15 August 2026

8. ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்

 🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்



3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

 ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

 6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு .

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள்  ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.

எட்டாம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ஸ்ரீரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

ஒன்பதாம் நாள் - ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஶ்ரீ ரெங்கமன்னார் ஆடிப்பூர திருத்தேர் ...




திரு ஆடிப்பூர நந்நாளும், உற்சவத்தின் ஒன்பதாம் நாளுமான நேற்று அதிகாலை 2 மணிக்கே ஆண்டாள், ரங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும்.

காலை 4.35 மணியிலிருந்து 5.30 மணிக்குள் கடக லக்கினத்தில் தேருக்கு எழுந்தருள்வார்கள்.

காலை 8.45 மணிக்கு ஆண்டாள் மனதுக்கினிய "கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா" முழக்கங்களுடன் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடிப்பார்கள்.

வழியெங்கும் பக்தர்கள் வெள்ளம்.

கோவிந்த நாம வெள்ளம்.சுமார் 3 மணி நேரத்தில் தேர் நிலையை அடையும்.(ஒரு காலத்தில் 3 மாதம் ஆயிற்றாம்!)மாலையில் தேரிலிருந்து, நந்தவனத்தில் உள்ள திரு ஆடிப்பூர மண்டபத்துக்கு எழுந்தருள்வார்கள்.

அங்கு அலங்காரங்கள் திருவாராதனைகளுடன் ஆடிப்பூர உற்சவ சாற்றுமறை நடைபெறும்.

இன்று (15/08)அதிகாலை தான் நிறைவு பெறும்.





ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் மகாத்மியம்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் தமிழகத்தின் இரண்டாவது பெரியதேர்.

1825 ஆம் ஆண்டிலேயே தேராட்டம் நடந்ததாம்.

 இப்போதுள்ள தேர் 1974 ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறது.

அதற்கு முன்னால் 1952 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெரிய தேர் மிக்க கலைநயம் மிக்க சிற்பங்களும், ஒன்பது மரச்சக்கரங்களும்,பட்டுப்பதாகைகளும், உச்சியில் 150 கிலோ எடையுள்ள கும்பக் கலசமும், ஒன்பது வடக்கயிறு களும் கொண்டு மிகஉயரமாக (160 அடி)பிரம்மாண்டமாக இருந்தது.

ஆயிரக்கணக்கானோர் தேர் இழுப்பார்கள்.தேர் நிலைக்கு வரப் பல நாட்கள் (சிலமாதங்கள்) ஆயின.

இரும்பு/இயந்திர உதவியின்றி தேர் ஓடியது....

 என்று தேர் நிலைக்கு வருகிறதோ அன்று தான் மங்கள ஆரத்தி எடுத்து,"இன்றோ திருஆடிப்பூரம்! எமக்காகவன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்" பாசுரம் சேவிப்பார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரமும், தேர்க்கொடியும் 10 கி.மீ. தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியுமாம்.

மரச்சக்கரங்கள் பழுதானதால் 18 ஆண்டுகள் இந்தத் தேர் ஓடவில்லை.

வேறு ஒரு சிறிய தேரைத் தான் ஓட விட்டார்கள்.பின் இரும்புச் சக்கரங்கள் செய்து 1974ல் பெரிய தேர் புதுப்பிக்கப்பட்டது.ஆனால் மீண்டும் சோதனை; தேரின் மேலடுக்குகள் சரிந்து விழுந்தன.

ஒரு முறை கலசமும் விழுந்து விட்டது.பின்னர் சில அடுக்குகளை எடுத்து,உயரம் குறைக்கப்பட்டது.எடைகுறைந்த மாற்றுக்கலசம் பொருத்தப் பட்டது. இதுவே இப்போதுள்ள தேர். 






நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 

எட்டாம் பாசுரம் -- எவ்வளவு இனிமையான பதார்த்தமானாலும், நெஞ்சில் கசப்பு இருந்தால், அது சுவையாக இருக்காது என்று தெரிந்துகொள் என்கிறார்கள்.


521

வட்ட வாய்ச் சிறு தூதையோடு

 சிறு சுளகும் மணலும் கொண்டு

இட்டமா விளையாடுவோங்களைச் 

சிற்றில் ஈடழித்து என் பயன்?

தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் 

சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்!

கட்டியும் கைத்தால் இன்னாமை

 அறிதியே கடல் வண்ணனே! 8


ஒளிபொருந்திய திருவாழியைத் திருக்கையில் ஏந்தி நிற்கும் எம்பெருமானே!   கடல்போன்ற வடிவை உடையவனே!  

வட்டமான வாயைக் கொண்ட சிறிய பானையோடு, சிறிய குச்சியையும் மணலையும் கொண்டுவந்து இஷ்டப்படி விளையாடும் எங்களுடைய சிற்றிலை மீண்டும் அழிப்பதனால் என்ன பயன்?

 கையால் தொட்டும் காலால் உதைத்தும் துன்புறுத்தாதே.

 நெஞ்சம் கசந்து போனால், சர்க்கரைக் கட்டியும் ருசிக்காது என்பதை அறிவாய்தானே?



ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗




No comments:

Post a Comment