04 September 2022

நாரைக்கு முக்தி கொடுத்த லீலை...

  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்ற காட்சிகள் ... 

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.




முதல்நாளில்  கருங்குருவிக்கு உபதேசம் செய்த சிவப்பரம்பொருள், இரண்டாம் நாள் நாரைக்கு முக்தி கொடுத்தார். சைவ நாரை சிவனை வணங்கி சிவகணமாக மாறியது. நாரையின் வேண்டுகோளின் படி இன்றைக்கும் பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ, தவளைகளோ வசிப்பதில்லை.

இறைவனின் 64 திருவிளையாடல்களில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை, இறைவன் மீது நாரை கொண்ட அன்பைப் பற்றிக் கூறுகிறது. 

மதுரையின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனதற்கானக் காரணம் பற்றி இப்படலம் கூறுகிறது. 

நாரைக்கு ஏற்பட்ட மனமாற்றம், சொக்கநாதரை நாரை வழிபடுதல், இறைவனார் நாரைக்குக் கொடுத்த வரம், பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது. நாரைக்கு முக்தி கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.

உலகில் கண் இருக்கும் எவ்வுயிர்க்கும் நற்கதி தரும் தெய்வமாம் ஈசனை தியானித்தால், எக்கதி விருப்பமோ, அக்கதியினை அவன் அருளான் தருவான்!





உலகின் பழிக்கு அஞ்சி, அப்பழி இனி உலகில் ஏற்படாவண்ணம் வாழச்செய்யும் ஜீவன் உலகில் மிகவும் அரிதிலும் அரிது. அப்பேற்பட்ட ஒரு ஜீவன் தான் தாமரை வண்ண கால்களும், நிலா நிறம் கொண்ட சிறகுகளைப் பெற்ற ஒரு நாரை.

மதுரையம்பதியிலே ஒரு வனம், அந்த வனத்தில் குளிர் தருவும், தரு தரும் நிழலும், நிழலருகில் இருக்கும் செண்பக மலர் வீசும் அச்சோ என வழங்கப்பெறும் குளிரோடையும், காணும் இனத்தையெல்லாம் ஈர்த்தது. 

ரிஷி முனிகள் அக்குளக்கரையில் குடிலமைத்து தவம் செய்தனர், புழு பூச்சிகள் அருகில் இருந்த மரங்களை நாடியும், மரங்கள் குளத்திலிருக்கும் நீர்நிலைகளை நாடியும், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவையினங்கள் என பல இனங்கள் தம்மோடு கூடி அவ்வனத்தில் வாழ்ந்து வந்தன.

முனிவர்கள் தவத்தாலும் கொல்லாமை – புலால் உண்ணாமை என்பது ஏனோ ஓர் இளநாரைக்கும் தொற்றியது. 

தவசீலர்கள் நீராடும் சமயம் அவர் உடல் தீண்டும் சுகம் பெற்ற கயலினங்கள் எத்தவம் செய்தனவோ அவை உண்டு தாம் எப்பிறவி எடுக்க வேண்டுமோ என நாரை அஞ்சத் தொடங்கிற்று.

தன் எண்ணத்தின் பால் வீறும், பற்றும், திடமும் கொண்ட நாரையும் வாய்பெய்து கவ்வும் தன்மையை விடுத்து நீரும், புல்லும் உட்கொண்டு வாழ்ந்தது. 

இதுகாரும் தான் செய்த நோன்பினால் கருங்குருவிக்கு உபதேசித்த இறைவன் சொக்கநாதர் பெருமை அங்கிருந்த முனிவர் வாயிலாய் கேட்கக் கிட்டியது, இறைவன் செய்து வந்த லீலைகளை அவ்வேதியர் சொல்லக் கேட்டது, நாரை.

தாமும் தம் குலமும் தழைத்தோங்க, அந்நாதனைப் பணிய முற்பட்டு, கடம்பவன க்ஷேத்திரத்தை அடைந்தது சிவந்த கால்களையும், பால் நிறம் கொண்ட அந்நாரை. 

அறியாமையை போக்கும் புண்ணிய பூமியாம், திருவாலவாயென்னும் இத்தலம் அகன்று நின்றமாடங்கள் நிறைந்த ஒப்பற்ற பதி. அஞ்ஞானம் நீங்கி வந்திறங்கிய நாரையானது வேழம் தாங்கிய விமானத்தைக் கண்டும், பொற்றாமரைக் கொண்ட குளத்தையும் கண்டு சிலிர்த்தது.

மூவைந்து தினங்கள் பொன் தாமரை தடாகத்தில் நிராடி, சொக்கரையும், உமையாளையும் வலம் வந்து கொண்டிருந்த சமயம், தன் பிறவிப்பிணியினால் அக்குளத்து கயல்களின் பால் மனம் ஈர்த்து தன் பசியார நினைத்தது.

அச்சமயமே, ஈசன் கொண்ட திருவுள்ளத்தினால், தாம் எண்ணிய எண்ணத்தை வருந்தி ஈசனிடம் சிரம் தாழ்த்தி அவரடி தொழுதது. அவரடியில் இரு துணைமலரென்னும் தாமரையை வைத்து வணங்கியது. அதில் மகிழ்ந்த ஈசனாரும் அதன் முன் அது கேட்ட உருவில் தோண்றி “வேண்டும் வரம் இயம்புக” என்றார்.

இறைவனைத் தனெதிரில் கண்ட நாரையும், “ஈசனைத் தொழுது, சிவலோகத்தில் மேவி நான் உய்ய வேண்டும், மேலும், வள்ளலே இத்தாமரைக் குளம், மிகவும் புண்ணியக் குளம், இக்குளத்து கயல்களை யாதொரு எம்மரபினரும், பிற உயிரிகளும் உண்ண நேரிடின் சொல்லொன்னா பாவம் வந்து சேரும் ஆதலினால் இக்குளத்தில் நீர்வாழ்வாதார உயிரிகளற்று இருக்க கடவது,” என்று வேண்டியது.

ஞாலத்து வெள்ளியை (நிலவை) தாங்கியவரும், ஆலவாய் வெள்ளியம்பல நாயகனுமான ஐயனும் “எஞ்ஞான்றும், இத்தடாகத்தில் மீன்கள் இல்லையாகுமாறு” எனவும், அந்நாரைக்கு தன்கதி தரவும் அருளினார்.

ஐந்து துந்துபி வாத்தியங்கள் முழங்க, தேவ விமானத்தின் மீதேறி தாம் ஈசனிடத்தில் வேண்டிய சிவகதி அடைந்தது நாரை.

தனக்கு நற்கதி கேட்ட குருவிக்கு மந்திர உபதேசம் செய்து முக்திக்கு வழிகாட்டிய நாதன், தன் இனத்திற்கும், பிற இனத்திற்கும் நற்பேறு அடையும்படி செயலாற்றிய நாரைக்குச் சிவலோக பதவியளித்தார்.

இன்றும் பொற்றாமைரை குளத்தில் மலர் இருக்கும், நீர்வாழ் தாவரங்கள் இருக்கும், ஆனால் மீனோ, புழுவோ இருக்கா. ஆகவே மீனிற்குப் பொரியிடும் வழக்கமும் இக்குளத்தில் இல்லை. இதுவும் ஆலவாயப்பனின் திருவிளையாடல்.












இரண்டாம் நாள் இரவு - 

சுவாமி - பூத வாகனம் 

அம்பாள் - அன்ன வாகனத்தில் 


நமது பழைமையான வழிபாடுகளில் ஒன்று பூத வழிபாடு. அனைத்துத் தெய்வங்களோடும் துணைத் தெய்வங்களாக பூதர்கள் இடம் பெற்றுள்ளனர். ‘பூத’என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள். ‘பூதி’ என்பதற்கு செல்வம் என்று பொருள். பூதர்கள் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்தவர்களாகவும், ஆடல், பாடல்களில் விருப்பமுள்ளவர்களாகவும், இசைக்கருவிகளை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

 சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு, பூதர்கள் அவரை விட்டுப் பிரியாது இருக்கின்றனர். சிவபெருமான், ‘பூதபதி’ என்றும் ‘பூத நாயகன்’என்றும் அழைக்கப்படுகிறார்.

தமிழ் வேதமான தேவாரத்தில் அனேக இடங்களில் பூதங்கள் பாட, புறங்காட்டிடை ஆடும் பிரானாகச் சிவ பெருமான் போற்றப்படுகின்றார். சிவபெருமானின் மகேசுவர வடிவங்களில் சிவபெருமானுக்குக் குடை பிடிப்பவர்களாகவும், பிட்சாடனர் வடிவில் அவருக்கு முன்பு பிட்சா பாத்திரத்தை ஏந்திச் செல்பவர்களாகவும், விபூதி மடலை ஏந்திச் செல்பவர்களாகவும், சிவபெருமான் அளிக்கும் செல்வத்தை எடுத்துச் சென்று பக்தர்களுக்குத்  தருபவர்களாகவும் பூதர்கள் சித்திரிக்கப் பட்டுள்ளனர்.

 சிவாலயங்களில் பூதனின் வடிவைப் பெரிய வாகனமாக அமைத்து, அந்த வாகனத்தில் சிவ பெருமானை அமர்த்தி திருவீதியுலா நடத்துகின்றனர். அந்த வாகனத்துக்கு ‘பூத வாகனம்’என்று பெயர்.

சில தலங்களில் நான்கு கரங்களுடனும், சில தலங்களில் இரண்டு கரங்களுடனும் காட்சியளிக்கின்றார் பூதர். முழந்தாளை மடித்து ஊன்றி, மண்டியிட்டு அமர்ந்துள்ளார். முன் கரங்களை நீட்டித் தோள் மீது அமர்ந்திருக்கும் பெருமானின் திருவடிகளைத் தாங்கும் நிலையில் உள்ளார். பின்னிரண்டு கரங்களில் கத்தியும் கேடயமும் உள்ளன. தலையில் விரிந்த ஜடா மண்டலமும், அகன்ற கண்களும், கத்தையான மீசையும், இதழ் ஓரத்தில் துருத்திக் கொண்டிருக்கும் வளைந்த கோரைப் பற்களுடன் கூடிய தடித்த உதடுகளும், விடைத்த மூக்கும் கொண்ட திருமுகமும், திரண்டு செழுமையான அங்கங்களையும் கொண்டவராக, காண்பதற்கு அச்சமூட்டுபவராகக் காட்சியளிக்கிறார் பூதர்.

 சிவபெருமானைத் தாங்கி வரும் பூதனுக்கு மகாகாயன் என்றும், அம்பிகையைத் தாங்கி வரும் பூதகிக்கு பிரம்மதேஹினி என்றும் பெயர். 






திருவாலவாய்

பாடல் எண் : 3

ஒருமருந் தாகி யுள்ளா யும்பரோ டுலகுக் கெல்லாம்

பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்

கருமருந் தாகி யுள்ளா யாளும்வல் வினைக டீர்க்கும்

அருமருந் தால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தேவாமிருதமாய் உள்ளவனே ! தேவர்களுக்கும் மக்களுக்கும் தலையான மருந்தாக உள்ளவனே ! சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே ! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே ! அருள் செய்வாயாக .


மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment