15 September 2025

2.கண்ணனின் குழல் ...

 





கண்ணனின் குழல்

கிருஷ்ணன் யமுனையில் ஆயர்பாடிச் சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தான். கரையில் அவர்கள் வஸ்திரங்கள், கிருஷ்ணனுடைய புல்லாங்குழல், அவன் ஆடைகளுடனும் மணி மாலைகளுடனும் கலந்து அவனுக்காகக் காத்திருந்தபோது இது நிகழ்ந்தது.

“நம் அனைவரிலும் யார் விலையுயர்ந்தவர்கள்? யாருக்கு மதிப்பு அதிகம்?” என அவற்றின் இடையே பேச்சு வந்தது.

கிருஷ்ணனின் பீதாம்பரம், தானே விலையுயர்ந்தவன், தனக்கே மதிப்பு அதிகம் என்று கர்வத்தோடு சொன்னது கேட்டது. 

மணிமாலை சொல்லியது “நான் ஆயர்பாடி கோபியர்கள் எங்கிருந்தெல்லாமோ சேகரித்து கோர்த்து கிருஷ்ணனுக்காக செய்யப்பட்டது. எனக்கு மதிப்புப் போடமுடியாது”  என்றது.

 புல்லாங்குழல் பேசாமலேயே இருந்தது.

“இந்த மூங்கில் குழாய்க்கு என்ன மதிப்புப் போடலாம்?” என்று வஸ்திரம் மணிமாலையைக் கேட்டது.

“எதாவது இருந்தால் தானே போடுவதற்கு” என்று இரண்டும் கேலியாக சிரித்தன.

அருகில் மரத்தடியில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தவருக்கு இந்த உரையாடலை அறிய முடிந்தது. 

அவர் சொன்னார் “மதிப்பு பற்றிப் பேசும் மதியிலிகளே! நீங்கள் நினைப்பது போல் இந்த மூங்கில் குழாய், புல்லாங்குழல் அற்பமானதல்ல. கண்ணன் குழல் இசைக்காத போதும்,மற்ற பிள்ளைகளோடு விளையாடும்போதும், ஆவினங்களிடமும், கோபியர்களுடனும் அவன் சல்லாபிக்கும்போதும் அவன் இடுப்பில் அது ஏன் எப்போதும் குடிகொண்டிருக்கிறது? அவன் அதை ஏன் தனக்குப் பிடித்த பொருளாக உபயோகிக்கிறான் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?


அவன் கையிலிருக்கும் இந்த குழல் தான் நாம் அனைவரும். இந்தக் குழலில் எட்டு துளைகள் இருக்கிறதே, அதுவே நம் 8 உறுப்புகள் - கண்கள், காதுகள் மூக்கு, நாக்கு, உடல், புத்தி, மனம், அஹங்காரம் (இதுதான், நான் மற்றவனைக் காட்டிலும் வேறானவன் என்று நினைக்க வைக்கிறது) கிருஷ்ணன் வாசிக்காதபோது வெறும் காற்று உள்ளே நுழைந்து வெளியேறினால் ஏதோ ஒரு சப்தம் தான் வரும் இசை வராது.

நம்மை கண்ணனுக்கு அர்ப்பணம் செய்து அவனே வழிகாட்டி என உணர்ந்தால் நம்மில் அபூர்வ நாதங்கள் தோன்றும். அதுவே அவன் வாசிக்கும் இசை. 

நாம் வெறுமையுடன், அவன் மூலம், இயங்கினால் நம்முடைய, கோபம், தாபம், நேர்மையின்மை, வெறுப்பு, அசூயை, எல்லாம் காலியாகி, அவன் நம்மை உபயோகித்து இசைக்கும் “தெய்வீகம்” நமது வாழ்க்கை ஆகிறது. 

இதுவே புல்லாங்குழல் தத்துவம். மஹா பெரிய ஞானிகளும் முனிவர்களும் ரிஷிகளும் இத்தகைய புல்லாங்குழல்கள். அவர்கள் மூலமே நாம் மேன்மையுறுகிறோம். பரமானந்தம் பெறுகிறோம்.”

இந்த விளக்கத்தைக் கேட்ட புல்லாங்குழல், அமைதியாக கண்ணனின் வரவுக்காகக் காத்திருந்தது. இனியாவது நாமும் நம்மை அவனது புல்லாங்குழலாக மாற்றிக்கொள்வோமே!


முந்தைய பதிவுகள் ---

4. கண்ணனின் பால லீலை.. 2025












பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்   பத்து

3-6  ஆறாம்  திருமொழி - நாவலம் 

கண்ணன் புல்லாங்குழல் ஊதல் சிறப்பு 



278

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்*  

தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்* 

கானகம் படி உலாவி உலாவிக்* 

 கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது* 

மேனகையொடு திலோத்தமை அரம்பை* 

 உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி* 

வானகம் படியில் வாய் திறப்பு இன்றி* 

 ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.* 4



279

முன் நரசிங்கமது ஆகி*  அவுணன்- 

முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்- 

மன்னர் அஞ்சும்*  மதுசூதனன் வாயிற்*  

குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க* 

நன் நரம்பு உடைய தும்புருவோடு* 

 நாரதனும் தம் தம் வீணை மறந்து* 

கின்னர மிதுனங்களும் தம் தம்* 

 கின்னரம் தொடுகிலோம் என்றனரே* 5



280

செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்*

  தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்* 

நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்*

  கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்*

 அமுத கீத வலையால் சுருக்குண்டு* 

நம் பரம் அன்று என்று நாணி மயங்கி*

  நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.* 6



கண்ணா  உன் திருவடிகளே சரணம் !!!!

கேசவா உன் திருவடிகளே சரணம் !!!!

மாதவா  திருவடிகளே சரணம் !!!!



அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். புல்லாங்குழலுடன் மானிடரின் ஒப்பீடு அருமை. அதைப் போல நாமும் அவனுடன் கலக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அவன் தர வேண்டும். அது ஒன்றுதான் வாழ்வில் தினசரி பிரார்த்தனை ஜெய்ஸ்ரீகிருஷ்ணா 🙏. படங்கள், பாடல்கள் அழகு, அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிக மகிழ்ச்சியும் நன்றிகளும் கமலா அக்கா

      Delete