08 September 2022

ஐந்தாம் நாள் -- உலவாக்கோட்டை அருளிய லீலை

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்ற காட்சிகள் ... 

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

மூன்றாம்  நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.

 நான்காம் நாள் ---தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.

ஐந்தாம் நாள் -- உலவாக்கோட்டை அருளிய லீலை





உலவாக்கோட்டை அருளிய லீலை ( சுவாமி பாதத்தில் நெற்குவியலைக் காணலாம்)

    திருவிளையாடல் புராணம் -- உலவாக்கோட்டை அருளிய படலம். 

 சொக்கநாதப் பெருமான், தன்னுடைய பக்தனான அடியார்க்கு நல்லான் என்பவனுக்காக அள்ள அள்ளக் குறையாத உலவாக்கோட்டை என்னும் தானியக் களஞ்சியத்தை  அருளிய வரலாற்றைக் கூறுகிறது இப்படலம்.

உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும்.

அடியார்க்கு நல்லானின் சிவனடியார் தொண்டு, அடியார்க்கு நல்லானுக்கு இறைவன் ஏற்படுத்திய சோதனை, அடியார்க்கு நல்லானின் குறையைத் தீர்க்க உலவாக்கோட்டை இறைவனார் அருளியது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.

உலவாக்கோட்டை அருளிய படலம்திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தெட்டாவது படலமாக அமைந்துள்ளது.




அடியார்க்கு நல்லானின் சிவதொண்டு:

மதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணி கற்பில் சிறந்து அறவழியில் செல்லுதலுக்கு கணவனுக்கு உதவினாள்.

அடியார்க்கு நல்லான் பெயருக்கு ஏற்றாற்போல் சிவனடியார்களிடத்தில் பேரன்பு கொண்டவன்.

தன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதைச் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விதல் என்னும் சிறப்பான சேவையைச் செய்து வந்தான்.

தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்குத் திருவமுது செய்விக்கப் பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது.

இந்நிலையில் இறைவனார், அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்தபோதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய்வித்தலைக் குறையாக‌க் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார்.

சொக்கநாதரின் சோதனை:

நாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது.

எனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை.

அடியார்க்கு நல்லானும், தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்யவும் இயலாமல் பலநாட்கள் பட்டினி கிடந்தனர்.

இறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். “அப்பனே, என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை.

எனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்குக் கடன் கொடுப்பார் யாரும் இல்லை. தயவுகூர்ந்து தாங்கள் கடன் தருவார் யாரேனும் உள்ளரேல் அவரைக் காட்டுங்கள்.அவரிடம் கடன்பெற்று அடியார்களுக்குத் திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம்” என்று மனமுருகி வழிபட்டான்.

சொக்கநாதர் உலவாக்கோட்டையை  அருளல்:

அடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார், “வேளாளனே, அஞ்சற்க. உன் வீட்டில் செந்நெல்லாகிய வெள்ளிய அரிசிக் கோட்டை ஒன்றைச் சேர்த்துள்ளோம்.

அஃது எப்பொழுது எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாதது. அதனைக் கொண்டு அடியவர்களுக்குத் திருவமுது செய்விக்கும் தொண்டினையும், பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம்” என்று திருவாக்கு அருளினார்.

அதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரைப் பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான்.

அங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக்கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்குத் திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் திருவடிப்பேறு பெற்றான்.

தானத்தில் சிறந்தது அன்னதானம். அதற்கு இறைவனார் அருள்புரிவார் என்பதே உலவாக்கோட்டை அருளிய படலம் கூறும் கருத்தாகும்.










ஐந்தாம் நாள் இரவு..

சுவாமி - வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும் 

அன்னை - யாளி வாகனத்திலும் எழுந்தருளல்.


 அதிகார நந்திதேவர் தோள் மீது அமர்ந்து பெருமான் வீதியுலா காண்கிறார். நந்தி என்பதற்கு வளர்வது என்பது பொருள் ஞானத்தாலும்,  செல்வச்செழிப்பாலும், வலிமையாலும், வளர்ந்து கொண்டே இருப்பதை நந்தி எனும் சொல் குறிக்கின்றது.

அளவற்ற உடல் வலிமையாலும், ஞானத்தால் நிறையப் பெற்றுச் செல்வச் செழிப்பிலும் திளைத்துக் கொண்டிருக்கும் மேன்மை பெற்றவர்கள் நந்திகள் என்று  அழைக்கப்படுகின்றனர். அவர்களது கூட்டம் நந்தி கணம் என்று அழைக்கப்படுகிறது.

உலகிலுள்ள அளவற்ற ஆற்றலுக்கும், பெருகும் ஞானத்திற்கும் முழுமுதற்  பொருளாக இருப்பதால், சிவபெருமான் நந்தி எனப்படுகின்றான்.

 அவனைச் சார்ந்து அவனது பேரருளைப் பெற்றவர்களும் நந்தி என்று அழைக்கப்படுகின்றனர். 

நந்தி  கணத்தினரில் முதன்மை பெற்றவராக இருப்பதுடன், சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலை மலையைக் காத்து நிற்கும் அதிகாரம் பெற்றவராகவும் இருப்பவர்  அதிகார நந்திதேவராவார்.

இவர் சிலாதல முனிவரின் குமாரராகத் தோன்றியவர். இவர் தனது கடும் தவத்தால் சிவபெருமானை மகிழ்வித்து அவர் அருளைப் பெற்றவர். சிவபெருமான்  இவருக்குத் திருமணம் செய்து வைத்துத் தமது கணங்களுக்கு அதிபதியாகப் பட்டம் சூட்டி அதிகார நந்தி என்று பெயரும் இட்டார்.

 இவர் திருக்கயிலையில்  கோபுரவாசலின் அதிகாரியாக இருப்பதைக் குறிக்கும் வகையில் பூ மண்டலத்திலுள்ள சிவாலயங்களில் கோபுரத்தின் குடை வரைப் பகுதியில் இவரது  திருவுருவத்தை அமைக்கின்றனர். இவரது சிந்தனை செயல் யாவும் திருக்கயிலை மலையின் காவல் பணியைப் பற்றியதாகவே இருக்கிறது என்பதால், இவரது  திருவுருவத்தை வடக்கிலுள்ள கயிலை மலையைப் பார்த்தவாறு இருப்பதாக அமைப்பது வழக்கம்.

கோபுரக் குடைவாயிலில் எழுந்தருளியிருக்கும் நந்திதேவர் சிவபெருமானைப் போலவே மூன்று கண்களைக் கொண்ட அழகிய முகம் கொண்டவர். சிவபெருமானின்  சாரூபம் பெற்றவராதலின், நான்கு தோள்களும் தலையில் சடைமுடியும் அதில் கங்கையுடன் சந்திரனையும் தாங்கியவராக விளங்குகின்றார். 

புலித்தோலை  அணிந்தவர். 

இடையில் நீண்ட வாள் உள்ளது. 

மேற்கரங்களில் மான், மழு, பொற்பிரம்பு ஆகியவற்றைத் தாங்கியுள்ளார். இவர் முன்னிரு கரங்களைக் கூப்பி,  சதாகாலமும் சிவபெருமானை அஞ்சலித்துக் கொண்டிருப்பவராக இருக்கிறார். இவருடைய இடப்பாகத்தில் இவருடைய தேவியான சுயம்பிரபா ( சுயம்சை)  நிற்கின்றாள். இவரைப் பெருமான் பவனி வரும் அழகிய வாகனமாகவும் அமைத்துள்ளனர்.

அதற்கு அதிகாரநந்தி வாகனம் என்பது பெயராகும். 

 அதிகார நந்தி தேவர் ஒரு காலை  மடித்து, மறுகாலை ஊன்றி முழந்தாளிட்டு அமர்ந்தவாறு உள்ளார். நாற்கரங்களுடன் திகழமும் இவரது, மேற்கரங்களில் மானும் மழுவும் திகழ, முன்கரங்களை  முன்னே நீட்டித் தனது தோளில் அமர்ந்திருக்கும் இறைவனின் திருவடிகளைத்  தாங்கும் கோலத்தில் உள்ளார்.

தனது இடையில் ஞான வாளைக் கட்டியுள்ளார்.  இவரது தோள் மீது அமைந்த பீடத்தில் பெருமானை அமர்த்தி உலாவரச் செய்கின்றனர். பெருந் திருக்கோயில்களில் மரத்தால் செய்து பலவிதமான வண்ணங்கள்  தீட்டிப் பொலிவுடன் விளங்கும் அதிகார நந்தி வாகனங்கள் உள்ளன.











திருவாலவாய்

பாடல் எண் : 6

எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநா னேசற் றென்றும்

வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்

நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்

கஞ்சலென் றால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

விடத்தைக் கழுத்தில் அடக்கிய , சிவம் என்ற சொற் பொருளானவனே ! ஆலவாயில் அப்பனே ! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக .


மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓



No comments:

Post a Comment