06 September 2022

நான்காம் நாள் --- தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்ற காட்சிகள் ... 

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

மூன்றாம்  நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.

 நான்காம் நாள் ---தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.









தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்.

வம்மிச சேகர பாண்டியனின் மகன் வம்மிச சூடாமணி ஆட்சிக்கு வந்தான். அவன் சண்பகப்பிரியனாக இருந்தான். அதனால் அவன் சண்பகவனம் ஒன்று அமைத்தான். அதனால் அவனுக்குச் சண்பகப் பாண்டியன் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது மணம் கமழும் சண்பக வனத்தில் அவ்வப்பொழுது தன் அரசமாதேவியோடு சென்று தென்றல் சுகத்தையும் பூவாசத்தையும் நுகர்வது உண்டு.

கோடையில் இளவேனிற் காலத்தில் ஒரு நாள் வெப்பம் தாங்காது குளர்ச்சியை நுகரும் பொருட்டுத் தன் தேவியோடு இளம் பூங்காவிற்குச் சென்றான்; அவளைக் கட்டி அணைப்பதற்கு முன் பூ மணம் கமழும் அவள் கூந்தலைத் தொட்டு மகிழ்ந்தான். கட்டிக் கரும்பே என்று பேசிக் கவிதை புனையும் அவன் மெய் தொட்டுப் பயின்று கூந்தலின் மணத்தை நுகர்ந்தான். அவள் கூந்தல் மணம் அவனைக் கவர்ந்தது; பக்கத்தில் வண்டுகள் அங்கே வந்து மொய்த்தன.

அவன் அந்த வண்டைப்பார்த்து விளிப்பது போன்று ஒரு கவிதை புனைந்தான்.

 "பூவுலகில் நீர் அறியாத பூ இல்லை; இவள் கூந்தலின் நறுமணத்தையும் நீ நுகர்கிறாய்; பூவை நாடும் நீ இந்தப் பூவையரைச் சுற்றி வருவது ஏன்? எனக்கு ஒர் ஐயம் எழுகிறது; இந்த என் தலைவியின் கூந்தலின் மணம் பூவின் மணம் எந்த மணம் சிறந்தது? அதை எனக்குத் தெரிவி; நீ ஒரு பூக்களின் ரசிகன்; நான் பாக்களின் ரசிகன்" என்று பாண்டியன் கூறினான். 

"நீ சுற்றிவரும் பூக்கள் நிறம்மாறியவை, மணம் மாறியவை. கலைத் திறன் படைத்த அவற்றின் நிலைமை அறிவாய்.

இத்தலைவியின் கூந்தலின் மணத்துக்கு நிகராக எந்தப் பூவின் மணம் உள்ளது." என்று கூறித் தலைவியின் நலம் பாராட்டினான் அந்த நினைவோடு அவன் அரசவை அடைந்தான்.

அக வாழ்க்கையில் ஏற்பட்ட ஐயம் அவனுக்கு ஓர் இலக்கியப் பிரச்சனையை உருவாக்கியது. அதைப் பொதுப்பட வைத்துப் புலவர்களின் ஆய்வுக்கு விட முற்பட்டான். எனினும் அவன் உள்ளக் கிடக்கையைப் பளிச்சிட்டுச் சொல்ல அவன் மானம் அவனைத் தடுத்தது. அதனால் அவன் ஒரு பொற்கிழியைக் கோயிலில் அவர்கள் முன் வைத்து ஓர் அறிவிப்புச் செய்தான், தான் உள்ளத்தில் நினைப்பதைக் கவிதையாக்கித் தந்தால் அவர்களுக்கு ஆயிரம் பொற்காசு என்று அறிவித்தான்.

புலவர்கள் அரசனின் கற்பனையை அறிய வாய்ப்பில்லை. அவன் சண்பகச் சோலை சென்றதும், பாண்டி மாதேவியின் நலம் பாராட்டியதும், அவ் ஏந்தல் கூந்தலைப் பற்றிவிசாரணை நடத்தியதும், அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் கவி யாதும் புனைய வில்லை; விடுகதை. என்று அதை விட்டுவிட்டனர்.

அந்த நிலையில் தருமி என்ற குடுமி வைத்த பார்ப்பன இளைஞன் இதனைக் கேள்விப்பட்டான். வயது ஆகியும் வாலிபப் பருவத்தில் மண வைபவத்தை அவன் கண்டது இல்லை. வறுமை அவனைச் சிறுமைப்படுத்தியது. மணம் செய்து கொள்ள ஆசை இருந்தது. பணம் இல்லை என்பதால் ஏங்கிக் கிடந்தான். கோயில் தெய்வத்திடம் முறையிட்டால்  கவிதையாவது கிடைக்காதா என்ற நினைவு ஓடியது.

இறைவனிடம் பொன்னும் பொருளும் நேரிடையாகக் கேட்கவில்லை; கவிதை ஒன்று தந்தால் அதைத் தான் காசாக்கிக் கொள்ள முடியும் என்று இறைவனிடம் முறையிட்டான்.

"அகப்பொருட்பாடல் வேண்டுமா?

புறப் பொருள் பாடல் வேண்டுமா? எது வேண்டும்?" என்று தெய்வக் குரல் எழுந்தது.

"காதற்பாட்டு வேண்டும்; அவ்வளவுதான்; அகமா புறமா இது எல்லாம் எனக்குத் தெரியாது" என்று கூறினான்.

கவிதை ஏடு ஒன்று அவன் முன் வந்து விழுந்தது. அதனை நாடி எடுத்துப் படித்துப் பார்த்தான்.

"கொங்குநேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற் செறியெயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே"

என்று எழுதி இருந்தது.

படித்துப் பார்த்தான்; பொருள் விளங்கவில்லை; அதனாலேயே அது கவிதையாகத் தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்தது.

"தேனைத் தேடிச் சுற்றி வரும் வண்டே விருப்பு வெறுப்பு என்று ஒரு பக்கம் பேசாமல் உண்மையைச் சொல். பூக்களை நாடி அவற்றின் தரம் அறிந்து, தேன் உண்டு மயங்கி வருவது உன் பிழைப்பு. மலர்களின் மணம் அதைப் பற்றிய குணம் அனைத்தும் நீ அறிந்து பழகி உள்ளாய். மயிலின் சாயலும் முல்லை போன்ற பற்களும் உடைய என் காதலியின் கரிய நீண்ட கூந்தலையும் நீ அறிவாய், நறிய பூ அதனினும் உண்டோ? இருந்தால் சொல்க நீ" என்பது அதன் பொருள். அதுவும் அவனுக்குத் தெரியாது.

இதை எடுத்துக் கொண்டு புலவர் அரங்கு ஏறினான். சங்க மண்டபத்தில் இக்கவிதையைத் தங்கு தடையின்றி 

 படித்தான்; அங்கு அமர்ந்திருந்த அரசனும் இப்பாட்டைக் கேட்டு உள்ளம் தடித்தான்; தன் மனத்தில் அலை மோதிக் கொண்டிருந்த சித்திரத்தை எழுது கோல் கொண்டு தீட்டியது போல் இருந்தது. "யான் நினைத்ததை, சொல்லக் கருதியதை இப்பாவலன் படைத்துக் காட்டினான். இந்த நாவலனுக்குப் பொற்கிழி கொடுத்தனுப்புக" என்று ஆணையிட்டான்.

அங்குச் குழுமி இருந்த புலவர்கள் பொறாமையால் பொருமிப் புழுங்கின்ர். இது தான் அரசன் நினைத்தது என்று தெரிந்திருந்தால் அப்பொருள் பற்றி ஒரு துறைக் கோவையாக நூறுஆயிரம் பாடல்கள் பாடி இருப்போமே; இவன் ஐந்தடிப் பாட்டு ஒன்று பாடி ஆயிரம் பொன் பெறுகிறானே இது அக்கிரமம், என்று நினைத்தனர்.

பாட்டில் ஏதாவது குறையிருக்கிறதா என்று யாப்பறிந்த புலவர்கள் கோப்பு அறிந்து பார்த்தார்கள். எதுகை மோனை அடிதொடை யாப்பில் எந்தக் குறையும் இல்லை.

புலவர் நக்கீரனால் இதைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. பிராமணனைப் பார்த்து 'நில்' என்றான்; அந்தச் சொல் அவனை அச்சுறுத்தியது.

"இதில் பொருட் குற்றம் உள்ளது" என்றான். கைப் பொருளுக்கே அவன் வெடி வைப்பது பார்த்து இடிகேட்ட நாகம் போல மனம் நொடிந்து போனான். சோம சுந்தரனை வேண்டினான்.

"சுந்தரனே, பரிசு இல்லை என்றாலும் எனக்குக் கவலை இல்லை; உன் கவிதையைக் குற்றம் சொல்கிறாரே இந்த நக்கீரர். நற்றமிழ் அறிந்த நீ வந்து உன் மானத்தைக் காத்துக் கொள்" என்றான் அப்பார்ப்பன இளைஞன்.

"நக்கீரரே நீர் கண்ட பொருட் குற்றம் யாது?" என்று சிவன் அவைப் புலவராக உடை உடுத்திச் சென்று வினா எழுப்பினார்.

"இந்த ஐயம் வந்திருக்கத் தேவையில்லை; மகளிர்க்கு மணம் சார்பு பற்றி வருவது; கூந்தலுக்கு இயற்கை மணம் இருந்தால்தானே ஒப்புமை கூறிப் பேசமுடியும்" என்றான் அவன்.

"மானிட மகளிர் கூந்தலுக்கு மணம் இல்லாமல் இருக்கலாம், தேவமகளிர்க்கு?" என்று கேட்டார்.

"அவர்களும் மந்தார மலர் அணிவதால் செளந்தரிய மணம் வீசுகிறது" என்றான்.

"பதுமினிப் பெண்களுக்கு?"

"எந்த மினுக்கிகளுக்கும் அப்படித்தான்" என்றான்.

"நீ வழிபடும் சோமசுந்தரரின் துணைவி மீனாட்சிக்கு"? என்று கேட்டார். "தான் ஆட்சி செய்தாலும் அவர்களுக்குத் தனி மணம் உண்டாகாது" என்றான்?.

"நீ யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்து பேசு"

"முக்கண்படைத்த சிவன் என்பது அறிந்து தான் பேசுகிறேன்" என்றான்.

"அக்கண் கொண்டு எரித்து விடுவேன்" என்றான்.

"நெற்றிக் கண் திறந்து அச்சுறுத்தினாலும் குற்றம் குற்றமே" என்றான்.

புலவனின் இறுமாப்பு அவனை வீழ்த்தியது. சிவனின் சினத்தால் அவன் வெந்து பொற்றாமரைக் குளத்தில் விழுந்தான். அவன் தவறு செய்தானா இல்லையா என்பதை இதுவரை யாராலும் முடிவு செய்ய இயல வில்லை.

நக்கீரனின் அஞ்சாமை போற்றப்படுகிறது. சிவனே ஆயினும் குற்றம் குற்றமே என்று பேசிய வீரம் தமிழ்ப் புலவர்களுக்கு உள்ள பேராண்மையைக் காட்டுகிற்து

வேகத்தில் அவனை எரித்த கடவுள் நிதானத்தில் அவன் செய்தது தவறு அல்ல என்பதை உணர்ந்தார். அவன் தெய்வ நிந்தனையாக எதுவும் கூறவில்லை. உள்ளதை உள்ளவாறு கூறும் புலவன் அவன் என்பதை அவர் உணர்ந்து அவனை மன்னித்தார். கவிதையில் இயல்பு நவிற்சியே தேவைப்படுவது. உயர்வு நவிற்சி கூடாது என்பதை அவன் உணர்த்தினான் என்பதையும் அறிந்தார்.

தமிழினத்துக்கு ஒரு பண்பாடு உண்டு. அச்சமில்லாமல் உண்மையை உலகுக்கு உணர்த்தும் வீரம் அது. அதனால் நக்கீரனைத் தமிழகம் என்றும் போற்றி வருகிறது. நக்கீரன் அஞ்சாமையின் உருவகம்.

அத்தகைய நக்கீரனை இழந்து சங்க மண்டபம் பங்க முற்றது கண்டு புலவர்கள் வருந்தினர். நிலவு இல்லாத வானத்தைப் போலவும், ஞானமில்லாத கல்வி போலவும் அச்சங்கம் இருந்தது. சோமசுந்தரரிடம் புலவர் அனைவரும் சென்று மன்றாடினர். கீரனின் சொல்லில் கீறல் விழுந்து விட்டது. கல்விச் செருக்கால் உம்மை எதிர்த்துக் குறுக்கே பேசி விட்டான்; பாதை பிறழ்ந்து விட்டது; கவிதையில் குற்றம் காணவேண்டியவன் இறைவியின் கூந்தலைப் பற்றி ஆராய்ந்தது தவறுதான்; மன்னிக்க வேண்டுகிறோம்' என்று முறையிட்டனர்.

 நக்கீரனின் தமிழ் புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்க பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்து கொடுத்தார். 

நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.










நான்காம் நாள்  இரவு

சுவாமி (  ஸ்ரீ சோமாஸ்கந்தர் ) தங்க சப்பரத்திலும் 

அன்னை யானை வாகனத்திலும் எழுந்தருளல்.

      











திருவாலவாய்

பாடல் எண் : 5

வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலி கொண் டென்றும்

உண்டது மில்லை சொல்லி லுண்டது நஞ்சு தன்னைப்

பண்டுனை நினைய மாட்டாப் பளகனே னுளம தார

அண்டனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.


பொழிப்புரை :


உலகத் தலைவனே ! ஆலவாய் அப்பனே ! வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி மிகவும் ஊர்களில் பிச்சையெடுத்தும் அப்பிச்சை உணவை உண்ணாது விடம் ஒன்றையே உண்டவன் என்று சொல்லப்படும் உன்னை அடியேன் வாழ்வின் முற்பகுதியில் விருப்புற்று நினைக்காத குற்றத்தினேன் . அத்தகைய அடியேனுடைய உள்ளம் நிறையும்படி அருள்செய்வாயாக .


மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment