உடுத்திக் கொள்கிறாள்..
அவன் வரவுக்காய் காத்திருக்கிறாள்..
அவன் வரவில்லை..

ஏமாற்றத்தின் உச்சத்தில் ஏங்கித் தவிக்க விட்டான்..
விரும்பி விளையாடும் மரப்பாச்சி கூட தொடாத பொருளாகி விட்டது..
விழிகளில் நீர் ததும்ப உறக்கத்தை துறக்கின்றாள்..

என் அரங்கன் பள்ளி கொண்ட திருவரங்கம் எங்கே எனக்
கேட்டபடியே இருக்கிறாள்..
என் மகளை இந்நிலைமைக்கு ஆளாக்கியவன் அவனேதான்..







நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 

பத்தாம் பாசுரம்  -- இந்தப் பத்துப் பாசுரங்களை அர்த்தத்துடன் அனுபவிக்க வல்லவர்களுக்குப் பலம் சொல்லி முடிக்கிறாள்.


சீதை வாய் அமுதம் உண்டாய்! எங்கள்

 சிற்றில் நீ சிதையேல் என்று

வீதி வாய் விளையாடும் ஆயர் 

சிறுமியர் மழலைச் சொல்லை

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் 

வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்

கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவு 

இன்றி வைகுந்தம் சேர்வரே  10


ஸீதாப் பிராட்டியின் அதராம்ருதத்தைப் பருகினவனே! “நாங்கள் கட்டும் சிற்றில்களை நீ சிதைக்காதே” என்று சொல்லும், வீதியில் விளையாடும் இடைப் பெண்களுடைய மழலைச் சொற்களை உட்கொண்டு, வேதம் சொல்லும் வாயை உடையவர்களும், வேதத்தில் சொல்லப்படும் கர்மங்களைச் செய்பவர்களுமான மேன்மக்கள் வாழுமிடமான ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளுடைய (என்னுடைய) தமிழ்ப் பாசுரங்களை ஓதவல்லவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் பரமபதத்தை அடைவார்கள்.


ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment