09 September 2022

ஆறாம் நாள் --- பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்ற காட்சிகள் ... 

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

மூன்றாம்  நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.

 நான்காம் நாள் ---தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.

ஐந்தாம் நாள் -- உலவாக்கோட்டை அருளிய லீலை

 ஆறாம் நாள் --- பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை









ஆறாம் நாள் ---குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்த "பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை" ( கையில் வாளுடன் சொக்கநாதப் பெருமான்)


 திருவிளையாடல் புராணம் -அங்கம் வெட்டிய படலம். 

குரு அபராதம் என்பது சனாதனத்தில் மன்னிக்க முடியாத பாவச்செயல் என்பதை உணர்த்துவதே மதுரையில்  நடைபெறும்  பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல். 

குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் மதுரையில் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்று இருந்தது. முதியவர் ஒருவர் தனது மாணவர்கர்ளுக்குப் பயிற்சி அளித்துத் வந்தார். அவரது மனைவியின் பெயர் மாணிக்கமாலை. அழகிலும் அழகு;

பேரழகு பெட்டகமாக அவள் திகழ்ந்தாள். முதியவருக்கேற்றபடி இல்லாமல் இளமை தவழும் முகத்துடன் இருந்தாள். 

 பயிற்சிக்கு வந்த மாணவன் ஒருவனின் ஓரக்கண் அடிக்கடி அவளை வட்டமிட்டபடியே இருந்தது. அவனது பெயர் சித்தன். வாள் வித்தையில் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினான்.

 அவனது வாள் வீச்சைச் சக மாணவர்கள் பாராட்டினர். ஒருவனுக்குப் பாராட்டு கிடைக்கும் வரை அதற்காக ஏங்குவான். கிடைத்து விட்டால் மிருகமாக மாறி விடுவான். தன்னை விட பெரிய ஆள் மதுரையில் இல்லை என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான். அந்த மமதையுடன் தனது பெயரில் சொந்தமாக மற்றொரு வாள் பயிற்சிக் கூடத்தை ஆரம்பித்தான். 

அவனே பலருக்குப் பயிற்சி கொடுத்தான். செல்வமும் கொட்டியது. இதன்பின்னர் அகம்பாவம் அதிகரித்தது. மாணிக்கமாலையைத் தொடர்ந்து நோட்ட மிட்டான். 

குரு இல்லாத நேரங்களில், அவரது வீட்டிற்கு வருவான். தனியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுப்பான்.அவளைப் போல் அழகி யாருமில்லை என்று கவர்ச்சியாகப் பேசுவான். 

குருபத்தினியோ,அவனது பேச்சின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவனை வெறுத்து ஒதுக்கினாள்.

நாள்கள் நகர்ந்தன. ஒருமுறை, அவளை அடைந்தே தீர வேண்டுமென்ற வெறியோடு, குரு வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டிடிற்குள் நுழைந்தான். 

கதவைத் தாழிட்டான். மாணிக்கமாலை அதிர்ந்து விட்டாள்.என் ஆசைக்கு இணங்குகிறாயா, இல்லையா? என்று அவளை மிரட்டினான். மாணிக்கமாலை அவனுக்குத் தக்க அறிவுரை கூறினாள். ஆனால், அந்த காமந்தகன் கேட்பதாக இல்லை.

அவளது கையைப் பிடித்துத்து இழுத்தான். அவள் அலறினாள். 

எப்படியோ, அவனைப் பிடித்துத் கீழே தள்ளினாள். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டாள். அந்தக் கொடியவனும் வெளியே வந்து, அடியே! இன்று நீ தப்பிவிட்டாட்டாய், ஆனால், என்றாவது ஒருநாள் உன்னை அடைந்தே தீருவேன், என சவால் விட்டுச் சென்றுவிட்டான். 

மாணிக்கமாலை அழுதாள்.

 ஆனால், கணவரிடம் இதுபற்றி ஏதும் சொல்லவில்லை. 

கணவரிடம் சொன்னால்,அவர் வாளெடுத்துச் செல்வார்.

 சிஷ்யனிடம் சண்டை போடுவார்.  ஒருவேளை அந்த சண்டையில் அவர் கொல்லப்படலாம், அல்லது சிஷ்யன் கொல்லப்படலாம். எதுவானாலும்,அது அவருக்கு அவமானத்தையே ஏற்படுத்தும். 

சிஷ்யன் கொல்லப்பட்டால், ஒரு குருவே இப்படி செய்யலாமா? சின்னஞ் சிறுவனை ஒரு குரு வெல்வது என்ன உலகில் அதிசயமா?என்ற பேச்சு எழும். 

அவர் தோற்றால், ஒரு சிறுவனிடம் தோற்றானே இந்தக் கிழவன் என்ற அவமானச்சொல் காதுகளைத் துளைக்கும். அதைக் கேட்டுட் அவர் உயிரையே விட்டாலும் விட்டு விடுவார். இந்த இக்கட்டான நிலையில் அவள், சோமசுந்தரப்பெருமானை நாடிச் சென்றாள். 

மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து அன்னை மீனாட்சியிடம், "தாயே! பராசக்தி,அம்மா! உன் ஆட்சி நடக்கும் மதுரையில் இப்படி ஒரு அநியாயம் நடக்கலாமா? பத்தினிப் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற அவச் சொல் உனக்கு வரலாமா? இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் எனக்கு, அந்தக் கயவனிடமிருந்து விடுதலை கொடு. அவனை அழித்துத் விடு", என்று கதறினாள்.

பின்னர் சோமசுந்தரர் சன்னதிக்குச் சென்று, "மதுரை வேந்தே! என்னைக் காப்பாற்ற வேண்டியது உன் கடன். திருவடி தூக்கி உலகையே ஆட்டுவிக்கும் நடராஜா! குஞ்சிதபாதா!அண்ணலே! எனக்கு அந்தக் காமாந்தகனிடமிருந்து பாதுகாப்பு கொடு" என்று வேண்டினாள்.

நியாயமாக வேண்டியோர்க்கு வேண்டுவன தரும் அண்ணல் சோமசுந்தரரின் இதயத்தையே அவளது அழுகுரல் இளக்கி விட்டதோ என்னவோ! அவள் வெளியேறியவுடன், அண்ணலும் கிளம்பி விட்டார். 

 மாணிக்கமாலையின் கணவரைப் போலவே வேஷமிட்ட அவர், சித்தன் நடத்திய பயிற்சிக்கூடத்துக்கு வந்தார்.  குருவைக் கண்டதும் சித்தன் அதிர்ந்து விட்டான்.

மாணிக்கமாலை ஏதாவது சொல்லிக் கொடுத்து இங்கே வந்திருக்கிறாரோ? என்னாகப் போகிறதோ என கலங்கினான். 

குருவாக வந்த சோமசுந்தரரோ அதுபற்றி எதுவுமே பேசவில்லை. 

மாறாக வம்புக்கு அவனை இழுத்தார். 

"சித்தா! ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்கக்கூடாது. அதுபோல், ஒரே ஊரில் இரண்டு வாள் பயிற்சிப்பள்ளிகள் இருப்பதையும் நான் விரும்பவில்லை. நீ திறமையான மாணவன் தான்! ஆனாலும், என்னிடம் பயிற்சி பெற்றவன் என்பதை மறந்துவிடாதே. ஒருவேளை, உன் பயிற்சிக்கூடம் மட்டும் தான் இருக்க வேண்டுமென நீ நினைத்தால், என்னுடன் வாள் போருக்கு வா. இருவரும் போரிடுவோம். நீ ஜெயித்துத் விட்டால், உன் கூடம் மட்டும் மதுரையில் இருக்கட்டும். நான் எனது பள்ளியை மூடிவிடுகிறேன்" என்றார். 

ஆணவம் மிக்க சித்தன் இந்தச் சவாலை ஏற்றான். இதோடு குருவைத் தொலைத்து விடலாம். அதன் பிறகு மதுரையில் நமது ராஜ்யமே நடக்கும். குருபத்தினியையும் எளிதில் அடைந்துவிடலாம் என்பது அவன் கணக்கு.

சண்டை துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே சோமசுந்தரரின் கை ஓங்கியிருந்தது.

 அவரை எதிர்க்கவல்ல அசுரர்கர்ளே இல்லாத போது, இம்மாதிரி மானுட ஜென்மங்கள் என்ன செய்யமுடியும்? சித்தன் திணறினான். 

அவனது வாள் பறந்தது. 

சோமசுந்தரர் அவன் முன்னால் ஆவேசத்துத்டன், "அடே குரு துரோகி! குருவின் பத்தினியையை அடையவா ஆசைப்பட்டாய். அவளை எப்படியெல்லாம் வர்ணித்தாய். அவளை ரசித்துப் பேசிய உன் நாக்கு இனி இருக்கக்கூடாது" என்று நாக்கைத் துண்டித்தார். 

இரத்தம் வழிய வழிய வலி தாளாமல் அவன் மண்ணில் விழுந்து புரண்டான். 

சுவாமி அவனை விடவில்லை." அடே துரோகி! குருவின் மனைவியைக் கையைப் பிடித்தா இழுத்தாய்? இந்தக் கை தானே இழுத்தது, இந்த கை தானே அவளை அணைக்க முயன்றது " என்று சொல்லி இரண்டு கரங்களையும் துண்டித்தார். 

சித்தன் அலறினான். இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது. "சண்டாளனே! உன்னை அங்கம் அங்கமாக வெட்டிட்னாலும் என் ஆத்திரம் அடங்காது" என்றவர், "இந்தக் கால்கள் தானே குரு இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்றன" என்று சொல்லி கால்களைத் துண்டித்தார்.

 அவனது உடல் துடித்தது. சித்தனின் ஆவி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. பின்னர் குரு வேடத்தில் இருந்த சோமசுந்தரப் பெருமான் மறைந்துவிட்டார். இதை கூடிநின்று பார்த்துக் கொண்டிருந்த மக்கள் குருவின் இல்லத்திற்குச் சென்றனர். 

 அங்கு அவர் இல்லை. அவர் எங்கு சென்றிருப்பார் என அறியாத அவர்கள், அவரது மனைவி மாணிக்கமாலையிடம், "குருநாதர் இப்போதுதான் சித்தனை வெட்டிச் சாய்த்தார். அதன்பிறகு அவரைக் காணவில்லையே. இங்கு வந்தாரா?"என கேட்டனர்.

மாணிக்கமாலை அதிர்ந்து போனாள். 

"அவர் அப்படி செய்பவர் அல்லர்;மாணவன் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவனைக் கொலைசெய்யும் அளவுக்குத் துணியமாட்டார்.சற்று நேரத்திற்கு முன் வரை அவர் இஙகுதான் இருந்தார்.  நீங்கள் குறிப்பிடுகிற நேரத்தில் வீட்டில் இருந்த அவர் சித்தனை எப்படி வெட்டியிருக்க முடியும்? கோயிலுக்கு அவர் சென்றிருக்கிறார். இப்போது வந்துவிடுவார் " என அவள் சொல்லிக்

கொண்டிருக்கும்போதே குரு வீட்டிட்ற்கு வந்தார்.

அவரிடம் நடந்த சம்பவம் பற்றி மக்கள் கூறினர். வியப்படைந்த அவர், "என் மாணவனை நானே கொல்வேனா? என்னை வஞ்சிக்க நினைத்த அவனை சோமசுந்தர பெருமானே சம்ஹாரம் செய்திருக்கிறார் என்றுதான் கருதுகிறேன். எனது வடிவில் அவர் வந்திருக்கிறார் " என பரவசத்துடன் கூறினார்.

 இந்த சம்பவம் ஊரெங்கும் பரவியது. குலோத்துங்க மன்னனின் காதுக்கும் விஷயம் எட்டியது. அந்த தெய்வ தம்பதியரைப் பார்ப்பதற்காக அவன் அவர்களது இல்லத்திற்கே விரைந்தான். அந்த தம்பதியர் மன்னனின் காலில் விழுந்து வரவேற்கச் சென்றனர் அதை தடுத்த மன்னன், "நீங்கள் இருவரும் சோமசுந்தர பெருமானின் அருளைப் பெற்றவர்கள். உங்களுக்காக அவர் சித்தனுடன் போராடி அவனை அழித்துள்ளார். இப்படி அவரது பேரருளைப் பெற்ற நீங்கள் எல்லோராலும் வணங்கப்படும் தகுதியை அடைந்திருக்கிறீர்கள். நான்தான் உங்களிடம் ஆசி பெற வேண்டும்" எனக்கூறி, அவர்களது பாதங்களில் விழுந்தான்.   

மேலும் குருவுக்குப் பசுக்களையும் நிலமும் தானமாக அளித்தான்.அவர்களை யானையில் அமரவைத்து ஊர் முழுவதும் பவனி வரச்செய்தான். இந்த சம்பவத்திற்குப் பிறகு குலோத்துத்ங்க பாண்டியன் தன்னுடைய மகன் அனந்தகுண பாண்டியனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். சிலகாலம் வாழ்ந்த அவன் சோமசுந்தர பெருமானின் திருவடியை எய்தினான்.













ஆவணிமூலத் திருவிழா  ஆறாம் நாள்  இரவு

சுவாமி  -- தங்க ரிஷப  வாகனத்திலும் 

அன்னை ---வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளல்.

சிவபெருமானின் திருக்கோலங்களில் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூடமூர்த்தி . திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானது ரிஷப வாகனக் காட்சி காண அடியவர்கள் காத்து நிற்பர்.சிவப்பரம்பொருள் தன் அடியவர்களுக்கு ரிஷப வாகனராக திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணம் மூலம் அறிகிறோம் .

கருணையே திருமேனியாகக் கொண்ட அம்பிகையோடு எம்பெருமான் அறத்தின் வடிவமான ரிஷபத்தின் மீது எழுந்தருளி உயிர்களை நோக்கி வரும் எளிமையையும் பெருங்கருணையையும் இந்தக் கோலம் காட்டுகிறது.

சிவப்பரம்பொருள்,பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற்காக , தேவர்கள் எல்லோரும் படைகளாகவும் சூரிய, சந்திரர்கள் சக்கரமாகவும், உலகம் தேராகவும் அமைய விஷ்ணுவை அம்பாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் கொண்டு சிவன் அவர்களை அழிக்கப் புறப்பட, தேவர்கள் தாம் இல்லாவிட்டால் ஈசனால் அவர்களை அழிக்க முடியாது என்று நினைக்க, செருக்குற்ற தேவர்களை அடக்க புன்முறுவல் பூத்து அச்சிரிப்பினாலேயே திரிபுரங்களை அழியச் செய்தருளினார்.தேரும் முறிந்தது;.முப்புரமும் எரிந்தது !

உடனே திருமால் ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினார் என்கிறது திருமுறை.

இந்த ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உமையோடு ஆரோகணித்ததால் அவருக்கு ' 'ரிஷபாரூடமூர்த்தி'' என்று பெயர் என்கிறது சிவப்பராக்கிரமம் என்னும் நூல். 

இந்த வடிவ அம்பிகை "தர்மச்சித்திப்பிரதாயினி "எனப்படுகிறார்.


காளை மீது அமர்ந்த திருக்கோலம் - ரிஷபாரூடர்

காளை அருகில் நிற்கும் திருக்கோலம் - ரிஷபாந்திகர்

உலகம் அழியும் போது தானும் அழிய நேரும் என்ற பயம் தர்மதேவதைக்கு வந்தது. ஊழிக்காலத்தில் சிவபெருமான் உமாபார்வதியுடன் சேர்ந்து திருநடனம் புரிவார். அந்நாளில் புதுஉலகம் தோன்றுவிக்கப்பெறும். எனவே தர்மதேவதை சிவபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் சரணடைந்தார். தர்மதேவதை ரிசபமாக மாறிநிற்க, ரிசபத்தின் தலையை சிவபெருமான் தொட்டு ஆசிதந்தார்.

சிவபெருமான் காளையின் மீது சாய்ந்தபடி, இடக்காலை ஊன்றி, வலக்காலை ஒய்யாரமாக தாங்கியபடி நிற்கும் வடிவம் ரிஷபாந்திகராகும். 

இவ்வடிவத்தில் இடபுறம் உமையம்மை காட்சிதருகிறார்.












திருவாலவாய்

பாடல் எண் : 7

வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன்

செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட

குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள

அழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.


பொழிப்புரை :

தெள்ளிய அலையில் தோன்றிய விடத்தை உண்ட இளையோனே ! அழகிய வில்லை ஏந்தியவனே ! கூத்தனே ! மாற்றுயர்ந்த தங்கம் போன்றுள்ள அழகனே ! ஆலவாயில் பெருமானே! குறைபாடில்லாமல் உன்னைவாழ்த்தி வழிபடும் அடியவனாகிய யான் உன்னுடைய செழித்த மலர்போன்ற திருவடிகளைத் தரிசிக்குமாறு அருள்செய்வாயாக .

மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment