09 April 2022

2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

  திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல"





மகாபாரத கதாபாத்திரங்களில் கண்ணனால் மிகவும் போற்றப்பட்டவர் விதுரர்.

 சத்யவதியின் மகன் விசித்திர வீரியன் அற்ப ஆயுள் படைத்தவர். சந்தான பாக்கியம் பெறுவதற்கு முன்பாகவே அவர் மாண்டு விட்டார். அவனது மனைவியான அம்பிகா, அம்பாலிகா இருவருக்கும் குழந்தைப்பேறு கிடைக்க சத்யவதி வியாசரின் துணையை நாடினார்.

அதன்படி வியாசர் அம்பிகாவிடம் சென்றபோது, அவர் வெட்கப்பட்டு தனது தோழியை உள்ளே அனுப்பி விட அந்த பெண்மணிக்குப் பிறந்தவரே விதுரர்.

இதனால் விதுரருடைய வாழ்நாள் முழுவதும் நிழல் போல தாசியின் மகன் என்ற சொல் வருகிறது. ஆனால், விதுரர் மட்டும் தான் துரியோதனன் முறை தவறி தருமனை அழைக்கும்போது தடுக்கிறார்.


அரக்கு மாளிகையில் பாண்டவர்களை கொல்ல நினைக்கும் போது,  அந்தண வேடத்தில் சென்று அவர்களை வேறு ஊருக்குப் போகச் சொல்லி காப்பாற்றுபவர் விதுரரே. 

நீதி தவறாதவர்.

 திருதராட்டினனுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கியவர்.


கண்ணன் வேறு யாரும் இல்லை. 

அந்த பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனே என்பதை விதுரர் அறிவார்.


பாண்டவர்களின் தூதுவனாக கண்ணன் துவாரகையில் இருந்து அஸ்தினாபுரத்திற்குத் தனது தேரில் வருகிறார். மறுநாள் தான் சபை கூடும்போது தூதுப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முதல் நாள் அஸ்தினாபுரத்திலேயே தங்க வேண்டும். அவையில் உள்ள அனைவருக்கும் கண்ணன் தன் வீட்டில் தங்கமாட்டானா என்று ஆசை.

கண்ணனோ வழியில் உள்ள ஒவ்வொரு மாளிகையையும் பார்த்துக் கொண்டே வருகிறார். 


அப்போது எதிரில் தென்படும் ஒரு பெரிய மாளிகையைப் பார்த்து, "ஆஹா! இது பெரிய மாளிகையாக இருக்கிறதே, இது யாருடைய மாளிகை?" என்று கேட்கிறார்.

திருதராட்டினனோ "இது என்னுடைய மாளிகை. நீ இங்கேயே தங்கிக் கொள், கண்ணா!" என்று கூறுகிறார். அதைக்கேட்ட கண்ணன் "வேண்டாம்!" என்று மறுத்து விடுகிறார்.

அடுத்து ஒரு மாளிகையைப் பார்த்து, "அட, இது முந்தைய மாளிகையை விட பெரியாதாக இருக்கிறதே! இது யாருடைய மாளிகை?" என்று கேட்கிறான். 

அப்போது பிதாமகர் பீஷ்மர் முன் வந்து "இது என்னுடைய மாளிகை தான். நீ இங்கே வசதியாகத் தங்கிக் கொள்ளலாம்" என்றார்.

அதையும் மறுத்துவிட்டு அடுத்த மாளிகையைப் பார்க்கிறார்.

 அந்த மாளிகையில் சங்கீதமும், நாட்டியமும் ஒலிக்கின்றன. 

அதைக்கண்ட கிருஷ்ணன் "இது யாருடையது?" என்று கேட்க, 'நீ இங்கே தங்கினால் கேளிக்கைகளுக்குக் குறை இருக்காது. இது என்னுடைய மாளிகை" என்றான் துரியோதனன். அதையும் நிராகரித்து விடுகிறார் கண்ணன்.


இறுதியில் கண்ணன் ஒரு குடிலின் முன் நின்றான். 

"இது யாருடைய குடில்?" என்று கேட்க, விதுரர் சொன்ன பதில் அவர்களிடம் இருந்து விதுரரை விலக்கிக் காட்டுகிறது. 

"இது உன்னுடைய திருமாளிகை தான்! இங்கே நீ உன் இஷ்டம் போல் தங்கிக் கொள்ளலாம்" என்றார் விதுரர்.

அதைக்கேட்டு புன்னகை சிந்திய கண்ணன், " சரி, இன்று இங்கயே தங்கிக்  கொள்கிறேன் ", என்கிறார்.


விதுரர் இதை எதிர்பார்க்கவில்லை. 

”கிருஷ்ணா இந்தச் சிறியவன் வீட்டைத் தேடி வந்தாயே!” என்று மிகுந்த மகிழ்ச்சியாகவும், அதே சமயம் பரபரப்பாகக் காணப்பட்டார். 

அவருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. 

வீட்டுக்குள் இங்கும் அங்கும் ஓடினார். 

ஒரு ஆசனத்தை எடுத்து வந்து கண்ணன் அமர்ந்து கொள்ள அதைக் கீழே போட்டார். 

கண்ணன் உட்காரும் சமயம் ‘கண்ணா சற்று பொறு’ என்று தன் கையால் அந்த ஆசனத்தைத் தடவிப் பார்த்துப் பிறகு உட்காரச் சொன்னார். 

”விதுரா என்ன செய்தாய் ?’ என்று கண்ணன் கேட்க அதற்கு விதுரர். 

துரியோதனனின் உப்பைச் சாப்பிடுபவன். 

என்னையும் அறியாமல் இந்த ஆசனத்தில் உனக்கு ஏதாவது ஊசி வைத்துவிட்டேனா என்று ஒருமுறை சோதித்தேன்” என்றார். 

கண்ணன் புன்சிரிப்புடன் ’ஏன் இந்தப் பரபரப்பு’ என்று கேட்டார். 

“கண்ணா, பரம்பொருளே! உனக்குத் தகுதியான உணவை அளிக்க என்னிடம் தகுதியும் இல்லை, சக்தியும் இல்லை. உனக்குக் கொடுக்க என்னிடம் படபடப்பும், பரபரப்பும் தான் இருக்கிறது என்று பக்கத்திலிருந்த சில வாழைப்பழங்களை எடுத்து அன்பினாலும், பக்தியாலும் தூய உள்ளத்தினால் அதைக் கண்ணனுக்குக் கொடுத்தார். 




விதுரருக்குப் இருந்த பரபரப்பில்  வாழைப்பழத்தை ஒவ்வொன்றாக உரித்து, தோலைக் குப்பையில் போடுவதற்குப் பதில் பழங்களைக் குப்பை போட்டுத் தோலைப் பழம் என்று நினைத்துக் கண்ணனிடம் கொடுத்தார். 

கண்ணனும் ‘என்ன சுவை என்ன சுவை’ என்று சாப்பிட ஆரம்பித்தார். 

சிலவற்றைச் சாப்பிட்ட பின் இதைப் பார்த்த விதுரரின் மனைவி ”நன்றாக இருக்கிறது உங்கள் உபசாரம்.. “ என்று சுட்டிக்காட்ட, விதுரரின் பரபரப்பு மேலும் அதிகமாகியது.

 கண்ணனுக்குப் பழங்களைக் கொடுக்க,  எனக்கு நீ முன்பு கொடுத்த தோலே மிக ருசியாக இருந்தது. என் வயறு நிறைந்துவிட்டது” என்றார். 


விதுரர் தனது உள்ளமாகிய அகத்தைச் சுத்தமாக்கி ஒழித்துக் கண்ணன் வாசம் செய்யக் கொடுத்தார் . சுச்சியுடன் ( தூய்மையுடன் ) உணவைக் கொடுத்தால் அதை ருசியுடன் கண்ணன் ஏற்றுக்கொள்கிறான்.


உலகவழக்கப்படி, குடியிருப்பவர்தான் வாடகைக் கொடுக்க வேண்டும்.

இதயம் என்ற வீட்டினுள் இறைவனை குடிவைத்தவன், குடியிருப்பவனுக்கு பூவோ, பழமோ கொடுத்தால் போதும். அவர்கள் மனதில் குடியேறிவிடுவேன்' என்றவர் கிருஷ்ணர்

அதனால்தான் விதுரர் உன் அகம் என் அகம் என்றார் (அகம் என்றால் வீடு)

வடமொழியில் அகம் எனில் அகங்காரம். 

இறைவன் மனதில் குடியேறின் இந்த அகம் ஒழிந்துவிடும்...

பெண்பிள்ளை உடையவரிடம் இவ்வாறு கூறி " தன்னலமற்ற அன்பையும், மதிப்பையும் நான் கொண்டிருக்கவில்லையே, அகமொழித்து இதயத்தை மட்டும் தரவில்லையே, 

விதுரரைப் போல இல்லையே அதனால் நான் வெளியில் செல்கிறேன்" என்கிறாள் அப்பெண்பிள்ளை.


திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்

மூன்றாம் பாசுரம் - எம்பெருமானின் லீலாவிபூதியுடன் கூடியிருக்கும் தன்மையைக்காட்டி அவன் எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதைக் காட்டுகிறார்.

இலன் அது, உடையன் இது, என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ,ஒழிவு இலன், பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே

3   2901

“இந்தப் பொருள் அவனிடத்தில் இல்லை, இந்தப் பொருள் உள்ளது” என்று சில பொருள்களிலும் மட்டும் அளவிட்டு நினைக்க முடியாதவனாய், 
பூமியிலும், மேலுலகத்திலும் இருப்பவனாய்,
 உருவத்துடன் இருக்கும் அசித்தையும் உருவம் இல்லாத ஆத்மாவையும் 
தனக்கு சரீரமாக உடையவனாய், 
இப்படிக் கண்ணுக்குப் புலப்படும் பொருள்களுள் கலந்து நிற்கும் பொழுதே 
அவற்றின் தன்மை (குறைகள்) தனக்கு இல்லாதவனாய், 
ஒன்றொழியாமல் எல்லாவற்றிலும் வ்யாபித்திருப்பவனாய், 
முன்பு சொன்ன கல்யாணகுணங்களுடன் கூடியிருப்பவனாய், 
தனித்துவம் வாய்ந்தவனை நாம் அணுகப் பெற்றோம்.










03. திருக்கரம்பனூர் (எ) உத்தமர் கோவில்  - 

ஸ்ரீ பூர்வா தேவீ ஸமேத ஸ்ரீ புருஷோத்தமாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 

அனுபிரேம்  💕💕

4 comments:

  1. பழத்திற்கு பதிலாகத் தோலை...இக்கதையை என் இளம் வயதில் கேட்ட நினைவு.

    ReplyDelete
  2. விதுரர் கதை பாட்டி சொல்லியிருக்கிறார். நீங்க சொன்னவிதமும் நல்லாருக்கு. இதையும் உங்கள் குரலில் பதிவு செய்யலாமே உணர்வு பூர்வமாக. வாசிக்க முடியாதவர்களுக்குக் கேட்டு ரசிக்கலாம் குழந்தைகளுக்கும் உதவுமே.

    விதுரர் நீதி என்றே உண்டே...

    கீதா

    ReplyDelete
  3. நல்ல விளக்கங்கள் அறியாத புராணக் கதைகள்

    துளசிதரன்

    ReplyDelete
  4. சிறப்பான விளக்கம். படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete