01 September 2022

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் --- ஆவணி மூலத் திருவிழா

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்ற காட்சிகள் ... 












"திருவிளையாடற் புராணம் " என்பது சிவப்பரம்பொருளின் திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி "ஹாலாஸ்ய மகாத்மியம்" என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.

ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.


ஒரு நாள் பரஞ்சோதி முனிவர் கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி ‘எம்பெருமான் திருவிளையாடலை சத்தியாய் என்று தொடங்கி பாடுக’ என்று கட்டளையிட்டு மறைந்தார். 

“சத்தியாய் சிவமாகி தனிப்பர

முத்தியான முதலைத்துதி செய

சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ

சித்தியானை தன் செய்யபொற் பாதமே”

என்ற அழகிய விநாயகர் காப்பு செய்யுளுடன் தொடங்கி, திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் எழுதியுள்ளார். தொடர்ந்து மதுரையின் சிறப்பு, புராண வரலாறு ஆகிய முன்னுரைக்குப் பின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் சிறப்பையும் எழுதியுள்ளார்.

திருவிளையாடல் புராணமானது மதுரைகாண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது.

 மதுரைக்காண்டத்தில் பதினெட்டுப் படலங்களும், கூடற்காண்டத்தில் முப்பது படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் பதினாறு படலங்களும் உள்ளன. இந்நூலில் மொத்தம் மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று விருத்தப்பாக்கள் உள்ளன.

இந்நூலில் மதுரைக்காண்டம் தொடங்குவதற்கு முன்னதாக கீழ்கண்ட காப்பிய உறுப்புகள் இடம் பெற்றுள்ளன.

1. காப்பு, 2.வாழ்த்து, 3. நூற்பயன், 4. கடவுள் வாழ்த்து, 5. பாயிரம், 6. அவையடக்கம், 7.திருநாட்டுச்சிறப்பு, 8. திருநகரச்சிறப்பு, 9. திருக்கையிலாயச்சிறப்பு, 10. புராணவரலாறு, 11.தலச் சிறப்பு, 12. தீர்த்தச் சிறப்பு, 13. மூர்த்திச் சிறப்பு, 14. பதிகம் ஆகியவை ஆகும்.

இவை 343 பாடல்களால் பாடப்பட்டுள்ளன. 344-வது செய்யுளில் இருந்து சிவபெருமானின் திருவிளையாடல் தொடங்குகிறது.

இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன.

திருவாலவாய் ஆக்கிய படலம் முதல் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.








திருவாலவாய்

1

வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென்

றோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப்

பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்

ஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.


மறைமுதல்வனே ! மறைகளைப் பாடுகின்றவனே ! தேவர்கள் தலைவனே ! பார்வதிபாகனே ! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே ! திருஆலவாயிலுள்ள அப்பனே ! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக .


மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment