இன்று ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)
இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம்.
பெரியாழ்வார் என்ற பெயர் எதனால் வந்தது என்று பலருக்கு தெரிந்திருக்கும்.
‘பொங்கும் பரிவாலே’ வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேசரத்தின மாலையில் குறிப்பிடுகிறார்.
மற்ற ஆழ்வார்கள் பெருமாளுக்கு மங்ளாசாசனம் ( பல்லாண்டு பாடுவது ) செய்தாலும், பெரியாழ்வார் போல அவர்கள் செய்யவில்லை.
பெருமாளிடம் கோபித்துக்கொண்டார்கள், என்ன வேண்டுமோ அதைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் பெருமாளுக்கு ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்று எண்ணி அவருக்குப் பல்லாண்டு பாடியதால் இவர் பெரியாழ்வார் ஆனார்.
ஸ்ரீவேதாந்த தேசிகன் கோதா ஸ்துதியில் பெரியாழ்வார் என்ற பெயர் ஏன் வந்தது என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் கொடுக்கிறார். ஆண்டாள் திருமுடியில் சூடிக் கொடுத்து அதனால் மணம் பெற்ற மாலையைக் களைந்து அதை அதை எம்பெருமானுக்கு விட்டு சித்தர் மூலமாக ஸ்மர்பித்தாள். இதனால் மனம் உகந்து விட்டுசித்தரைப் மெச்சி ‘பெரியாழ்வார்’ என்ற திருநாமத்தை தந்தான் என்கிறார்.
நல்ல செய்தி சொல்லுபவருக்கு அரசன் உடனே தன் முத்து மாலையைக் கழட்டி கொடுப்பதில்லையா ? அது போல தான். சாதாரண செய்திக்கே முத்து மாலை என்றால் ஆண்டாளின் மாலைக்கு ? அதனால் தான் பெரியாழ்வார்
ஆழ்வார் வாழி திருநாமம்!
நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனில் சோதி வந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும் தம் அப்பன் வாழியே
செல்வ நம்பிதனைப் போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே
பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்
பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையில் முதல் ஆயிரத்தில் முதன்மையாக வைக்கப்பட்டுள்ளன.
இதில் பெரியாழ்வார் திருமொழியில் ஆழ்வார் யசோதை பாவனையில் ஸ்ரீ கண்ணபிரானின் குழந்தைப் பருவ வைபவங்களைப் பாடிய பாசுரங்கள் தனித்துவமாக விளங்குகின்றன.
இவை தமிழ் இலக்கியத்தில் "பிள்ளைத் தமிழ்" என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தவை.
தமிழ் இலக்கியத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் உள்ளன.
அவற்றுக்கு எல்லாம் ஆதி பிள்ளைத்தமிழ் காவியமாகவும், சிகரம் வைத்தாற் போலப் பிரகாசிப்பதும் பெரியாழ்வார் பாடிய கண்ணன் பிள்ளைத்தமிழ் ஆகும்.
பெரியாழ்வார் திருமொழி
முதற் பத்து
முதல் திருமாெழி
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண்தோள்
மணிவண்ணா! உன் சேவடி
செவ்வி திருக்காப்பு..
#நாலாயிரம் 01/4000
மல்லர்களை வென்றவனே!
பராக்கிரமம் மிக்க தோள்களை உடையவனே!
நீலமணி போன்ற நிறமுள்ளவனே!
பல்லாயிரம் ஆண்டுகளிலும்..
எண்ணிக்கையில் அடங்காத
இலட்சம்.. கோடி.. என
எண்ணவும் முடியாத
பல கோடி ஆண்டுகளிலும்..
நினது சிவந்த திருவடிகளின் ஈடில்லா பேரழகுக்கு..
நிறைவான பாதுகாப்பு
என்றும் நிலைத்திருக்கட்டும்..
2
அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்
பாஞ்சசன்னியமும் பல்லாண்டே..
#நாலாயிரம் 02/4000
உன் அடியார்களான எமக்கும்.. எம்பெருமானான உமக்கும்..
என்றும் பிரிவு வராமல்..
பல்லாயிரம் ஆண்டுகள்.. நாம்
இணைந்திருக்க வேண்டும்..
நின் திருமார்பின்
வலப் பக்கத்தி்ல் உறையும் மகாலட்சுமி ஆனவள்..
உனக்கு மங்கலத்தை அள்ளி வழங்கியபடி..
உன் திருமார்பில்..
பல்லாயிரம் ஆண்டுகள்
வீற்றிருக்க வேண்டும்..
நின் வலக்கரத்தில்..
ஔியை உமிழ்ந்தபடி வீற்றிருக்கும் சுதர்சனமும்..
போர்க் காலத்திலே முழங்கும் சங்கான பாஞ்சசன்யமும்..
எப்போதும் மங்கலம் உள்ளவையாய்
உன்னுடன் இருத்தல் வேண்டும்..
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே!
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்
16
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்
20
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
அன்புடன்
அனுபிரேம் 💛💛
🙏Good ஆழ்வார் வைபவம் மிக நன்று
ReplyDelete