மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்ற காட்சிகள் ...
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.
திருவிளையாடல் புராணத்தின் முதற்காண்டமாகிய மதுரைக்காண்டத்தில் பதினேழாவது படலமாக அமைந்துள்ளது.
வீரபாண்டியனின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. தெய்வ வழிபாடு நடத்தி சதுர்த்தி, சோமவாரம் போன்ற விரதங்களை கடைபிடித்தனர்.
நாட்கள் சில கழிந்தன. ஈசனின் அருளால் அரசியார் வயிற்றில் ஒரு சற்புத்திரன் தோன்றினான்.
புத்திரனுக்கு வேதப்படி சாதகன்ம முதலாக பிற சடங்குகளை வீரபாண்டியன் சிறப்புற செய்து முடித்தான்.
ஒரு நாள் வீரபாண்டியன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். விதி விளையாடியது.
வீரபாண்டியன் புலிக்கு இரையாகி பொன்னாடு போய் சேர்ந்தான். மன்னன் விண்ணுலகம் அடைந்த செய்தி கேட்டு மக்கள் சோகத்தில் மூழ்கினர். நாடே சோகக் கடலில் மூழ்கியது.
இந்த நேரத்தில் மன்னரின் பிற மனைவிகளும் அவரது புதல்வர்களும், அரண்மனையில் கிடைத்த பொன் ஆபரணம், மகுடம் போன்ற பிற பொருள்களையெல்லாம் கவர்ந்து கொண்டு தலைமறைவாகினர்.
அமைச்சர்கள் இளங்குமாரனைக் கொண்டு வீரபாண்டியனுக்கு இறுதி சடங்குகள் செய்து முடித்தார்கள். வீரபாண்டியனின் மைந்தனுக்கு முடிசூட்ட அமைச்சர்கள் விரும்பினர்.
அரண்மனைப் பொக்கிஷத்தை திறந்து பார்த்த போது நவமணிகள் இழைத்த முடியும், வேறு சில பொருட்களும் காணாமல் போயிருந்தது.
செய்வதறியாது நின்ற அமைச்சர்கள் திருக்குமாரனை அழைத்துக் கொண்டு திருக்கோயிலின் கோபுர வாயிலை அடைந்தனர்.
அங்கே சொக்கநாதப்பெருமான் ஒரு வியாபாரியைப் போன்று வேடமணிந்து அவர்கள் முன் வந்தருளினார்.
தங்க வியாபாரி அவர்களைப் பார்த்து, நீங்கள் கவலை கொண்ட முகத்தோடு இங்கு வரக் காரணம் என்ன? என்று கேட்டார். அமைச்சர்கள் அரண்மனையில் நிகழ்ந்த அனைத்தையும் அவரிடம் விளக்கமாகக் கூறினர்.
அதைக் கேட்ட வியாபாரி, அமைச்சர்களே! என்னுடன் வாருங்கள்.
கிரீடம் செய்வதற்கான தரமான நவரத்தினக்கற்கள் பல என்னிடம் உள்ளன.
காணாமல் போன கற்களை விட இவை தரமானவை. மேலும், பாண்டிய மன்னர்களுக்கு எங்கள் குடும்பத்தினரே பரம்பரை பரம்பரையாக கிரீடங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம்.
காணாமல் போன கற்களைப் பற்றிய கவலையை விடுங்கள். அவை மெதுவாகத் திரும்பக் கிடைக்கட்டும். பாண்டியனின் ஒற்றர்கள் திறமைசாலிகள். அவர்கள் எப்படியும் கற்களைக் களவாடியவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். அவை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.
புதிய கற்களை கிரீடத்தில் பதித்து தருகிறேன். அதைக் கொண்டு செல்வபாண்டியனுக்கு பட்டாபிஷேகம் செய்து விடலாம், என்றார்.
அமைச்சர்கள் அந்த தங்க வியாபாரியை இதற்கு முன் பார்த்ததே கிடையாது.
இருப்பினும், தங்களை அறியாமலே அவர் பின்னால் சென்றனர். கோயில் மண்டபம் ஒன்றில் அவர்களை அமர வைத்த வியாபாரி, தன்னிடமிருந்த பட்டுக் கம்பளம் ஒன்றை விரித்து, அதில் நவரத்தினக் கற்களைப் பரப்பினார்.
அமைச்சர்கள் அயர்ந்து போய் விட்டனர்.
இந்தளவுக்கு ஒளிசிந்தும் நவரத்தினங்களை அவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
பாண்டியனின் கிரீடத்தை அவை அலங்கரித்தால் நாட்டுக்கே பெருமை என எண்ணினர். முந்தைய கற்களை விட இவை தரத்திலும், அழகிலும் மிகையானவை என்பதைப் புரிந்து கொண்டனர்.
அவரை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தனர்.
கிரீடத்தில் அவற்றைப் பதித்துக் கொடுத்த வியாபாரி, அமைச்சர்களே! எனது சிறு வேண்டுகோளை நீங்கள் ஏற்க வேண்டும். விலைமதிப்பு மிக்க இந்த கிரீடத்தைக் கொண்டு பட்டாபிஷேகம் நடத்திய பிறகு, செல்வபாண்டியனை அனைவரும் அபிஷேகப் பாண்டியன் என வழங்க வேண்டும், என கேட்டுக் கொண்டார்.
அமைச்சர்களும் அதை ஏற்றனர்.
செல்வபாண்டியனும் அந்த கிரீடத்தை பார்த்து அகம் மகிழ்ந்தான்.
ஒரு நன்னாளில் செல்வபாண்டியனுக்கு முடிசூட்டி, அபிஷேகப்பாண்டியன் என்ற சிறப்பு பெயரையும் சூட்டி மகிழ்ந்தனர் அமைச்சர்கள்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தங்க வியாபாரி திடீரென காணாமல் போய்விட்டார்.
அவரைத் தேடியலைந்து ஓரிடத்தில் கண்டுபிடித்து அவருக்கு தக்க மரியாதை செய்ய மன்னனும், அமைச்சர்களும் விரைந்தனர்.
அப்போதும் வியாபாரி அங்கிருந்து மறைந்து விட்டார்.
இதென்ன மர்மம் என அனைவரும் ஓரிடத்தில் அவரைக் கண்டுபிடிக்க, அந்த வியாபாரி அன்னை மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தார்.
தங்கள் நாட்டின் மானம் காக்க வந்த அந்த தெய்வங்களை அவர்கள் அனைவரும் பரவசத்துடன் வணங்கினர். அபிஷேகப் பாண்டியனை வாழ்த்திவிட்டு அவர்கள் மறைந்தார்.
|
|
மூன்றாம் நாள் --- இரவு
காமதேனு வாகனத்தில் அன்னை மீனாட்சியும், கைலாய வாகனத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரும் எழுந்தருளி அருள்பாலிப்பார்கள்.
கைலாச வாகனம் அல்லது கையிலாச வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்த வாகனம் ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகிறது.
பத்து தலைகளுடனும், இருபது கைகளுடனும் சிவ பக்தனான இராவணன் வீணையை மீட்டியபடி இருப்பதாக வடிவமைக்கப்பெறும் வாகனம் அதிகார பீட இராவண வாகனமென்றும், இராவணன் கயிலையை சுமந்து இருப்பது போல வடிவமைக்கப்படும் வாகனம் கைலாசபீட ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது.
இராவணனின் உடம்பின் மேலுள்ள கயிலை மலையில் இறைவன் எழுந்தருள்வதைக் குறிப்பது கைலாச வாகனம்.
இராவணன்- ஆணவமலம் நிறைந்த உயிர்; கயிலாய மலை பிரபஞ்சம்.
இராவணன் தன் ஆணவத்தால் கயிலை மலையைத் தூக்குவதென்பது- ஆணவம் பிரபஞ்சத்தை அறிந்து இன்புற முயல்வதைக் குறிப்பதாக உள்ளது.
சிவபெருமான் தன் கால் கட்டைவிரலால் மலையை அழுத்தியபோது, ஆணவம் அழிந்த இராவணன் சாமகானம் பாடி இறைவன் அருளைப் பெற்றான்.
அதாவது ஆணவமலம் நிறைந்த உயிர் இறுதியில் ஆணவத்தை இழந்து, கடவுளை தியானித்து அவன் திருவடிகளை அடைகிறதென்பதை இது உணர்த்துகிறது.
சிவ தாண்டவ தோத்திரம் இராவணனால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் புகழ்பெற்ற துதி ஆகும். இது சிவபெருமானின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் சங்கத மொழிப்பாடலாக விளங்குகின்றது. தாளம் போடவைக்கும் நடையும் எதுகை மோனையும் இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ள அதேவேளை, அதில் மயங்கி ஈசனே நடனமாடுவார் என்ற பொருளில் "சிவ தாண்டவ தோத்திரம்" எனும் பெயர் காரணப் பெயராகவும் அமைகின்றது.
செருக்கோடு கயிலையைத் தூக்கி, அதன்கீழ் நசுங்குண்ட இராவணன், அதிலிருந்து மீள்வதற்காக இத்துதியைப் பாடி, ஈசனைக் குளிர்வித்ததாகச் சொல்லப்படுகின்றது, இத்துதியைப் பாடியபின்னர் தான், "சந்திரகாசம்" எனும் புகழ்பெற்ற வாளை, அவனுக்குச் சிவபெருமான் வழங்கினார்.
இதிலிருந்து இறைவனுக்குத் தீங்கு செய்தவர்களும் அடங்கிநின்று வழிபடுவாறாயின் அவனுக்கும் இறைவன் அருள்புரிவான் என்பதும் இதன் மூலம் இறையனார் பெருந்தன்மையும் நன்கு விளங்குகின்றது.
அன்னை அமர்ந்து வலம்வரும் வாகனமோ காமதேனு. தேவர் உலகில் கேட்டதெல்லாம் வழங்கும் கற்பக விருட்சமும், காமதேனுவும் இந்திரனிடம் இருக்கும் ஒன்று. இப்படிப்பட்ட அற்புத சிறப்பு வாய்ந்த காமதேனு அம்மனுக்கு வாகனம்.
பாற்கடல் கடையும் போது தோன்றிய அற்புதமான பொருட்களில் காமதேனுவும் ஒன்று. காமதேனு, விரும்பிய எல்லாவற்றையும் அளிக்கவல்லது. தன்னை வழிபடுபவர்கள் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன் என்பதை காமதேனு வாகனத்தில் அருட்பாலிப்பதன் மூலம் தேவி தெரிவிக்கிறாள்.
திருவாலவாய்
பாடல் எண் : 4
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பொழிப்புரை :
தேவர்தேவனே ! நீலகண்டனே ! மான்மறியையும் மழுப்படையையும் ஏந்தியுள்ளவனாய சைவ சமயக்கடவுளே ! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே ! ஆலவாயில் உறையும் அப்பனே ! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக .
மீனாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ....
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment