30 April 2022

5.பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

5.பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே"






அந்த காலத்தில்  திருவேங்கடம் எனப்படும் திருமலை,  தொண்டை மன்னன் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட கோயிலாக இருந்தது.

ஒருமுறை, பெருமாள் தனது அடையாளங்களான சங்கு மற்றும் சக்கரத்தை இந்தத் தொண்டைமானிடம் கொடுத்து வைக்கிறார். சங்கு சக்கர அடையாளம் எதுவுமின்றி இருந்த அர்ச்சாவதார மூர்த்தியைப் பார்த்த திருமலையில் இருந்த சைவர்கள் அந்தச் சிலைத் திருமேனி சிவபெருமானுடையது என்று சாதித்தனர்.

இதற்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டும் என்று, திருவரங்கத்திலிருந்து இராமானுஜரை வரவழைக்கிறார்  தொண்டைமான்.

இராமானுஜர் எம்பெருமான் சந்நிதிக்குள் நுழைந்து, சிலைத் திருமேனி முன்பு ஒரு தட்டில் சங்கு, சக்கர முத்திரைகளையும், மற்றொரு தட்டில் திருநீற்றையும் வைத்துக் கதவைச் சாத்திவிட்டு வந்தார். 

மறுநாள் காலையில் சந்நிதி திறக்கப்பட்டபோது, பெருமாள் தனது தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளுடன் காணப்பட்டதால், அவர் மகாவிஷ்ணுவின் சிலைத் திருமேனி என்பது உறுதியானது.  'அப்பனுக்குச் சங்காழி அளித்தவன்’ என்று இராமானுஜருக்கு சிறப்புப் பெயர் ஒன்று உண்டு.






அப்படிப்பட்ட தொண்டைமான் சரித்திரத்தில், பிணத்தை உயிர்ப்பித்த அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.

 தொண்டைமான் ராஜ்ஜியத்தில், கூர்மர் என்றொரு அந்தணர் வசித்து வந்தார். காசி யாத்திரை சென்று மூத்தோர் கடன் தீர்க்க வேண்டும் என்று நெடுநாட்களாக அவருக்கு ஓர் அவா! அதற்கான வசதியும் வாய்ப்பும் இல்லாது போகவே, அந்த ஆசை நிறைவேறாமலே அவர் இறந்துவிடுகிறார். அவருக்குக் கிருஷ்ண ஷர்மா என்றொரு மகன்.

அப்பாவின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும்பொருட்டு கிருஷ்ண சர்மா காசிக்குச் செல்வது எனத் தீர்மானித்தார்.

இப்போது இருப்பதைப்போல வாகன வசதிகள் அப்போது கிடையாது. கால்நடையாகத்தான் செல்லவேண்டும். எனவே, பெண்டு பிள்ளைகளுடன் செல்வது உசிதமான காரியமில்லை.

கிருஷ்ண ஷர்மா யோசிக்கிறார். 

நேரே மன்னர் தொண்டைமானிடம் செல்கிறார். தான் காசி யாத்திரையை முடித்துக்கொண்டு ஊர் திரும்பும் வரையில் தனது மனைவியையும் மகனையும் பார்த்துக்கொள்ளச் சொல்லி, அவரிடம் அடைக்கலமாக ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்.

மன்னருக்கு ஆயிரத்தெட்டு வேலைகள்! 

ராஜ்ஜிய பரிபாலனம் செய்வது அத்தனை சுலபமா?! 

பல அலுவல்கள் இருப்பினும், அடைக்கலமாக வந்தவர்களைக் காக்க வேண்டியது மன்னரின் கடமை. ஆனால், இந்தத் தொண்டைமான் இந்தக் கடமையில் இருந்து தவறிவிடுகிறார். 

அந்தணனின் மனைவிக்கும் மகனுக்கும் வேளாவேளைக்கு உணவு அளிக்கப்படுகிறதா என்பதைக்கூட அறியாமல் இருந்துவிடுகிறார். போதிய உணவு கிடைக்காமையால், கிருஷ்ண ஷர்மாவின் மனைவியும் மகனும் இறந்து விடுகின்றனர்.

காசியாத்திரை போன கிருஷ்ண ஷர்மா திரும்பி வருகிறார். மன்னரைச் சந்தித்து, அவரிடம் தான் அடைக்கலமாக விட்டுச் சென்ற மனைவியையும் மகனையும் அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூறுகிறார்.

மன்னர் போய்ப் பார்த்தபோது, இருவரும் அங்கு உயிருடன் இல்லை. அவர்களுடைய பிணம்தான் இருக்கிறது. 

ராஜாவுக்கு வியர்வை ஆறாகப் பெருகுகிறது. 

தனது பாதுகாப்பில் பத்திரமாக இருக்கவேண்டிய இருவரும் இப்படி அன்ன ஆகாரமின்றி இறந்து விட்டார்களே என்று பதறிப் போகிறார்.

அவருக்குள் வருத்தம் மேலிடுகிறது. 

இருந்தாலும், அவர்களைக் காப்பாற்றத் தவறிய பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டுமே என்பதால், பொய் சொல்லத் துணிகிறார். 

கிருஷ்ண சர்மாவிடம் வந்து, ''உன் மனைவியும் மகனும் திருமலைக்கு வேங்கடநாதனை தரிசனம் செய்யச் சென்றிருக்கிறார்கள்'' என்று சொல்லிவிடுகிறார்.

 "சரி, நான் அவர்களுக்காக இங்கே காத்திருக்கிறேன்" என்கிறார் கிருஷ்ணா ஷர்மா.

தொண்டைமானுக்கு பகீர் என்கிறது.

 அரண்மனைக்கும் திருமலை கோவிலுக்கும் இடையிலான சுரங்கப்பாதையில் விரைந்து சென்று, நேராகப் பெருமாள் முன்பு நிற்கிறார்.

 ''நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. உன் பக்தனாகிய நான், பிணமானவர்களை உயிருடன் இருப்பதாகச் சொல்லிவிட்டேன். அவர்களை உயிருடன் கொண்டு வரவேண்டியது உன் பொறுப்பு! இல்லையெனில், என்னையும் உன் பாதங்களில் சேர்த்துக்கொள்!' என்று மன்றாடிப் பிரார்த்திக்கிறார்.



சரணாகதி அடைந்த பக்தனைக் கை விட்டால் பிறகு அந்தச் சரணாகதி தத்துவத்துக்கே பொருளில்லாமல் போய்விடுமே? தனதன்பு பக்தனின் மீது கருணைக்கொண்டு அவனிடம் தனது சந்நிதியில் இருந்து தீர்த்தத்தை எடுத்து அந்த பிணங்களின் மீது தெளிக்க அவர்கள் உயிரோடு திரும்புவர் என்கிறார். 

அதன்படியே, இறந்துவிட்ட அவர்கள் இருவரையும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுக்கிறார் பெருமாள். 

கிருஷ்ணா ஷர்மாவிற்கு அவனது குடும்பத்தோடு செல்வத்தையும் அளிக்கின்றான் தொண்டைமான்.





இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டே, திருக்கோளூரிலிருந்து வெளியில் வரும் அந்தப் பெண்பிள்ளை, 'தொண்டைமானைப்போல இறைவன் மீது பெரும் காதல் கொண்டு அவன் கருணையை பெற்றவளா நான்?’ என்று கேட்கிறாள்.


திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்


ஆறாம் பாசுரம் -  எல்லா ப்ரவ்ருத்தி (செயல்பாடு), நிவ்ருத்திகளும் (செயல்படாமல் இருப்பது) எம்பெருமானின் அதீனத்தில் உள்ளன என்று ஸாமானாதிகரண்யாத்தாலே அருளிச்செய்கிறார்.


நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்

என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்

என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே

6    2904


நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் ஆகிய ப்ரவ்ருத்திகளுக்கு இருப்பிடமான பொருள்களும், நிவ்ருத்திக்கு இருப்பிடமான பொருள்களுமாய், இதனாலே, என்றும் ஒரு குறிப்பிட்ட தன்மையை உடையவர் என்று நினைக்க முடியாதவனாய் இருப்பான் எம்பெருமான். 

எல்லாப் பொருள்களிலும் இருந்து வேறுபட்டவன். 

வேதம் என்ற உறுதியான ப்ரமாணத்தாலே அறியப்படுபவன்.












6.திருப்பேர்நகர்

ஸ்ரீ கமலவல்லீ (இந்திராதேவி) ஸமேத அப்பக்குடத்தான் ஸ்வாமிநே நமஹ




சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


2 comments:

  1. படங்களும் விவரங்களும் சிறப்பாக இருக்கிறது அனு.

    கீதா

    ReplyDelete
  2. எத்தனை புராணக் கதைகள்....... இந்த பதிவு வழி பகிர்ந்த விஷயங்களை ரசித்தேன்.

    ReplyDelete