முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.
நான்காம் நாள் ---தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.
ஐந்தாம் நாள் -- உலவாக்கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் --- பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் --- வளையல் விற்ற லீலை
எட்டாம் நாள் ----நரியைப் பரியாக்கிய லீலை.
நரியைப் பரியாக்கிய படலம்
பரியை நரியாக்கி வையை அழைத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபதாவது படலமாக அமைந்துள்ளது.
புராண காலத்தில் மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் மாணிக்கவாசகர், தென்னவன் பிரம்மராயன் எனும் சிறப்புப் பெயருடன் அமைச்சராக இருந்தார். படைக்காக குதிரைகள் வாங்க பெரும் பொருளை மாணிக்கவாசகரிடம் அரசர் கொடுத்தனுப்பினார். திருப்பெருந்துறைக்குச் சென்ற மாணிக்கவாசகர் தன்னிடமிருந்த செல்வத்தை அங்குள்ள சிவாலயத் திருப்பணிக்குச் செலவிட்டார்.
குதிரைகள் நீண்டநாட்களாக வரவில்லை. மன்னனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மாணிக்கவாசகரை அழைத்து விசாரித்தான். அவர் மூன்று நாள் தவணை கேட்டார். அதுவும் முடிந்தது.
இதன்பிறகு, பொறுமையிழந்த மன்னன், "வாதவூரானின் முகத்தில் நான் விழிக்க விரும்பவில்லை.ஏமாற்றுக்காரனுடன் என்ன பேச்சு! அரசுப்பணத்தைக் கையாடிய அவனை மந்திரி பதவியில் இருந்து நீக்குகிறேன். அவனைச் சிறையில் அடையுங்கள், சித்ரவதை செய்யுங்கள்" என ஆணையிட்டான்.
மாணிக்கவாசகரின் இல்லத்துக்குக் காவலர்கள் சென்றனர்.
அவர் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார்.
காவலர்கள் அரசன் இட்ட ஆணையைச் சொல்லவே, அவர் ஏதும் சொல்லவில்லை. நடப்பதெல்லாம் அவன் திருவிளையாடல் என அமைதியாக இருந்தார். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றினர்.
அதே நிலையில் சிறைக்குள் தள்ளினர். அந்தப் பாரத்தைக் கூட சிவனுக்காகச் சுமப்பதாகக் கருதினார் மாணிக்கவாசகர். பாறாங்கற்கள் பஞ்சுபோல் இருந்தது.
மறுநாள் காவலர்கள் வந்தனர்.
அந்தக் கற்களைச் சுமந்ததால் சோர்ந்து மயங்கியிருப்பார் என நினைத்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவர் வழக்கத்தை விட உற்சாகமாக இருந்தார்.
அவரை இரும்புக்கருவி ஒன்றைக் கொண்டுதாக்கினர். கண்டபடி திட்டினர்.அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்துச் சென்றனர்.
இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார்.
"நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித் தராத குற்றத்திற்காகப் பாண்டியநாட்டுச் சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளைக் குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன்" என்றார்.
நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார்.
ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தன. குதிரைகள் பற்றி மன்னனுக்குத் தகவல் சென்றது. அவன் பதறிப்போய் ஓடி வந்தான். மாணிக்கவாசகரை விடுவிக்க உத்தரவிட்டான். குதிரைகளைக் காண ஆவலுடன் மணிமண்டபத்தில் வந்தமர்ந்தான்.
இதற்குள் சிவபெருமான் தன் லீலையைத் தொடங்கி விட்டார்.
குதிரைகள் மக்கள் கண்களுக்குத் தெரிந்தது. மன்னனின் கண்களுக்குத் தெரியவில்லை.
"வாதவூரானே! என்ன விளையாடுகிறீரா! மற்றவர்களெல்லாம் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்கிறார்கள், என் கண்களுக்குத் தெரியவில்லையே"என்றான்.
மீண்டும் சிறைக்கு அவரை அனுப்பினான்.
சற்றுநேரத்தில், அரண்மனைக் கொட்டிலுக்குள் ஆயிரக்கணக்கான குதிரைகளும், வீரர்களும் நிற்பதைக் கண்ட காவலர்கள் மன்னனிடம் சொல்ல, இதென்ன புதுக்குழப்பம்? என்று அங்கு ஓடினான்.
இப்போது, குதிரைகள் கண்ணுக்குத் தெரிந்தன."இப்படியும் அழகான குதிரைகளா! பாண்டியநாட்டுக் குதிரைப்படை போல், இனி எங்கும் குதிரைகளைக் காண முடியாது! அதோ! இந்தக் குதிரைப் படைக்குத் தலைமை வகித்து வந்துள்ளானே ...ஒரு வீரன் (சிவபெருமான் அந்தக் குதிரையில் அமர்ந்திருந்தார்)
அதைப் போல் சாமுத்ரிகா லட்சணம் கொண்ட குதிரை இனி பிறக்கவும் செய்யாது. பிற நாடுகளுக்குக் கிடைக்கவும் செய்யாது!" என பெருமையடித்தான்.
மாணிக்கவாசகரை விடுதலை செய்து மீண்டும் மன்னிப்பு கேட்டு, அவரது அருமை தெரியாமல் இருந்தது பற்றித் தன் வருத்தத்தைத் தெரிவித்தான்.
குதிரைகள் மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டதும், தலைமை வீரனாக வந்த சிவபெருமானும் அவருடன் வந்த பூதகண வீரர்களும் கிளம்பிவிட்டனர்.
சற்றுதூரம் சென்றதும் அவர்கள் மறைந்து விட்டனர்.
மாணிக்கவாசகருக்கு மன்னன் அளித்த பரிசுக்கு அளவேயில்லை.
அதைப் பெற்றுக்கொண்டு அவர் வீடு திரும்பிய போது, உறவினர்கள் எல்லாரும் அங்கு குவிந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தான் கொண்டுவந்ததில் பெரும்பகுதியை அள்ளி வழங்கினார் மாணிக்கவாசகர்.
பின்னர், பூஜையறைக்குச் சென்று சிவதியானத்தில் மூழ்கிவிட்டார்.
இரவாகி விட்டது. மக்கள் உறங்கும் வேளை... ஊ...ஊ... என எங்கும் ஒலி கேட்டது.காட்டுக்குள் அல்லவா நரிகள் ஊளையிடும்! நாட்டுக்குள் நரி சத்தம் கேட்கிறதே!மக்களுக்கு மட்டுமல்ல.... அரிமர்த்தன பாண்டியனுக்கும் அந்த ஒலி கேட்டது.மக்கள் சப்தம் வந்த திசை நோக்கி ஓடிவந்தனர்.
ஆனால் அன்றிரவே அந்த குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காடுநோக்கி ஓடின.
உடனே அரசன் மாணிக்கவாசகரை தண்டிக்க அவரை கட்டி ஆற்று சுடுமணலில் கிடக்க செய்தான். இறைவன் அவரை காக்கும் பொருட்டு வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார்.
மாணிக்கவாசகரின் மகிமையை உணர்ந்த பாண்டிய மன்னன், அவரை விடுவித்து மன்னிப்பு கோரியதாக புராண வரலாறு கூறுகிறது.
மீனாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment