முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.
நான்காம் நாள் ---தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.
ஐந்தாம் நாள் -- உலவாக்கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் --- பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் --- வளையல் விற்ற லீலை
ஏழாம் நாள் --- வளையல் விற்ற லீலை.
(கையில் வளையலுடன் சொக்கநாதப் பெருமான்)
திருவிளையாடல் புராணம் - வளையல் விற்ற படலம்.
முற்காலத்தில் மதுரையிலேயே தாருகாவனம் என்ற பகுதி இருந்ததாகக் கருதப்படுகிறது. அங்கு பல ரிஷிகள் தங்கள் பத்தினியருடன் வசித்து வந்தனர்.
அந்தப் பெண்களுக்குத் தாங்களே உலகில் பேரழகு கொண்டவர்கள் என்றும், தங்களது கற்பே உயர்ந்ததென்றும் கர்வம் இருந்துவந்தது.
இவ்வாறு நினைப்பதன் மூலம், உலகிலுள்ள மற்ற பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களது மனதில் வேர்விட்டது. இவர்களையும் விட உயர்ந்த பெண்கள் உலகில் உண்டு என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த திருவுள்ளம் கொண்டார் சோமசுந்தரர்.
இதற்காக அவர் பட்டுக்கோவணம் உடுத்தி, புலித்தோலை மார்பில் சுற்றி, திருநீறு அணிந்து, செக்கச்சிவந்த மேனியுடன், திருவோட்டுடன் தாருகாவனத்துக்குள் புகுந்தார். இதுபோன்ற துறவிகள் வந்தால் பக்தியல்லவா பெருக்கெடுக்க வேண்டும்!
தாருகாவனத்துத் ரிஷி பத்தினிகளின் உள்ளத்தில், ஆஹா இவன் பேரழகனாக இருக்கிறானே என்ற எண்ணம் எழுந்தது. அவர்கள் கற்பிலும், அழகிலும் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக மற்றவர்களை உதாசீனப்படுத்தும் புத்தி இருக்கிறதே! இதை அகற்றத் தானே இறைவன் வந்திருக்கிறார்.
வந்தவர், அவர்களது மனங்களை மயங்கச் செய்தார்.
தன்னைப் பேரழகன் என வர்ணிக்கும்படி செய்தார். திருமணமான பெண்கள் மாற்றானை பேரழகன் எனக் கருதினாலே அவர்களது கற்புக்குப் பங்கம் வந்துவிடும். அந்தப் பெண்களும் தங்கள் கற்புத்திறனை இழந்தனர். தங்களையே மறந்து பிக்ஷைகேட்டுத் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்த சோமசுந்தரரைக் கண்டு மயங்கினர்.
நீயே பேரழகன் என்று மயங்கிய அவர்கள் உடல் மெலிந்தனர்.
அவர்களது வளையல்கள் கழன்று திருவோட்டில் விழுந்தன.
சில பெண்கள் இடையில் அணியும் மேகலைகளும் கழன்றன.
அவற்றையும் தங்களையும் அறியாமல் அந்த திருவோட்டில் இட்டனர். பின்னர்,ஓரளவுக்குத் சுதாரித்துத் , தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர்.
ஒரு பிச்சைச்சைக்காரப் பேரழகனிடம் சற்று நேரமேனும் தங்கள் மனதைப் பறி கொடுத்தது நினைத்து வருந்தினர். தங்களுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
தங்களையறியாமல் நடந்த இந்த தவறு கணவன்மாருக்குத் தெரிந்தால் நிலைமை என்னாகும்?மேலும், வளையலும், மேகலையும் எங்கே என அவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது?அவர்களது உடல் நடுங்கியது. அவர்கள் தங்களையும் மறந்து அந்த பிக்ஷைக்காரனின் பின்னால் சென்றனர்.
வளையல்களையும், மேகலையையும் தந்துவிடும் படி கெஞ்சினர். சிவனோ, அதைக் கண்டு கொள்ளவே இல்லை. நடந்து கொண்டே இருந்தார். அவரிடம்,தங்கள் பொருட்களைப் பெற முடியாததால் இல்லம் திரும்பிய அவர்கள், தங்கள் கணவன்மாருக்கு இது தெரிந்தால் என்னாவது என்ற கவலையுடன் இருந்தனர்.
முனிவர்களும் வந்துவிட்டனர்.
ரிஷிபத்தினிகள் மனம் பதைக்க நின்று கொண்டிருந்தனர்.
தங்கள் மனைவியரின் மனநிலை மாறிப்போனது கண்டு கோபமடைந்த ரிஷிகள், கமண்டல நீரை அவர்கள் மீது தெளித்து, பெண்களே! சோமசுந்தரரிடம் மன சஞ்சலப்பட்ட நீங்கள் அவரின் மதுரையில் வசிக்கும் வணிகர் குலத்தில் பிறவி எடுங்கள், என்று கூறி விட்டனர்.
அந்தப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம், தாங்கள் மீண்டும் முனிபத்தினிகளாக வரம் கேட்டனர்.
பெண்களே! மதுரையில் நீங்கள் வசிக்க இருக்கும் வீடுகளுக்கு பிக்ஷைகேட்டு சோமசுந்தரர் வருவார். அவருக்குப் பிக்ஷையிடும் போது, அவரது கைகள் பட்டு உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்றனர்.
அதன்படி அந்தப் பெண்கள் மதுரையில் வணிகர் குலத்தில் பிறந்தனர்.
அவர்கள் சோமசுந்தரரின் கோயிலுக்குத் தினமும் சென்று பெருமானை வணங்கி வந்தனர். சோமசுந்தரர் அவர்கள் மீது கருணைகொண்டார்.மீண்டும் அவர்கள் ரிஷிபத்தினிகளாக தன் திருவிளையாடலைத் தொடங்கினார்.
ஒரு வளையல் வியாபாரி போல் வேடமணிந்தார். அந்தப் பெண்கள் முனிபத்தினிகளாக இருந்த போது தன்னைக் கண்டு கழன்று விழுந்த வளையல்களை எல்லாம் கோத்துத் தன் முதுகில் போட்டுக் கொண்டார்.
வளையல் வாங்கலையோ வளையல், என்று கூவியபடியே வணிகர்கர் வசிக்கும் தெருவுக்கு வந்தார். வணிகர் குலப்பெண்களாகப் பிறந்த ரிஷிபத்தினிகள் அந்தக் குரல் கேட்டு வெளியே வந்தனர். கம்பீரமான அழகான இளைஞனாக வந்த சோமசுந்தரரைக் கண்டு வெட்கப்பட அவர்கள், அவர் கைப்பிடித்துத் வளையல் இட்டால் வெட்கமாக இருக்குமே என அஞ்சினர். இருந்தாலும் வளையல் மீதான ஆசை விடவில்லை. அவர்கள் அந்த இளம் வியாபாரியை அழைத்துத் தங்களுக்கு வளையல் அணிவிக்கும்படி வேண்டினர்.
ஈசனும், அவர்களின் கைப்பிடித்து வளையல்களை அணிவித்தார்.
அப்போது அவர்களின் உள்ளம் எங்கோ பறந்தது.
அவர்கள் தன்னிலை மறந்தனர்.
மீண்டும் மீண்டும் அவரிடம் கையை நீட்டி வளையல் அணிவிக்க வேண்டும் போன்றதொரு உணர்வு தோன்றியது.
வணிகரே! இந்த வளையல்கள் மிக அழகாக உள்ளன. இவற்றை எங்கே கொள்முதல் செய்தீர்?நாளைக்கும் இதே போல வளையல் கொண்டு வாருங்கள், என்றனர்.
பின்னர், வாங்கிய வளையல்களுக்குரிய பணத்தை நீட்டினர்.
அதை வாங்க மறுத்த நாளையும் என்னை வரச்சொல்லி இருக்கிறீர்கள் அல்லவா? அப்போது, மொத்தமாக பணம் பெற்றுக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு, அவர்களின் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிவிட்டார்.
அந்தப் பெண்களுக்கு அவரை விட மனமே வரவில்லை. ஏதோ ஒரு சக்தி உந்த, அந்தப் பெண்கள் எல்லாம் அவர் பின்னாலேயே சென்றனர்.கோயிலுக்குள் சென்ற அவர் சுந்தரேசரின் கருவறைக்குள் சென்றார்.பெண்களும் பின் தொடர்ந்தனர்.
அவர் சிவலிங்கம் இருக்கும் இடம் வரை சென்றுவிட்டார்.
அந்தப் பெண்கள் அதிர்ச்சியுடன் அவரை நோக்கினர்.
லிங்கத்தின் அருகில் சென்ற அவர், லிங்கத்துடன் ஐக்கியமாகி விட்டார்.
அதன்பின்தான் வந்தவர் சோமசுந்தரர் என்பதையும், வணிகர் குலத்தில் பிறந்த தங்களை ஆட்கொள்ள வந்தவர் என்பதும் புரிந்தது.
சிவதரிசனம் பெற்ற அவர்கள் மதுரையில் பல்லாண்டு வாழ்ந்தபின், மீண்டும் ரிஷிபத்தினிகளாகும் பாக்கியம் பெற்றனர்.
தென்பாண்டி மன்னவர் அருள்மிகு சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் (மகுடம்) தரித்து,செங்கோல் ஏந்திய அற்புதத் திருக்காட்சி....
திருவாலவாய்
பாடல் எண் : 8
நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும்
அறிவனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பொழிப்புரை :
கடல் நிறத்தவனான திருமாலை உடலின் ஒரு பாகமாக உடையவனே ! மேம்பட்ட வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அறிபவனே ! ஆலவாயில் அப்பனே ! நறியமலர்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாள்தோறும் புகழ்ந்து வாழ்த்தித் திருவடிகளைச் செறிதற்குரிய வழிகளை உள்ளத்துக் கொண்டு உன் திருவடிகளை அடியேன் சேரும் வண்ணம் அருள் செய்வாயாக .
மீனாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment